RSS

சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை
சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை
நிலா வானம் கடல்தீரம்
வெற்றுத்தாள்களில் மந்திரம்
உச் கொட்டும் கதவுகள்
அலமாரியில் உறங்கும் நினைவுகள்
யாருக்காக இதெல்லாம்
வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளலாகாது
என்கிறான் ஸ்டீஃபன் ஹாகிங்க்ஸ்
முன்னாள் காதலிகளோடும் என்கிறான் தனபால்
தனபால் பொய் சொல்வதரிது
தனபால் காதலில் தோற்றவன்
மீண்டும் மீண்டும் தோற்றவன்
தோற்றவன் சொல்லுக்கு மதிப்பதிகம்
தோற்றுப்போன காதல்களே கவனிக்கப்படுகின்றன
காதல்கள் தெய்வீகமானவை
தெய்வீகமானவை அனைத்தும் பொய்கள்
பொய்களால் காதல் உருவாகிறது
உலகம் உருண்டை என்பது விஞ்ஞானம்
விஞ்ஞானம் விளக்கம் கேட்டு நிற்கிறது
விளக்கங்கள் சொற்களாலானது
சொற்கள் இடம் மாறுகின்றன
இடம் மாறுதல் இயற்கை
இயற்கை புதிரானது
எல்லாப் புதிர்களுக்கும் விடைகளுண்டு
விடையில்லாப் புதிருக்கு வாழ்க்கை எனப் பெயர்
எனினும் சகவாசியே!
சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை
*************************************************************************************

வ குவார்ட்டர் கட்டிங் - போதை மிஸ்ஸிங்ஒரு சாதுவான ஆட்டொ டிரைவர் கொஞ்ச வருஷத்துக்கு முன்னால பம்பாய்ல தாதாவா இருந்திருந்தா என்னாவும் ? - பாட்ஷா!

ஒரு டி.வி. ரிப்போர்ட்டர் ஒரே ஒரு நாள் முதல்வரானா என்னாவும்?- முதல்வன் !

ஒரு சரக்கு பிரியனுக்கு சரக்கடிக்கணும்னு தோணும்போது சரக்குக் கிடைக்கலைன்னா என்னாகும் ?- வ குவார்ட்டர் கட்டிங்.

இந்த ஒன் லைனெல்லாம் கேட்க நல்லாதான் இருக்கு. ஆனா மேட்டர் இல்லையே ராஜா!

கோயமுத்தூர்ல இருந்து மறு நாள் துபாய் ஃபிளைட் பிடிக்க சென்னைக்கு வர்ற ஷிவா ஒரு குவார்ட்டர் கட்டிங் சாப்பிடனும்னு ஆசைப்படறார். மாட்டு டாகடரான தன் வருங்கால மச்சான் எஸ்.பி.சரணோட சென்னை முழுக்க சுத்தறார். தேர்தல் நேராம்ங்கறதால எங்கயுமே சரக்கு கிடைக்க மாட்டேங்குது. அங்க இங்கன்னு எங்க அலைஞ்சாலும் கைக்கு எட்டறது வாய்க்கு எட்டாத கதையா எப்படியோ குவார்ட்டர் கட்டிங் தட்டிப் போயிடுது. கடைசில வில்லனோட சீட்டாடி ஜெயிச்சா சரக்கு கிடைக்கும்னு தெரிஞ்சு ....ஆவ்....போதுங்க ....இதுக்கு மேல சொல்றதுக்கு ஒன்னும் இல்லை. ஏதோ கொஞ்ச நேரம் எண்டெர்டெய்ன்மென்டா இருக்கும்னு படத்துக்குப் போனா கொன்னு குரல்வளையை கடிக்கறானுங்க.

இதுக்கு நடுவுல ஹீரோயின் மேடம் வேற. அச்சு அசல் தமிழ் சினிமா லூசு. வில்லன் என்ன பேசறார்னு அவருக்கே புரியுதோ என்னவோ! ஜி.வி.பிரகாஷ் இசை..ஆயிரத்தில் ஒருவனில் இருந்து காதை கிழிச்சுக்கிட்டே இருக்கான் மனுஷன். இனிமே ஜி.வி. ம்யூசிக்னா கால் கிலோ பஞ்சை கையோட எடுத்துட்டு போறது உத்தமம். ஓரம் போ படத்துல இருந்த ஜாலி இதுல மருந்துக்குக் கூட இல்லை. இரண்டாவது பாதில ஒன்னு ரெண்டு காமெடி இருந்ததாம்..(அப்டின்னா தூங்கிட்டோம் பாஸ்). எஸ்.பி.சரண் மட்டும் கொஞ்சம் பரவாயில்லை.ட்ரெய்லர் மட்டும் பார்த்துப் படம் போகக்கூடாதுன்னு புரிய வச்ச இன்னொரு படம்.

வ குவார்ட்டர் கட்டிங் - அடிச்ச போதையெல்லாம் இறங்கிடும்!

தென்மேற்குப் பருவக்காற்று - Debutant's Breeze!


கொட்டிக்  கிடக்கும் நகரத்து இசைக்கு மத்தியில் எப்பொழுதாவது ஒரு ஆசுவாசம் கிடைக்கும். அநேகமாக அது இளையராஜாவிடமிருந்து கிடைக்கும்.ஆனால் ரஹ்நந்தன் எனும் புது இசை அமைப்பாளரிடமிருந்து ஒரு இளைப்பாறல் கிடைக்குமென எதிர்பார்த்திருக்கவில்லை. பருத்திவீரனில் வரும் " என் உசுருக்குள்ளே..." என ஸ்ரேயா கோஷல் இழுக்கும்போது கொஞ்சம் வெயிலில் பாதாம்கீர் சாப்பிட்டது போல் இருக்குமே...கிட்டத்தட்ட அதே போல ஒரு அனுபவம் தென்மேற்கு பருவக்காற்று பாடல்களைக் கேட்ட பொழுது. இந்தப் படத்தின் விளம்பர ஸ்டில்களைப் பார்த்தபோது ரியாலிட்டி எனும் பெயரில் நம்மை கழுத்தறுக்கப் போகும் இன்னொரு படம் என்றுதான் முடிவு கட்டியிருந்தேன். ஆனால் இந்தப் பட பாடல்களைக் கேட்டபின் வேறு மாதிரியோ என யோசிக்க வைக்கிறது.
சமீப காலமாக கிராமத்துப் படம் என்றாலே...குத்துப் பாட்டும் , திருவிழாக் கரகாட்டப் பாட்டும் தான் என்கிற மாதிரி ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால் அதை மீறி கொஞ்சம் மெலோடியஸாகவும், கொஞ்சம் வெரைட்டியாகவும் அமைந்திருக்கும் ஆல்பம் எனக் கூறலாம்.

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே - விஜய் பிரகாஷ் பாடியிருக்கும் பாடல். முதல் முறை கேட்கும்போதே லயிக்கவைக்கும் ட்யூனும் குரலும். நேற்றிலிருந்து என்னுடைய ஃபேவரைட். வரிகளும் பிரமாதம். இதே பாடலை உன்னிமேனனும் பாடியிருக்கிறார், சோகமாக , ரஹ்மானுக்குப் பாடுவது போல் உருக்கமாக.

 சின்னாங் சின்னாங் காட்டுல - டிபிகல் ஷங்கர் மகாதேவன் பாடல். ரிதம் படத்தில் வரும் தனியே தன்னந்தனியே பாடலுடன் நிறைய ஒத்துப் போகிறது, சத்தங்கள் உட்பட.

கள்ளி கள்ளிச்செடி - ஸ்வேதா மோகன் பாடியிருக்கிறார். அருமையான மெலடி. ஹிட் ஆக நிறய வாய்ப்பிக்கிறது.இதே ட்யூனில் ஹரிணி பாடியிருக்கும் ஆத்தா அடிக்கையிலே குறும்பாடலும் கேட்க சுவாரஸ்யம்.

நன்மைக்கும் தீமைக்கும்- இந்தப் பாடலின் ஆரம்பம் பன்னீர் புஷ்பங்களில் வரும் கோடைகால காற்றே வை நினைவு படுத்துகிறது. ஆனாலும் விஜய் பிரகாஷ் பாடும் பாடல்களில் எல்லாம் அவர் குரல் தனித்துத் தெரிகிறது. பிரகாசமான எதிர்காலம்!!!

ஏடி கள்ளச்சி - ஸ்ரேயா கோஷலுடன் விஜய் பிரகாஷ் பாடியிருக்கும் டூயட். எண்பதுகளில் வந்த இளையராஜா பாடலின் தரத்தை  நெருங்கியிருக்கிறது.

ரஹ்நந்தன் போல ஒரு புதிய இசை அமைப்பாளரிடமிருந்து இத்தகைய பாடல்கள் வருவது அபூர்வம். குத்துப் பாடல்களையும் இரைச்சல் வாத்தியங்களையும் நம்பாமல் ரசனயான பாடல்கள் தருவதென்பது என்னைக் கேட்டால் கொஞ்சம் அதிசயம் தான். இந்தப் பாடல்கள் படத்துக்குப் பொருந்திப் போகுமா என்பது தெரியாது. எதிர்பார்ப்புகள் அதிகமில்லையாதலால் ஹிட் அடிப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம். கள்ளிக்காட்டு கதைக்கு வரிகள் கொடுக்க வைரமுத்து பொருத்தமான தேர்வு.ஆனால் கிராமியப் படங்களுக்கு இதைவிட பிரபலமான பாடல்கள் வைரமுத்து எழுதியிருக்கிறார் என்பதால், விசேஷம் ஒன்றும் இல்லை. அரிவாளைத் தூக்கிக்கொண்டு அலம்பல் பண்ணாமல் உணர்வுப்பூர்வமாக கதை சொன்னால் டைரக்டருக்கு புண்ணியமாகப் போகும்.

தென்மேற்கு பருவக்காற்று - கடலோர கவிதைகள், கருத்தம்மா வரிசையில் இல்லையெனினும்  More than what can be expected from a debutant! 

****************************************************************************************************************************
போனஸ் :

வெளிவராத மிஷ்கினின் நந்தலாலா படத்தில் யேசுதாஸ் இளையராஜா கூட்டணியின்  மயங்க வைக்கும் பாடல்!

 
*******************************************************************************************************************************

எந்திரன் - ஹைடெக் பிரியாணிஉங்களுக்கு ரஜினி ஸ்டைல் பிடிக்குமா? அதுவும் வில்லத்தனம் செய்யும் ரஜினியின் ஸ்டைல்கள்.அப்படியென்றால் உங்களுக்கும் எந்திரன் பிடிக்கும்.அதிகமில்லை ஜென்டில்மேன் படத்தில் எண்பது சதவீதம் ரஜினி.பத்து சதவீதம் ஐஸ்.மீதி பத்து சதவீதமும் ரஜினி தான். 

ஹோம் தியேட்டரைத் தவிர அநேகமாக தமிழ்நாட்டின் எல்லாத் தியேட்டர்களிலும் ரிலீஸான படம், ரஜினி படம், இதெல்லாத்தையும் விட படம் பார்த்தவர்கள்  பார்க்காதவர்களை துக்கம் விசாரிக்கும் கொடுமையைத் தவிர்ப்பதற்காகவாவது எந்திரன் டிக்கெட் கிடைக்காதா என்று ஏங்க வைத்துவிட்டார்கள்.

தமிழ் சினிமாவுக்கு ஒரு சாபக்கேடு உள்ளது. சயின்ஸ் ஃபிக்ஷனே எடுத்தாலும் ஐந்து பாடல்கள் வைக்கவேண்டும். ரோபோவாகவே இருந்தாலும் வில்லன்களிடம் சிக்கிகொண்ட கதாநாயகியின் அபலக்குரல் கேட்கும் போது ஓடி வந்து காப்பாற்ற வேண்டும்.கோர்ட்டில் நீதிபதிகளுக்கு உண்மை தெரிந்தவுடன் ஹீரோவுக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்லிவிட வேண்டும்.அதுவும் ஷங்கர் படமென்றால் கிளைமாக்ஸுக்கு கொஞ்சம் முன்னதாக மெகா க்ராஃபிக்ஸில் குரூப் டான்ஸ் ஆடியே தீர வேண்டும்.இந்த அபத்தமான விதிகளுக்கு எந்திரனும் தப்பவில்லை.சொல்லப்போனால் ஷங்கர் படமென்றால் பொதுமக்களிடம் ஹீரோ நல்லவனா கெட்டவனா என்று மீடியா மைக்கை நீட்டிக் கேட்டுக் கொண்டே அலைவார்கள். இதிலும் ரோபோவை அரெஸ்ட் செய்து அந்த மாதிரியெல்லாம் இம்சை பண்ணுவார்கள் என நினைத்திருந்தேன். நல்ல வேளை அப்படி எதுவும் இல்லை.

ஒரு ரோபோ.அதை உருவாக்கிய விஞ்ஞானி வசீகரன்.அவருடைய காதலி சனா. இவர்களைச் சுற்றித்தான் மூன்று மணி நேரமும் நகர்கிறது. ஆனால் அலுக்கவில்லை.எல்லா கலைகளும் கற்பிக்கப்பட்ட (அ) ப்ரோகிராம் செய்யப்பட்ட ஆக்க சக்திக்காக ரோபோவை (சிட்டி) உருவாக்கும் விஞ்ஞானிக்கு அவரது புரஃபஸரே வில்லன் ரூபத்தில் வருகிறார்.சகல வல்லமை படைத்த ரோபோவை உணர்ச்சிகள் இல்லாததால் ஆபத்தானது என்று கூறி பயன்பாட்டுக்கு லாயக்கற்றது என அனுமதி தர மறுத்து விடுகிறார். ஆனால் உள்ளூர சிட்டியின் நியூரல் ஸ்கீம் ஃபார்முலாவை அடைந்து விட விரும்புகிறார். இதனிடையில் வசீகரன் சிட்டிக்கு உணர்ச்சிகள் கற்றுக் கொடுக்க ரோபோ சனாவை விரும்ப ஆரம்பிக்கிறது. காதல் ஜோரில் தன்னிஷ்டப்படி நடந்து கொண்டு சனாவை கவர நினைக்கிறது. எதற்கு வம்பென்று ரோபோவை செயலிழக்க வைத்து குப்பையில் போட்டு விடுகிறார் வசீகரன். இது தான் சமயமென்று ப்ரொஃபஸர் போரா ரோபோவை குப்பையில் இருந்து எடுத்து வந்து அழிவு வேலைகள் செய்யும் 'சிப்'பை பொருத்திவிடுகிறார். ரோபோ அட்டகாசம் செய்து போராவையும் கொன்று சனாவையும் கடத்தி பின் என்னவாகிறது என்பதை பெரிய ஸ்க்ரீனில் பார்த்துக் கொள்ளவும். சமர்த்தான ரோபோவை விட வில்லன் ரோபோவாக நொறுக்கி எடுத்திருக்கிறார் ரஜினி. அதுவும் ஐஸ்வர்யாவை மிரட்டும் இடங்களிலும், விஞ்ஞானி ரஜினியை கலாய்க்கும் போதும் ரசிகர்களுக்கு சரவெடி. யாரையாவது வெறுப்பேற்றுவதற்கு,  லகலக போல் இனி" மேமேமே..." தான்.குறிப்பாக வில்லன் ரோபோவின் சிரிப்பும் நடையும் , சான்ஸே இல்லை.நல்ல தியேட்டரில் அனுபவியுங்கள்.

கொஞ்ச நாள் கழித்து ஜில்லென்று ஐஷு மாதா. ராவணனில் ஆண்ட்டி மாதிரி இருந்த ஐஷு இதில் நிஜமாகவே ஐஸ்கிரீம்.பாடல்களுக்கு மட்டும் இல்லாமல் படம் முழுக்க வருகிறார். 

சுஜாதாவின் "ஆகாயம்" என்கிற ரேடியோ நாடகத்தில் கொஞ்சம், என் இனிய இயந்திரா , மீண்டும் ஜீனோவில் கொஞ்சம் , ராபின் வில்லியம்ஸின் Bicentennial Man ல் கொஞ்சம் என அள்ளி எடுத்து தமிழ் மசாலா கொஞ்சம் சேர்த்து ரஜினி என்னும் மேஜிக் உப்பை சேர்த்தால் ஷங்கரின் எந்திரன் தயார். ரோபோவை வைத்து என்ன கதை சொன்னாலும் மேற்கூறிய கதைகளின் சாயல் இல்லாமல் எடுக்க முடியாது என்பது வேறு விஷயம். ஃபேன்டசி என்கிற பெயரில் நம்ப முடியாத அளவுக்கு ஸ்டண்ட் காட்சிகள் வைப்பதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை. தொப் தொப்பென்று ஆட்கள் செத்து விழுவதை பார்க்கையில்  சமயத்தில் வீடியோ கேம் பார்ப்பது போல இருக்கிறது.முதல் பாதியில் வரும் சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். சந்தானமும் கருணாஸூம் இருக்கிறார்கள்.அவ்வளவே. மொத்தத்தில் ரஜினி ஜெயித்திருக்கிறார்.அதனால் ஷங்கரும் ஜெயித்திருக்கிறார்.அதனாலேயே சன் பிக்சர்ஸும் ஜெயித்திருக்கிறது. 

பன்ச் டயலாக் இல்லாமல், வழக்கமான ஷங்கர் க்ளிஷேக்கள் இல்லாமல் ஒரு வித்தியாசமான Genre   தொட்டிருப்பதால் எந்த லாஜிக்கும் பார்க்கத் தோன்றவில்லை.ரஜினி படத்தில் லாஜிக்கா? ரஜினிக்குக் கதையே தேவையில்லை.அப்புறம் என்ன லாஜிக்.ரஜினி படத்தை முதல் நாள் பார்க்கிற ஜாலி போதாதா?

என்னை டெலிவிஷனாக மாற்றி விடு!
சமீபத்தில் ஜிமெயிலில் உலாத்திக் கொண்டிருக்கும் இதை உங்களில் பலர் இதைப் படித்திருக்கக்கூடும். நிச்சயம் உளவியல் ஆரோக்கியத்தை சிக்கலாக்கும் வாழ்க்கை முறையை கேள்விக்குள்ளாக்காத பட்சத்தில் ஏதோ ஒட்டு மொத்த சமூகமே தன் நிறத்தை இழப்பது போல் தோன்றுகிறது.
கதை இது தான்!

அது ஒரு ஆரம்ப பாட சாலை. ஆசிரியை "கடவுள் உங்கள் முன் தோன்றி வரம் வேண்டுமென்றால் என்ன கேட்பீர்கள் " எனும் தலைப்பில் கட்டுரை எழுதி வருமாறு கூறுகிறாள். வீட்டில் மறு நாள் மாணவர்கள் கொண்டு வந்த எல்லாக்கட்டுரைகளையும் திருத்தும்போது ஒரு கட்டுரையை மட்டும் படித்து அழ ஆரம்பிக்கிறாள். அப்பொழுது வீட்டுக்குள் நுழையும் கணவன் என்ன விஷயம் , ஏன் உன் கண்ணெல்லாம் கலங்கியிருக்கிறது எனக் கேட்கிறான். அதற்கு ஒரு மாணவன் எழுதிய கட்டுரையை வாசிக்கத் தருகிறாள் அந்த ஆசிரியை.

"என்னை டெலிவிஷனாக மாற்றி விடு" எனு தலைப்பில் உள்ள கட்டுரை இவ்வாறு செல்கிறது.

"கடவுளே தயவு செய்து என்னை டெலிவிஷனாக மாற்றி விடு.எங்கள் குடும்பத்தில் டெலிவிஷனுக்குக் காட்டும் ப்ரியம் எனக்குக் கிடைக்க வேண்டும். எப்பொழுதும் என் குடும்பத்தின் சந்தோஷம் என்னை சுற்றியே இருக்க வேண்டும். நான் பேசும்போது அலட்சியப் படுத்தாமல் என் பேச்சைக் கேட்க வேண்டும். எந்தத் தடங்கலும் குறுக்கீடும் இல்லாமல் நானே டெலிவிஷனைப் போன்று குடும்பத்தின் சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாக இருக்க வேண்டும்.
எவ்வளவு டயர்டாக லேட்டாக என் அப்பா வந்தாலும் அவருடைய கண்கள் முதல் ஆளாக என்னைத் தேட வேண்டும். என் அம்மா ஓய்வு நேரங்களின் போதும் டென்ஷனாக இருக்கும்போதும் நான் எங்கே என்று தேட வேண்டும். என் அண்ணனும் தம்பியும் என் கூடவே இருக்கப் பிரியப்பட வேண்டும். என்னோடு நேரம் செலவழிப்பதற்காக என் குடும்பம் மற்ற எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். நான் எவ்வளவு முட்டாள்தனமாக பேசினாலும் புத்திசாலித்தனமாகப் பேசினாலும் என்னை அவர்கள் ரசிக்க வேண்டும்.

உன்னிடம் நான் அதிகமாக எதுவும் கேட்கப் போவதில்லை. எங்கள் வீட்டு டி.வி. போல் வாழவேண்டும்.அதனால் என்னை எங்கள் வீட்டு டெலிவிஷனாக மாற்றி விடு கடவுளே!"
இதைப் படைத்த ஆசிரியையின் கணவன் "சே! என்ன குடும்பம் அது. பாவம் அந்த பையன்."என்றான். இதைக் கேட்டதும் ஆசிரியையின் அழுகை அதிகமானது.

"ஏன் மேற்கொண்டு அழுகிறாய்? நாளைக்கு அந்தப் பெற்றோர்களைக் கூப்பிட்டு அட்வைஸ் பண்ணி அனுப்பு!" என்றான் கணவன்.

ஆசிரியை கண்களைத் துடைத்துக் கொண்டே "இதை எழுதுனது நம்ம பையன் தான்" என்றாள்.

இந்தக் கதை சொல்லும் சேதி நிறைய.ஆனால் முக்கியமானது , நாம் உரையாடல் என்கிற பதத்தின் அர்த்தத்தை, அது தருகிற சந்தோஷத்தை மறந்து வருகிறோம். இன்று ஒவ்வொரு பெட்ரூமிலும் ஒரு டி.வி என்பது கூட சகஜமாகிவிட்டது. நிச்சயமாக டி.வியால் நன்மைகள் இல்லாமல் இல்லை.ஆனால் அது எவ்வாறு நம் நேரத்தை முழுங்குகிறது என்பதை அறியக் கூட மனமில்லாமல் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.

தொழில்நுட்ப யுகத்தில் நிராயுத பாணிகளான நம்மை தகவல்கள் எனும் ஆயுதத்தால் ஊடகங்கள் நம்மை தாக்கிக்கொண்டே இருக்கும்.நாம் அதை தவிர்க்க இயலாது.ஓய்வு நேரம் என நமக்குக் கிடைக்கும் சொற்ப நேரத்தை எவ்வாறு கழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு விடை காண்பது மிகவும் முக்கியம். ஜனங்களின் ரசனைக்கேற்ப ஒவ்வொரு விதமான சானல்கள் என மீடியா எனும் பல்லி டைனோசராக மாறி வெகு நாட்களாகிறது. பெருநகரங்களில் தொடங்கும் எந்த கலாசார சீர்கேடும் சிறுநகரங்களுக்கும் கிராமங்களுக்கும் அசுர வேகத்தில் பரவுவது இன்றைய தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியமான சாபக்கேடு.அதைவிட அபாயமானது புத்தக வாசிப்பு என்கிற பழக்கத்தை மெல்ல மறக்கடிப்பது தான்.

மொட்டை மாடியில் அமர்ந்து ஒன்றாக சாப்பிடுவதோ , கடற்கரையில் அமர்ந்து குடும்பக் கதைகள் பேசுவதோ இன்று ரொம்பவும் அபூர்வம். அதிலும் குழந்தைகளுக்குக் கதை சொல்லுவதென்பதோ, தாலாட்டுப் பாடுவதோ இப்பொழுதெல்லாம் காணக்கிடைக்காத அதிசயங்கள். நாமும் நுகர்பொருளாக மாறிய பின், நம் அடுத்த தலைமுறையை சந்தைக்கு ஏற்ப சிறந்த பிராண்டுகளாக மாற்ற பெரும் சிரத்தை எடுத்துக் கொள்கிறோம்.அதிலும் "Emotional Crowd" என  தமிழர்களை அந்நியர்கள் பிரயோகிக்கும் பதத்தை மெய்ப்பிக்கும் விதமாக குடும்பத்துள் ரியலாக சந்தோஷப் படுவதையும் சின்ன சின்ன சண்டைகள் போடுவதையும் விட்டு விட்டு அதே வாழ்க்கையை டி.வி யுடன் வாழப் பழகி விட்டோம்.

இங்கு பிரச்சினை டி.வி.யில் என்ன காண்பிக்கப்படுகிறது என்பதல்ல.எல்லோருக்கும் பிடித்தமான ஆயிரம் நிகழ்ச்சிகள் பஃபே விருந்தைப் போல அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.ஆனால் விருந்து உங்களை எவ்வளவு நேரம் சாப்பிடுகிறது என்பது தான் உண்மையான பிரச்சினை.
சரி! உங்களுக்கு குடும்பத்துடன் கடைசியாக ஒன்றாக அமர்ந்து எந்த வித குறுக்கீடுகளும் இல்லாமல் வெறும் குடும்பக் கதைகள் பேசி டின்னர் சாப்பிட்டது எப்போது என்று நினைவிருக்கிறதா?
************************************************************************************

ஆபரேஷன் எயிட்' ஓ கிளாக்


பார்லிமெண்ட்டில் அந்த பெண் அமைச்சர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உட்கார்ந்திருந்தது அவர்களுக்கு பயங்கர எரிச்சலாக இருந்தது. தூர்தர்ஷனின் லோக் சபா சேனலில் அடுத்த வருஷம் நடக்கப்போகும் அமைச்சரினியின் மாநில சட்டசபை தேர்தலைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தது அவர்கள் எரிச்சலை இன்னும் அதிகப்படுத்தியது.

"நான் சொல்லலை சகா...இந்தம்மாவுக்கு சட்டசபை தேர்தல் தான் முக்கியம். எண்பத்தியாறு போலீஸ்காரனுங்க செத்தது பத்திக் கூட ஒரு கவலையும் இல்லாம உக்காந்திருக்குது.இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் சும்மா விடக் கூடாது. ஆபரேஷனை சரியான சமயத்துல நடத்திக் காட்டணும்.இல்லைன்னா ஊருக்கே போக முடியாது. அவ்வளவு கேவலப்படுத்திருவானுங்க.!"

ரவி சொல்லி முடித்தபோது தேவன் டி.வியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். தேவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள். ஏன் நம் தேசம் மட்டும் இப்படி இருக்கிறது? எங்கு பார்த்தாலும் கமிஷன்.கொஞ்சமாக சில்லறை புரட்டுபவனை அடித்துத் துவைத்து அதே நேரத்தில் ஆயிரம் கோடி ரெண்டாயிரம் கோடி என்று கொள்ளை அடிப்பவனை ஏ கிளாஸில் அடைத்து சல்யூட் அடிக்கும் போலீஸ். தேர்தலின் போது கூச்சமே பார்க்காமல் காசை வாங்கிப் போட்டுக் கொண்டு அடுத்த வேலையை பார்க்கத் துடிக்கும் ஜனங்கள். இதெற்கெல்லாம் விடிவே கிடையாதா?

முதலில் இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்துக் காட்ட வேண்டும். அது தான் முக்கியம். தன் மக்களிடம் தங்களை முழுவதுமாக கொண்டு சேர்க்கப் போகும் செயல் திட்டம்.

இந்த ஆபரேஷனுக்கு என்ன பேரு வச்சிருக்கீங்க சகா?" -ரவி

"ஆபரேஷன் எயிட்' ஓ கிளாக். சரியா பத்து நிமிஷத்துக்குள்ள எல்லாம் முடியணும். இல்லைன்னா பேஜார் ஆயிடும். உங்களோட உதவியும் தேவைப்படும். ஃபோன் ரீசார்ஜ் பண்ணிட்டீங்க இல்ல...?

" எல்லாம் பெர்ஃபெக்ட் சகா! சரியா எட்டு மணிக்கு நான் மிஷினை ஆன் பண்ணிடனும். உடனே எனக்கு பாஸ்வேர்ட் குடுத்துடுவீங்க இல்ல..!"

"நிச்சயமா! நாம செய்யப் போற இந்த காரியம் நிறைய பேர் வயித்தெரிச்சலைக் கொட்டணும். எப்படி இவங்களால முடிஞ்சதுன்னு தன்லையை பிச்சிக்கணும்.நல்லவங்களை ஆண்டவன் கை விட மாட்டார் ரவி!"

"அதே தான் சகா! போன தடவை மாதிரி சொதப்பிடக் கூடாது. கடைசி நேரத்துல அந்த லாரி டிரைவர் மட்டும் ஹெல்ப் பண்ணலைன்னா....என்னால யோசிச்சுப் பார்க்கவே முடியலை சகா!

"விட்டுத் தள்ளுங்க...நாளைய பொழுது நமக்கானது. என்னோட கவலையெல்லாம் பொது மக்களைப் பத்திதான். எத்தனை நாளைக்கு இந்த மாதிரியான கஷ்டங்கள்? இந்த அரசாங்கம் சிந்திக்கவே செய்யாதா?

தொலைக் காட்சியில் இப்பொழுது அந்த பெண் அமைச்சர் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்தார்.ரவியும் சகாதேவனும் டி.வியை பார்த்த படியே நகைத்தனர்.

"என்ன ஆவேசம்? இநத நடிப்பை பார்த்துதான் சகா மக்கள் ஏமாந்து போறாங்க!"

"ஹூம்! நமக்கு இந்த பொது ஜனங்களும் முக்கியமில்லை. அரசாங்கமும் முக்கியமில்லை! நம்ம லட்சியம் தான் முக்கியம் ரவி.சரி அப்போ நாளைக்கு காலைல எட்டு மணிக்கு...ஓகே!"

"ஒகே சகா!"

இவ்வளவு பெரிய காரியத்தை கம்ப்யூட்டரிலேயே முடிக்கப் போவதின் சந்தோஷத்தில் ரவிக்கு தலை கால் புரியவில்லை. தன் அப்பா தாத்தா பட்ட கஷ்டமெல்லாம் கண் முன் நிழலாடியது. தாத்தா மட்டும் உயிரோடு இருந்திருந்தாரென்றால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்?

**********************************************************************************************************************************

மறு நாள் காலை மணி ஏழு ஐம்பது.

"சகா நான் மிஷின் ஆன் பண்ணிட்டேன். !"

"ரொம்ப கவனம் ரவி. யு.பி.எஸ் ஆன் ல தானெ இருக்கு.நெட் கனெக்ஷன் செக் பண்ணிட்டீங்கள?"

"எவ்ரிதிங் ஆல்ரைட் சகா! இன்னும் சரியா எட்டு நிமிஷம் இருக்கு.

7.55
7.56
7.57
.
.
.

மணி எட்டு .

"வாட்ஸ் ஹேப்பனிங் சகா..? க்விக்! "

சகாதேவனுக்கு இதயத்துடிப்பு அதிகமானது.மீண்டும் மீண்டும் முயற்சித்தான்.பலனில்லை.

" ரவி...இங்க வொர்க் அவுட் ஆகலை. நீங்க கொஞ்சம் உடனே ட்ரை பண்ணுங்க. "

"பாஸ்வேர்ட் சொல்லுங்க சகா....! என்னால முடிஞ்சதை பண்றேன்."

பாஸ்வேர்ட் டைப் செய்வதற்குள் நிமிடங்கள் கரைய ஆரம்பித்தன.

மணி 8.06

8.07
.
.
8.09
.
.
8.09.55

எல்லாம் முடிந்து போனது. இன்னும் ரவி மற்றும் சகாதேவன் கண்களில் ஏமாற்றத்தின் மிச்சம் அகலவில்லை.

"எப்படி சகா....? எப்படி இது சாத்தியம்? எல்லாமே சரியாதானே இருந்தது. கரெக்டாதானே லாக் இன் பண்ணினோம். கரெக்டா தானே ட்ரை பண்ணினோம். அப்படியும்...."

ரவிக்கும் சகாதேவனுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.

"மான்யுவலா ஏதாச்சும் பண்ண முடியுமா? நேர்ல யாரையாவது அனுப்பிருந்தீங்களா?"-ரவி.

இல்லை ரவி. அதுக்கு டைம் இல்லை. அதுவுமில்லாம நேர்ல போயும் வேஸ்ட் தான். கொஞ்ச நேரத்தில் டி.வி போட்டு பார்க்கலாம்.என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்கலாம்.

இனிமேல் ஊருக்கு எப்படிப் போவது என்ற கவலையில் இருவரது முகமும் பரிதபாகரமாக வெளிறிப் போயிருந்தது.

சற்று நேரம் கழித்து ஒன்பது மணி செய்திகளில்

"தீபாவளிக்கு தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய பத்தே நிமிடங்களில் எல்லா ரயில்களிலும் எல்லா டிக்கெட்டுகளும் தீர்ந்துவிட்டன." என அந்த பெண்மனி வாசித்து முடித்தபோது இருவரின் கண்களிலும் நீர் தளும்பாத குறை.

ரவி பெருமூச்சுடன் "டி.வி பார்த்தீங்களா சகா!கொடுமை.அப்படியே ஒரு எட்டு கோயம்பேடு போய் ட்ரை பண்ணனும் சகா!" என்றான்.

அடுத்த படையெடுப்பு ஆரம்பமானது.

எந்திரன் - சூப்பர் சோனிக் பாடல்கள்தமிழ்நாட்டின் அடுத்த ஃபீவரின் டெம்பெரேச்சர் எகிற ஆரம்பித்திருக்கிறது.இன்றைக்கு மதியத்துக்குள் மட்டும் கூகிளில் ஐந்தரை மில்லியனுக்கும் அதிகமான தேடல்கள். வேறென்ன ...? எந்திரன் பாடல்கள் தான். புதிய இன்ஸ்ட்ருமென்ட்கள் , புதிய சத்தங்கள் என மீண்டும் ரஹ்மானிடம் இருந்து ஸ்பெஷல் ஆல்பம். "Neither a Shankar film, Nor a Rajini film " என விமர்சிக்கப்பட்ட சிவாஜியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பார்கள் போல. முழுக்க முழுக்க ஷங்கர் பட பாடல்களாகத் தான் தோன்றுகிறது.

புதிய மனிதா பூமிக்கு வா - ரஹ்மானுடன் எஸ்.பி.பி பாடியிருக்கும் பாடல். ரோபோவை உருவாக்கி வரவேற்கும் பாடல். ரஹ்மானின் குரலில் ஸ்லோவாக ஆரம்பித்து எஸ்.பி.பியின் குரலில் எகிறுகிறது. ரஹ்மானின் மகள் கதீஜாவும் இரண்டு வரிகள் பாடியிருக்கிறார் என்பது கூடுதல் விசேஷம். வழக்கமாக ரஜினியின் அறிமுகப் பாடலுக்கு எஸ்.பி.பி தரும் உற்சாகத்தை விட இரண்டு மடங்கு துள்ளலுடன் பாடியிருக்கிறார்.அதிலும் தாய் மொழியை தந்தை மொழியாக்கியது புதுமை.வைரமுத்து!

பூம் பூம் ரோபோ டா - நம்ம பழைய யோகி.பி உடன் ஸ்வேதா ,தன்வி மற்றும் கீர்த்தி சகதியா பாடியிருக்கிறார்கள். ரோபோவின் பெயர் சிட்டி எனத் தெரிகிறது.ஹீரோயிஸ பாடல்தான்.சிவாஜியின் தீ தீ பாடலின் வாசனை நிறைய.

அரிமா அரிமா- ஷங்கரின் டிபிகல் "முதல்வா முதல்வா ", மாயா மச்சீந்திரா டைப் பாடல். பாடல் கேட்கும் போதே அரச உடையோடு கிராஃபிக்ஸில் ஆயிரம் பேரோடு கனவில் டூயட் பாடுவார்கள் என தெரிகிறது. ஹரிஹரனும் சாதனா சர்கமும் கஷ்டப்பட்டு பாடியிருக்கிறார்கள்.

கிளிமஞ்சாரோ - ஜாவித் அலி ,சின்மயி கூட்டணி.உடனடியாக ஹிட் ஆகும் வாய்ப்புண்டு.முதல் முறை உங்களுக்கு கேட்கும்போது பாடல் வரிகள் புரிந்து விட்டால் நீங்கள் செம்மொழி ஆராய்ச்சித் தலைவராக முயற்சி செய்யலாம்.அவசர அவசரமாக பாடியிருக்கிறார்கள்.

இரும்பில் ஒரு இதயம் - ரஹ்மானுடன் காஷ் 'ன் க்ரிஸ்ஸி தமிழும் ஆங்கிலமும் கலந்து கலக்கியிருக்கும் பாடல். முதலில் எரிச்சலை தந்து, பின் தாளம் போட வைத்து விடுகிறது.இளமையான ரஹ்மானின் குரல் , வித்தியாசமான சத்தங்கள் என ஒரு Complete party song.

தீம் ம்யூசிக் - எலெக்ட்ரிக் ட்ரம்ஸ், வெஸ்டெர்ன் வயலின் , கர்நாடக தகிட தகிட என மிரட்டும் ஃப்யுஷன் இசை. ஆனால் ஏற்கெனவே கேட்டது போல் இருக்கிறது.

காதல் அணுக்கள்- ஆல்பத்தின் ஹைலைட். மெதுவாக ஸ்ட்ரிங்க்ஸில் ஆரம்பித்து அலட்சியமாக விஜய் பிரகாஷின் குரலிலும் பின்பு அட்டகாசமாக ஸ்ரேயா கோஷலிலின் குரலிலும் பாடல் நொறுக்கி எடுக்கிறது. பாடல் நெடுக வரும் ஸ்ட்ரிங்ஸும் பாடல் வரிகளும் மனதை அள்ளுகிறது.ரொம்பவும் அழகான பாடலுக்கு அற்புதமாக உயிர் கொடுத்திருக்கின்றனர் விஜய் பிரகாஷும் ஸ்ரேய கோஷலும்.

சிலிக்கன் சிங்கம், நியூட்ரான் எலெக்ட்ரான் உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை ?, சூப்பர் சோனிக் சூப்பர் ஸ்டார் என ரஜினிக்காக தேடித் தேடி வார்த்தைகளைப் பிடித்திருக்கிறார்கள்.

ஓபனிங் சாங் இம்சைகள் , ஏழையாக இருந்து பணக்காரனாகும் பாடல் என ரஜினிகாந்த் படக் கட்டுப்பாடுகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. அதே போல் ரோபோ என்பதற்காக பாடல்களை சின்தஸைஸர் குரல்களில் வெறுப்பேற்றாமல் எலெக்ட்ரிக் ட்ரம்ஸ், வித்தியாசமான பீட்டுகள் என எதிர்பார்ப்பை உணர்ந்து செய்திருக்கிறார்கள். அதனாலேயே எந்திரன் - A step ahead than satisfaction!
***********************************************************************************

டுபாகூர் ஜோசியம் - ரெட்டைவால்ஸ்


ஜோசியத்துல ஏகப்பட்ட வகை இருக்கு.இது என்ன வகைன்னு எனக்கே தெரியாது.கீழ கொடுத்திருக்கிற 10 கேள்விகளையும் பொறுமையா படிச்சுட்டு எதாவது பதிலை முதலில் டிக் பண்ணிட்டு முடிவுகளுக்குப் போங்க.. சினிமா டைட்டில் கார்டுல போடுவானுங்களே " இது உண்மை சம்பவம் இல்லை"னு ...அதை மாதிரி இது உண்மை ஜோசியம் இல்லை.

அ) தக்காளி என்பது
1. சாப்பிட உபயோகிக்கும் பொருள்
2. ஒரு பிரபலமான கெட்டவார்த்தைக்கு சப்ஸ்டிட்யூட்
3. எப்படியும் விலை ஏறும்.அதை வச்சு கலைஞரை திட்டலாம்

ஆ) இளைய தளபதி என்பவர்
1. பன்ச் டயலாக் பேசி நோகடிப்பவர்
2. தானை தலைவன், அடுத்த முதல்வர் ஃபிளாப் படங்களின் போது கூட)
3. கலாய்க்க உபயோகப்படும் இன்னொரு ஜென்மம்.

இ) பதிவுலகம் என்பது
1. திரையுலகம், பத்திரிக்கை உலகம் மாதிரி ஏதோ ஒரு எழவு
2. வருவோர் போவோரையெல்லாம் நக்கல் பண்ண ஒரு நல்ல இடம்
3. வீட்டில் மனைவியை திட்ட முடியாததால் மற்ற எல்லோரையும் திட்டுவதற்கு தோதான இடம்

ஈ) ஃபாலோயர்ஸ் என்பவர்கள்
1. ஒரு குறிப்பிட்ட தலைவரை , தத்துவத்தை பின் தொடர்பவர்கள்
2. கிறுக்குப் பயலுக...என்னத்த எழுதுனாலும் படிக்கிறவங்கே
3. பொண்டாட்டியையும் திட்ட முடியாமல், வெளியாட்களையும் திட்ட முடியாமல் இன்னொருத்தன் கலாய்ப்பதை வெறிகொண்டு ரசிப்பவர்கள்

உ) உதார் என்பது
1. வெத்து சவுண்டு
2. எவ்வளவு மிதி வாங்கினாலும் அலட்டிக்காம பண்ணுவது
3. எல்லாப் பதிவுலயும் பண்ணுவது

ஊ) திரை விமர்சனம் என்பது
1. பத்திரிக்கைகளில் வருவது
2. மொக்கை படத்துக்கு முதல் நாள் கைக்காசை அழிச்சு போயிட்டு வந்து படம் எடுத்தவனை வண்டி வண்டியா திட்டுவது.
3. படமே பார்க்காமல் அப்பப்போ செய்வது

எ) மாமனார் என்பவர்
1.மனைவியின் அப்பா
2.உலகத்துலயே மகா ஏமாளி.நம்மளை நம்பியும் பொன்னு கொடுத்த , கொடுக்கப்போற அப்பாவி
3. மாமான்னா ஏட்டைய்யா...மாமனார்னா , வயசான ஏட்டைய்யாவா?

ஏ)இத்தாலி ராணி எனப்படுபவர்
1. அப்படி யாரையும் தெரியாது
2. இத்தாலி ராஜாவுக்கு மொத பொண்டாட்டி...(ராஜாவோட செகண்ட் ,தேர்டு இவங்க ஃபோட்டொவெல்லாம் எந்த வெப்சைட்டுல கிடைக்கும்?)
3. காங்கிரஸ் தலைவர்.இலங்கை தமிழர் பிரச்சினைல இருந்து சிந்தாதிரிபேட்டை பிக்பாக்கெட் கேஸ் வரைக்கும் கலாய்க்க உபயோகப்படுபவர்

ஐ) சாரு நிவேதிதா என்பவர்
1. தன்னைத் தானே அடிக்கடி எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்பவர்.
2. யாரு சார் அந்த ஃபிகரு..? நம்பர் கிடைக்குமா?
3. அட நம்ம சாணி... மவனே வா நீ...உன்னை போட்டு தள்றேன் இருடி!

ஒ) தமிழன்.....?
1. நாட்டில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் நமீதாவுக்கு அடுத்து யார் என்று யோசிப்பவன்
2. விஜய் படம். வக்கீலா வருவாப்லயே..!கரெக்டா?
3. தன்னை தான் ஓட்டறான்னு தெரியாமலேயே கமெண்ட் ஏரியாவுல கூட சேர்ந்து கும்மி அடிப்பவன்.

முடிவுகள்:

அனைத்து கேள்விகளுக்கும் எண் 3 ஐ டிக் செய்தவர்களுக்கு :

நீங்கள் அநியாயத்துக்கு நல்லவர்கள்.கிழிந்திருந்தாலும் பட்டாபட்டியை மட்டுமே அணிந்து கொள்வீர்கள்.உங்கள் ராசிக்காரர்களுடன் அன்பாயிருப்பீர்கள்.நீங்கள் அமர்ந்தபடி பீடி குடிக்கும் ஸ்டைலிலேயே எதிர்கால சந்ததியினர் உங்களுக்கு சிலை வைக்க வாய்ப்புண்டு.நக்கீரனிலோ தட்ஸ்தமிழிலோ ஏதாவது செய்தி படித்தவுடன் ரட்சகன் நாகார்ஜுன் மாதிரி உங்களுக்கு நரம்பு புடைக்கும்.இந்த உலகத்தையே மாற்றவேண்டுமென்று துடிப்பீர்கள்.ஆனால் அது உங்களால் முடியாது என்று தெரிந்தவுடன் நொந்துபோவீர்கள்.அப்பாவி மக்கள் மீது ரொம்பவும் கரிசனாமயிருப்பீர்கள்.குறிப்பாக தமிழ் அப்பாவிகள் என்றால் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது.இன்னும் மன்னராட்சியில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எல்லாவற்றின் மேலும் வெறுப்பு வந்து ஓட்டலில் சர்வர் இட்லிக்கு தேங்காய் சட்னி ஊற்றினால் கூட அது கருணாநிதி குடும்பத்தின் அராஜகமாகத் தோன்றும் வாய்ப்பு இருக்கிறது.ஒரு நாள் கூட சும்மாயிருப்பது உங்களுக்குப் பிடிக்காது.அதற்கு தோதாக நித்தி , சாரு , ராமதாஸ் என உங்களுக்கு நூசு(?) கிடைத்துக் கொண்டே இருக்கும்.எதைப் பற்றியாவது கருத்து சொல்லவேண்டுமே என மனசு அடித்துக் கொள்ளும்.கமெண்ட் அடிப்பதில் நீங்கள் கில்லாடிகள்.ரெ,வெ என தொடங்கும் பெயர் கொண்ட ஆசாமிகளிடம் கவனமாக இருக்கவும்.அவர்கள் உங்கள் பட்டாபட்டியை உருவவும் வாய்ப்பிருப்பதால் நித்யானந்தாவின் ஸ்பெஷல் பூஜையில் கலந்து கொண்டு தோஷத்தை நீக்கவும்.
அதிர்ஷ்ட எண் : 1800-ங்கொய்யாலே
அதிர்ஷ்ட நிறம் : ஏதோ ஒரு கலர்.தெரிஞ்சு என்ன சாதிக்கப் போறீங்க?

எல்லாக் கேள்விகளுக்கும் எண் 2ஐ தேர்வு செய்தவர்களுக்கு :

ஜாலி பேர்வழியான நீங்கள் எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டிர்கள்.எந்த அளவுக்கு என்றால் எதாவது ஒரு ஃபிகரிடம் செருப்பாலேயே அடிவாங்கினால் கூட "ஹீல்ஸ் ரொம்ப ஹார்டா இருக்கும்மா...உன் கால் வலிக்கப்போகுது " என்று கொஞ்சும் அளவுக்கு மானமுள்ளவர்கள்.அழகான ஜிகுடிகளை, அஜ்ஜும்மா,புஜ்ஜும்மா,உச்சிமாங்காளி என செல்லம் கொஞ்சுவதில் உங்களை மிஞ்ச ஆள் கிடையாது.வலிக்காத மாதிரியே நடிப்பதில் வல்லவர்கள்.உங்கள் ஏரியாவில் ஆண்கள் பின்னூட்டமிட வந்தால் உங்கள் முகம் சரக்கடித்து வாந்தி எடுத்தது போல் ஆகி விடும்.அவர்களை அடித்து விரட்ட ஆசைப்படுவீர்கள்.அதே சமயம்,சில பொன்னுங்க வந்து பின்னூட்டமிட்டால் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவர்களுடன் ஸ்விட்சர்லாந்திலும் ஸ்பெய்னிலும் டூயட் ஆடிக்கொண்டிருப்பீர்கள்.எதற்குமே லாயக்கில்லாத வெத்து டோமர்களுக்கு ரசிகர்களாயிருப்பீர்கள்.அவர்கள் படம் எவ்வளவு மொக்கையானாலும் ஓடிவிடாதா என ஏங்குவீர்கள்.மாமனார் மேல் மிகுந்த அன்பு(?) வைத்திருப்பீர்கள்.வெறும் வாயில் உதார் விட்டு அடுத்தவனை சண்டைக்கு இழுப்பது உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.ரசிக்கும்படியான புதிய புதிய கெட்ட வார்த்தைகளை கண்டுபிடிப்பீர்கள்.உங்களை யாராவது பாராட்டினால் அவனை கண்டமேனிக்கு ஓட்டுவீர்கள்.அதே சமயம் யாராவது உங்களை கலாய்த்தால் ரசிப்பீர்கள்.உள்ளூரில் நிறைய ஃபிகர்களிடம் ஒரு ரவுண்டு அடி வாங்கி முடித்துவிட்டு வெளியூர்காரனாக அடி வாங்க முடிவெடுத்துள்ளீர்கள்.நீங்கள் நினைத்தது நடக்கும்.
அதிர்ஷ்ட எண் : ஃபிகர்களின் ஃபோன் நம்பர்.
அதிர்ஷ்ட நிறம் : அந்த கருமத்தை பத்தி உங்களுக்குக் கவலையே கிடையாது.

எல்லாக் கேள்விகளுக்கும் எண் 1 ஐ தேர்வு செய்தவர்களுக்கு :

உங்களுக்கு சம்மந்தமில்லாத இடத்தில் வந்து ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.போங்க..! போய் உருப்படியா உங்க ஜோலியை பாருங்க
****************************************************************************

பெருநகரத் தனிமைகள்முகவரி அற்ற கடிதங்களின் தொகுப்பு

ஜன்னல் வழி பறக்க எத்தனிக்கும் காகிதங்கள்

கனவுகளில் முட்டி மோதும் நினைவலைகள்

மையப்புள்ளி விலகிகொண்டே இருக்கிறது

அறை முழுக்க பரவி வரும் தனிமை

தனிமை மறக்க நிகழும் சந்திப்புகள்

சந்திப்புகள் தரும் அலுப்பு

அலுப்புகள் தரும் அனுபவங்கள்

ஊடுபாவும் ஒற்றைக் கதிரின் சலனம்

டம்ளரில் அடங்கிவிடும் தண்ணீர்

ஒளிவிலகல் பற்றிய எவனோ ஒருவனின் குறிப்புகளில்

மனவிலகல் பற்றியும் ஏதேனும் இருக்கக்கூடும்...

முன்னிரவு தரும் போதை

பின்னிரவு தரும் தத்துவம்

அதிகாலை தரும் ஆர்ப்பரிப்புகள் என

பெருநகரத் தனிமைகள் யாவும் பிரசித்தி பெற்றவை!

***************************************************************************

ராவணாயனம் - காவியம்-->சினிமா-->அபத்தம்!


சுஜாதா என்கிற மனிதர் இல்லாமல் மணிரத்னம் போல இயக்குநர்கள் படம் எடுத்தால் படம் எப்படி இருக்கும்? விடை கடைசியில்.

படம் முடிந்து வெளியே வந்த போது காதில் விழுந்த சில கமெண்டுகள்:

" இந்தப் படம் எடுக்கறதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேணாம்."

" என்னாங்கடா இது லிங்குசாமி படத்துல வர்ற மாதிரி இருக்கு அவ்வளோ உசரத்தில் இருந்து குதிச்சா ஒரு சின்னக் காயம் கூடவா படாது?ஸ்விம்மிங் பூல்ல குளிச்சுட்டு வர்ற மாதிரி ஜம்முனு வர்றாய்ங்க! "

"நல்ல வேளை கார்த்திக்குக்கு வால் ஒன்னு மாட்டி விடலை"

"வீட்ல உக்காந்து ஃபுட்பால் பார்த்திருக்கலாம்"

" இந்த படம் பாக்க வந்ததுல நடந்த நல்ல விஷயம் செம்மொழி பாட்டை பெரிய ஸ்கிரீன்ல பார்த்தது தான்!"


ராவணன் ஸ்டில்களில் சில, ரஷோமோன் படத்தின் ஸ்டில்களைப்போல இருந்ததால் கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.ராமாயணத்தைக் கொஞ்சம் புதுசாக சொல்லியிருப்பார்களோ என்று. ஆனால் ஓபனிங் சீனில் வீரா ராகினியை(ஐஸ்வர்யா பச்சன்)கடத்தும் போது அவர் பாரதியார் பாடல் பாடுவதும் அதற்கு வீரா மறுபடியும் பாரதியார் பாட்டு பாடுவதும்...சினிமாத்தனத்தின் உச்சம்.ரோஜா படத்திலயே நல்லாக் கடத்தினீங்களேய்யா..!

ராவணனின் கதையை சொல்வது என்று முடிவெடுத்த பின் அந்த ஒரு கேரக்டரையாவது கொஞ்சம் குழப்பமில்லாமல் சொல்லியிருக்க வேணாமா?விக்ரம் அடிக்கடி டுர்ர்ர்..டன்டணக்க டண்டனக்க...என்கிறார்,பக் பக் பக் என்கிறார்.கந்தசாமி ஷூட்டிங்கிலிருந்து கடத்திக் கொண்டுவந்து நடிக்க வைத்திருப்பார்கள் போல.படத்துக்கு படம் இப்படியே செய்துகொண்டிருந்தால் மனிதர் கொஞ்ச நாளில் வாத்தாகவோ சேவலாகவோ மாறிவிடும் அபாயம் உள்ளது.டைட்டிலை நியாயப் படுத்துகிற மாதிரி அடிக்கடி "பத்து தலை...பத்து தலை"என்று வசனங்கள் வேறு.விக்ரம் இன்னும் தமிழ் ஜனங்கள் இது போன்ற மேனரிசங்களை ரசிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பாரானால், ரொம்ப கஷ்டம் பாஸ். ஆனால் சில காட்சிகளில் எக்ஸ்பிரஷன்கள் அசத்தல்.

பிருத்விராஜ் அழகாக இருக்கிறார்.நன்றாக உறுமுகிறார்,ஆவேசமாக ஆக்ரோஷம் காட்டுகிறார்.இப்படியே நடித்தாரானால் இவருக்கும் நல்லது நமக்கும் நல்லது.சில காட்சிகளில் வீரா வீரா என்று கத்துவதை மக்கள் ரசித்தார்களானால் அடுத்தபடியாக சிங்கம் மாதிரி படங்களில் நடித்து நம்மை துன்புறுத்தக் கூடும்.

ராகினியாக முன்னாள் உலக அழகி.யாராவது இவருக்கு முன்னாள் உலக அழகி என்று ஞாபகப்படுத்தினால் நல்லது.சேட்டு வீட்டு ஆண்ட்டி மாதிரி இருக்கிறார்.கள்வரே கள்வரே என்று ராவண சேனைகளின் நடுவே பாடுவாரென்று எதிர்பார்த்துப் போனால் ஏமாந்து போவீர்கள்.அந்த அற்புதமான மெலடிக்கு சம்மந்தமில்லாமல் பரத நாட்டியம் ஆடி வதைக்கிறார்.வடிவேலுவெல்லாம் என்ன ஜுஜுபி..ஒரு காட்சியில் ஐஸ்வர்யாவும் விக்ரமிடம் சீரியஸாக பக் பக் பக் என்று சொல்லும்போது வயிற்றைப் புண்ணாக்குகிறது.கிளைமாக்ஸிலும் உடைந்த சிலையின் முன் வேண்டிக்கொள்ளும் போதும் பழைய ஐஸ்.

ராவணனின் அண்ணனாக பிரபு (கும்பகர்ணன்...???!தம்பியாக காட்ட முடியாதில்லையா!)
சூர்ப்பனையாக ப்ரியாமணி.அதை விட அதி முக்கியமான கேரக்டரில் ரஞ்சிதா. இந்தப் படத்தில் இவருக்கு என்ன கேரக்டர் என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு சிறப்புப்பரிசு கொடுக்கலாம். ஒரு டயலாக் கூட பேசாத இந்த கேரக்டருக்குத்தான் என்ன மாஸ்? சான்ஸே இல்லை...தமிழன் தமிழன் தான்!

முக்கியமாக குறிப்பிடவேண்டியது வசனங்கள். சுஹாசினி ஜெயா டி.வி.யில் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என்று தராசில் ஒவ்வொரு படத்தையும் எடை பார்த்துக் கை வலிக்க எழுதியிருப்பார் போல.திடீரென்று திருநெல்வேலி பாஷை பேசுகிறார்கள்.திடீரென்று சாதாரணமாக பேசுகிறார்கள்.தலை சுத்துகிறது நமக்கு.மேடம் விமர்சனம் பண்ணுவதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

மணிரத்னம் சார்! பாடல் காட்சிகளை படம் பிடித்தே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்காமல் பிண்ணனியில் ஓட விட்டதுக்கும் இவ்வளவு பெரிய ஸ்டார் காஸ்டை வைத்து படம் எடுத்ததற்கும் பாராட்டுக்கள்.உங்கள் படத்தில் எல்லோருக்கும் பிடித்தது ஜெட் வேகத்தில் நகரும் காட்சிகளும் திரைக்கதையுமே. இந்தப் படத்தில் திரைக்கதை, விக்ரமும் பிருத்விராஜும் ஒரு உடைந்த பாலத்தில் தொங்குவார்களே...அதைவிட மோசமாக தொங்கிக்கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த ஒரு டெம்ப்ளேட் கதையிலேயே இவ்வளவு சொதப்பலா என்று தான் ஜீரணிக்க முடியவில்லை.

படத்தில் நல்ல விஷயமே இல்லையா என்று கேட்பவர்களுக்கு - லொகேஷனும்,காமிராவும் பிண்ணனி இசையும்.சந்தோஷ் சிவன் மிரட்டியிருக்கிறார்.தமிழ் சினிமாவில் இதவரைக்கும் படம் நெடுக சலிக்காமல் அழகாக காட்டைக் காண்பித்ததாக நினைவில்லை.
கடைசியாக கிளைமேக்ஸில் சி.டி யில் வராத பாடல் ஒன்று திரையில் பிண்ணனியில் வருகிறது.அற்புதம்!
 
ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கான பதில் - சுஜாதா இல்லாமல் அடுத்து எந்திரன் வேறு வருகிறது!
**************************************************************************

வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்பதிப்பகம் : உயிர்மை.

ஆசிரியர் : எஸ்.வி.ராமகிருஷ்ணன்

நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுக் குறிப்புகள் எழுதுவதில் அத்தனை சிக்கல்கள் கிடையாது.ஆனால் சமீப கால வரலாற்று சம்பவங்களை எழுதுவதில் சற்றுக் கவனமாயிருக்க வேண்டும். அதாவது 40 அல்லது 50 வருடங்களுக்கு முந்தைய கதைகள் என்றால் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.ஏனெனில் அது நம் தாத்தாவிடம் கதை கேட்பது போல்.. சுவாரஸ்யம் கருதி நாலு பிட்டு தாத்தா சேர்த்து விட்டாரானால் பாட்டி போட்டுக் கொடுத்து விடுவார்.

மதுரைக்கல்லூரியில் படிக்கும்போது கிருஷ்ண மூர்த்தி என்று ஒரு ஆங்கிலப் பேராசிரியர் இருந்தார்.வகுப்பில் பாடத்தைப் பற்றி பேசுவதை விட அவர் வாழ்ந்து லயித்திருந்த நாற்பது வருடங்களுக்கு முந்தைய மதுரையைப் பற்றியும் அந்தக்கால அரசியல் பேசுவதிலேயே நேரத்தை செலவிடுவார். ஆனாலும் அந்தக் கதைகள் அவ்வளவு ரம்யமாயிருக்கும். தெருவிளக்கு ஏற்றும் அரசாங்க உத்தியோகஸ்தனின் ஜம்பம் முதல் பெரியார், காங்கிரஸ் சினிமா என்று எல்லாக்கதைகளுமே சற்று ஒரு சார்பாக இருந்தாலும் சுவாரஸ்யத்துக்குக் குறைவிருக்காது. அந்த சுவாரஸ்யத்துக்கு நிகரானது எஸ்.வி.ராமகிருஷ்ணனின் வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்.

அரசியலில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள பழைய செய்திதாள்களும் பாடப் புத்தகங்களுமே போதும்.ஆனால் அன்றைய பழக்கவழக்கங்கள் ,மக்கள் எந்த மாதிரியான விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்தார்கள் என்பதெல்லாம் புதுமைப் பித்தன் ,கல்கி போன்றோரின் கதைகளைப் படித்து நாமாக ஊகித்துக் கொள்ளவேண்டியது தான். இந்தக் கட்டுரைத் தொகுப்பு அந்தக் குறையை ஓரளவுக்கேனும் நிவர்த்தி செய்கிறது.என் தாத்தாவும் அவர் அப்பாவும் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று கொஞ்சமேனும் அனுமானம் செய்து கொள்ள முடிகிறது.

இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளை விவரிக்கிறது. நாற்பதுகள் தான் சென்ற நூற்றாண்டின் முக்கியமான பத்தாண்டுகள்,அரசியல் ரீதியாகவும் ,சமூக ரீதியாகவும்.இரண்டாம் உலக யுத்தம் ,பாகிஸ்தான் பிரிவினை , காங்கிரஸ் அதிகாரம் பெற்றதும் ,அமைப்பு ரீதியாக திராவிட கட்சிகள் வலுவடைய ஆரம்பித்ததுமான ஒரு Transition phase .

ஏறத்தாழ இரண்டு மூன்று பக்கங்களுக்குள் அடங்கி விடும் முப்பது கட்டுரைகளின் தொகுப்பே வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்.முன்னுரையை கூட ஒரு கட்டுரை போலவே எழுதியிருக்கிறார் எஸ்.வி.ராமகிருஷ்ணன்.கிட்டத்தட்ட 110பக்கங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட விஷயங்கள். இரண்டு தலைமுறைகளுக்கு முந்தைய வாழ்க்கை முறையை ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு தன் சந்ததியினருக்கு சாவகாசமாக சொல்வது போல் அமைந்திருப்பது இத்தொகுப்பின் விசேஷம்.

பள்ளிக்கூடங்களில் ஆண்களும் பெண்களுக்குமான நட்பும் மதிப்பீடும் எப்படி இருந்தது , பணம் -காசின் பரிமாணம் (அணா,பைசா,தம்பிடி கணக்குகள்),தீபாவளி எப்படிக் கொண்டாடினார்கள்,ஜானவாச ஊர்வலங்கள் என்பது போன்ற மேலோட்டமாக சின்ன விஷயங்களாகத் தெரிந்தாலும் வாசிக்கையில் ஒரு விதமான குறு குறுப்பை ஏற்படுத்துவது உண்மை.

நம்மில் பெரும்பாலானோர் கடிதப் பரிவர்த்தனைகளையே மறந்து விட்ட நிலையில் அந்தக் காலத்தில் மொட்டைக் கடுதாசியின் சமூக அந்தஸ்து பற்றி ஒரு கட்டுரை.குச்சி ஐஸ் பற்றின விவரணைகளும், தமிழ்நாட்டில் அய்யப்பன் விரதங்கள் எவ்வாறு பிரபலாமனது பற்றியும் ,வக்கீல் நார்ட்டன் துரையின் பிரசித்தி பெற்ற அந்த Reverse Argument பற்றியும் கூட சற்று எள்ளல் நடையுடன் விவரித்திருப்பது அழகு.ஒரே குறை நாற்பதுகள் ஐம்பதுகளில் தமிழக அரசியல் சூழல் குறித்து சற்று விவரித்திருக்கலாம். அதாவது அண்ணா காலத்து திராவிடக் கட்சிகள் பற்றியும் ராஜாஜி காலத்து காங்கிரஸ் பற்றியும்.

மறு நாள் விடிந்தால் இந்தியா சுதந்திர நாடு.அதற்கு முந்தைய தினம் அதாவது பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி நாளான்று லார்ட் மவுண்ட் பேட்டன் கையெழுத்திட்ட கடைசிக் கோப்பு எது தெரியுமா? பாலன்பூர் நவாபின் ஒரு அதி முக்கியமான கோரிக்கை.அன்றைய பாலன்பூர் இன்றைய குஜராத்.(புத்தகம் முழுக்க இது போன்ற தகவல்களால் நிரம்பி வழிகிறது).பாலன்பூர் நவாபின் கோரிக்கை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா......புத்தகத்தில் தெரிந்து கொள்ளுங்களேன்.இந்தியா பிரிட்டனிடம் அடிமைப் பட்டதன் காரணம் தெரியும்.
**********************************************************************************

ராவணன் பாடல்கள் மற்றும் மணிரத்னத்துக்கு ஒரு வார்த்தை!


 
மீண்டும் மணிரத்னம்..ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் வைரமுத்து! இந்த மூன்று பெயர்களைப் போஸ்டரில் பார்த்ததும்  பாடல்கள் வெளியீட்டன்று காலை முதல் வேலையாக கீஷ்டு கானத்தில் போய் காஸட் வாங்கி வந்து தீரத் தீர கேட்ட ஞாபகங்கள் வந்து தொலைக்கிறது. பதினைந்து வருடங்கள் கழித்தும் எதிர்பார்க்க வைக்கும் கூட்டணி என்பதே சின்ன ஆச்சரியம் தான். ஏனோ சமீபத்திய வரவான ராவணனில்  சின்னதாக ஒரு சலிப்பு எட்டிப்பார்ப்பது போல் முதலில் தோன்றியது. ஆனால் எப்போதும் போல கேட்க கேட்க வாக்மேன் முழுக்க ராவணனின் ஆக்கிரமிப்பு தான்!

 ரஹ்மான் லேசான முனகல் ஹம்மிங்கோடு ஆரம்பித்து வைக்க தொடர்ந்து வீரா வீரா என அதிரடியாக  விஜய் பிரகாஷுக்கு ஒரு பாடல். மனுஷனை இன்னும் கொஞ்ச காலம் எல்லோரும் குத்தகைக்கு  எடுத்து விடுவார்கள். காட்டு சிறுக்கி என அனுராதாவும் ஷங்கர் மகாதேவனும் பாடுவதை விட ஹிந்தியில் ரேகா பரத்வாஜும் ஜாவித்தும் பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள்.

 ஒரே ஒரு மெலடியான கள்வரே பாடலில் ஷ்ரேயா கோஷலுடன் பார்ட்னர்ஷிப் போட்டிருப்பது ரஹ்மான் அல்ல...வைரமுத்து. "வலி மிகும் இடங்கள்...வலி மிகா இடங்கள்" என்கிற வரியில் தன் சமகால பாடலாசிரியர்களுக்கு மீண்டும் ஒரு முறை ட்யூஷன் எடுத்திருக்கிறார்.அதிலும் ஷ்ரேயாவின் குரல் அக்னி வெயில் ஜிகர்தண்டா. இந்த ஆல்பத்தில் க்றிஸ் கெய்ல் சிக்ஸர் போல ஆடியன்ஸ் மத்தியில் விழுவது கார்த்திக் பாடியிருக்கும் உசுரே போகுதே பாடல்தான். இப்போதே நான் அழைக்கும் பலரின் மொபைல் காலர் ட்யூன் இந்த பாடல் தான். பாய்ஸ் படத்தில் வரும் சென்ட்ரல் ஜெயிலே பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாவிட்டாலும் பாடல் வரிகளால் மனதில் நிற்கிறது ! கோடு போட்டா மற்றும் கெடாக்கறி பாடலை எல்லாம் நன்றாக படமாக்கியிருப்பார்கள் என்று நம்புவோமாக.

வைரமுத்துவுக்கு :- கலைஞருடன் தொலைபேசுவதை பெருமையடிப்பதை விட்டு கள்வரே மாதிரி நாலு பாடல் எழுதுங்கள் ! புண்ணியமாகப் போகும். 

ரஹ்மானுக்கு :- என்னென்னவோ பரீட்சார்த்த முயற்சியெல்லாம் செய்கிறீர்கள். பலவிதமான சத்தங்களை அறிமுகம் செய்கிறீர்கள்! நல்லது தான்...ஆனால் உங்களுக்குப் பிறகு வந்த ஹாரிஸ் ஜெயராஜ்,யுவன் பாடல்களில் கூட சத்தங்கள் குறைந்து பாடல் கேட்கிறது.ஆனால் நீங்கள் இன்னும் பாடல் வரிகளை முழுவதுமாக ரசிக்க விட மாட்டேன் என்கிறீர்கள். ஒரு வேளை இது தான் உங்கள் சக்ஸஸ் ஃபார்முலாவா?

மணிரத்னத்துக்கு : எப்படிப்பட்ட பாடல்களையும்  படமாக்குவதில் தமிழிலேயே நீங்கள் தான் கில்லாடி. இந்த மாதிரி ஆல்பம் உங்கள் கையில் கிடைத்தால் சும்மாவா விடப் போகிறீர்கள். ஆனால்  இந்த தலைமுறை ரசிகர்கள் விரும்புவது உங்கள் இயக்கத்தில் "The Pianist" , "A Beautiful Mind"மாதிரியான படங்களை. ராவணன் போன்ற படங்களில் கூட இன்னும் எத்தனை காலத்துக்கு உங்கள் இயக்கத்தில் டூயட்டுகளையே பார்த்துக் கொண்டிருப்பது?

  
ரசிகர்களுக்கு : பயப்படாதீர்கள்! ராவணன் பாடல்கள் தமிழ் "குரு" போல டப்பிங் பாடல்கள் இல்லை.தைரியமாக கேட்கலாம் ,  தமிழிலும்!
*************************************************************************************

யாவுமாலான இவ்வுலகம்வேதியியல் படிப்பித்தவர்  அணுக்களாலானது என்றார்

இயற்பியல் ஆசிரியர்  கதிர்களாலானது என்றார்

தமிழ் கற்பித்தவர்  வார்த்தைகளாலானது என்றார்

வரலாறு பயிற்றுவித்தவர்  சம்பவங்களானது என்றார்

புவியியல் போதித்தவர் கற்களாலானது என்றார்

கணிதம் கற்பித்தவர் எண்களாலானது என்றார்

தத்துவம் பேசியவர்  எண்ணங்களாலானது என்றார்

நாடகம் கற்பித்தவர் காட்சிகளாலானது எனவும்

மதத்தைப் போதித்தவர் விதியாலனதெனவும் உரைத்தனர்.

நேற்றிரவு உலகம் கனவில் வந்தது.

எதனாலானதென கேட்டபொழுது

நகைத்தபடி கனவிலிருந்து அகன்றது உலகம்.

யாவுமாலான இவ்வுலகம் பொய்களாலும் ஆனது

*************************************************************************

K'naan - Waving Flag - Road to South Africa!


மிகப் பெரிய அரங்கத்தின் அலறும் ஸ்பீக்கர்களில் வீறிட்டு வரும் இசைக் கோர்வைகளில் தன்னை மறந்து ஜன்னி கண்டு ஆனந்தக் கண்ணீர் விடும் ரசிகர்களைக் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். பலநூறு டெசிபல் சத்தத்தில் இரையும் டிரம்ஸ்களிலும் கிடார்களிலும் வரும் இசையில் அப்படி என்னதான் இருக்கிறதென அவ்வப்போது யோசித்து யோசித்து தோற்றிருக்கிறேன். சில நாட்கள் முன்பு ஒரு பின்னிரவில் "Wavin' Flag" என்ற பாடல் கேட்ட போது தான் புரிந்தது , இசைக்கு வறண்ட பாலைவனத்திலும் பனிக்கட்டிகளை உருவாக்கும் சக்தி இருக்கிறதென.நமது பாரம்பரிய இசை என்பது மாஸ் அப்பீல் வகைக்குள் அடங்காது.கொஞ்சம் விதிகளை மீறாமல் தான் விளையாடுவார்கள்.விதிகளையெல்லாம் துவம்சம் செய்து மக்களை வசியப் படுத்தும் மாஸ் அப்பீல் பாடல்களிலும் கூட எப்பொழுதேனும் ஒரு ஜீவன் இருக்கும்.மேலும் ஜனங்களின் வலியை சொல்லும் பாடல் விதிகளையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும். குறிப்பாக இந்த "Wavin' Flag"என்ற பாடலின் வரிகள் , பின்னிரவு கேட்டீர்களானால் உங்கள் சில மணி நேர தூக்கத்தை ஒத்திப் போட வைக்க வல்லது.


பொதுவாகவே ரஹ்மானின் வருகைக்குப் பிறகு ஆஃப்ரோ பீட் இசையெல்லாம் கூட அவ்வளவு அன்னியமாகத் தெரிவதில்லை. உலகமயமாக்கம் சாதாரண இசை ரசிகர்களின் ரசனையில் கூட புகுந்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது.ம்யூசிக் கான்சர்ட்டுகளில் கேட்பதை விட ஒரு விளையாட்டு நிகழ்வின் ஓபனிங் செரிமனிக்காக அமைக்கப் படும் இசையை கேட்பது ஒன்றும் பிரமாதமானதாக இருக்காது. அங்கே விளையாட்டு பற்றிய உற்சாகமும் ஆர்வமுமே மிகுந்திருக்கும்.ஆனால் அதையும் தாண்டி சில பாடல்கள் நம்மைக் கட்டிப் போட்டு முணுமுணுக்க வைத்து விடும், ரிக்கி மார்ட்டினின் Cup of Life போல , க்வீனின் We will Rock you போல. இன்றைக்கும் ஒரு ஸ்டேடியத்தில் நீங்கள் பல்லாயிரக்கணக்கான ரசிர்களுடன் சேர்ந்து வீ வில் வீ வில் ராக் யூ என்று கத்திப் பாருங்கள். நிச்சயமாக ஜிவ்வென்றிருக்கும்.

மேலே குறிப்பிட்டது கே'னான் வார்சேம் எனும் சோமாலிய - கனடிய ராப் பாடகரின் பாடல் . இந்த பாடலின் ஸ்பெஷல் இதன் உலகத்தன்மை. உலகத்தன்மை என்றால் அமெரிக்கதன்மையுடன் இந்தியத்தன்மையும் ஆஸ்திரேலிய , ஐரோப்பிய ஆப்பிரிக்கத்தன்மையுடன் கூடிய ஒரு உலகத்தன்மை. இந்தப் பாடலில் வலி இருக்கிறது ;எதிர்பார்ப்பு இருக்கிறது;கிண்டலுடன் சேர்ந்த ஏதோ ஒரு மறுக்கப்பட்ட உயிரின் கதறல் இருக்கிறது. எழுநூறு பக்க நாவல்களில் வரையறுக்க முடியாத வலியை பதினைந்து வரிகளில் இசையால் இவ்வளவு அழகாக கதறி அழ முடியும் போல.

ஆனால் இதே பாடலை வரிகளில் லேசான மாற்றங்களுடன் செலிப்ரேஷன் மிக்ஸ் என உலகக்கோப்பை கால்பந்துக்கான தீம் பாடலாகக் கேட்கையில் அவ்வளவு உற்சாகமாக இருக்கிறது. ஒரே பாடல் எப்படி சோகத்தையும் சந்தோஷத்தையும் தர முடிகிறது? யோசித்துப் பார்த்தால் நம் வாழ்க்கை முறைக்கும் செயல்பாடுகளுக்கும் சோமாலியா போன்ற ஒரு தேசத்தின் வறுமைக்கும் சச்சரவுகளுக்கும் நூலிழையில் ஒரு தொடர்பு இருக்கிறது.அந்த தொடர்புகளை இசை வெளிப்படுத்துகிறது. இசைக்கு ஒரே ஒரு பாஷைதான் இருக்கிறதென மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது.அது தான் -  வாழ்க்கை!

அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியின் தொடக்க விழாவில் கே'னான் வார்சேம் இந்தப் பாடலை பாடவிருக்கிறார். நீங்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்தால் நேரில் அனுபவியுங்கள். இல்லையெனில் செட் மேக்ஸிலாவது தவற விடாதீர்கள்.

K'naan's Waving FlagCelebration Mix

எழுத்துச் சீர்திருத்தம் - எதைத் தின்னால் பித்தம் தெளியும்


பொதுவாக இரண்டு தமிழர்கள் பரஸ்பரம் அறிமுகமாகி கொண்டால் தப்புத் தப்பாகவேனும் ஆங்கிலத்தில் தான் பேசிக் கொள்கிறார்கள்.எங்கே தமிழில் பேசினால் சக தமிழன் தன்னை தரக் குறைவாக நினைத்து விடுவானோ என்கிற அச்சம் எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு.வேறென்ன?தமிழ் மட்டுமே பேசினால் தன்னைப் படிக்காதவன் என்று நினைத்து விடுவார்களோ என்ற பயம் தான் காரணம்.

ஒரு அயல் மாநிலத்தவன் ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டு சகஜமாக சென்னை நகரத்தில் ஜீவிக்க முடியும்.ஆனால் தமிழ் மட்டுமே தெரிந்த ஒரு மனிதன் சென்னை போன்ற மாநகரத்தில் ஜீவிப்பது மகா கஷ்டம். தமிழ் போன்ற தொன்மையான மொழிக்கு இது அதீதமான கேவலம்.எதனால் இந்த நிலைமை என்ற ஆராய்ச்சியெல்லாம் செய்தால் பலர் கோபத்துக்கு ஆளாக நேரிடும். நம்முடைய ஆசையெல்லாம் செம்மொழி அந்தஸ்தை அரசியல் அல்லாது நிஜமாகவே மொழிக்குக் கிடைத்த கௌரவமாக மாற்றவேண்டும் என்பது தான்.

வரப்போகும் தமிழ் மாநாட்டில் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வரப் போவதாக காற்று வாக்கில் செய்தி அடிபடுகிறது. நல்லது தான்.குழந்தைகள் பழகும் விதமாக இலகுவாக மாற்றப் போவதாக சொல்கிறார்கள். அதாவது 247 வடிவங்களிலிருந்து கொஞ்சமாக குறைத்தால் மனனம் செய்வதற்கு வசதியாக இருக்கும்.உபயோகப் படுத்துவதும் எளிது என்பது அவர்களது கணக்கு. தமிழை இவ்வளவு வருஷங்களாக நாம் கஷ்டப் பட்டுக் கற்றுக்கொண்டதாகவும் இனி வரும் தலைமுறை எளிதாக கற்றுக்கொள்ளப் போவதாகவும் ஒரு நம்பிக்கை. வளைத்து வளைத்து எழுதுவதனால் தமிழ் வளரவில்லை எனக் கருதுவார்களானால் அதைப் போன்ற முட்டாள்தனம் இந்த பூமியில் இல்லை.

பிரச்சினை தமிழ் அல்ல.தமிழனின் உளவியல் சிக்கல் தான். படித்த நடுத்தர வர்க்கத்துக் குழந்தைகள் தமிழில் பேசக் கூச்சப் படுகின்றன. ஆங்கிலத்தைப் போல் நம் தமிழும் சந்தேகத்துக்கில்லாமல் நல்ல மொழி தானென ஒத்துக் கொள்ள மறுக்கும் சமூகம்.தமிழில் சிந்தித்து கஷ்டப் பட்டாகிலும் ஆங்கிலத்தில் மனதுக்குள் மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் பேசுகிறார்களன்றி தமிழில் பேசினால் பாவம் என்பது போல ஒரு மனோபாவம். சென்னை நகரப் பள்ளிகளிலோ கேட்கவே வேண்டாம். ஆங்கிலப் புலமையே வேலை பெற்றுத் தருமென்ற நம்பிக்கையில் தமிழை தரை டிக்கெட் என்று குழந்தைகளை நம்பச் செய்வதில் சமர்த்தர்கள்.

தமிழக ஆட்சியாளர்களுக்கோ அலாவுதீன் அற்புத விளைக்கைத் தேய்ப்பது போல அரசாணை இட்டவுடன் எல்லோரும் தமிழை மொழிப்பாடமாக எடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கை. மாணவர்கள் தமிழ் படிப்பதை பெருமையாக நினைக்க வழி செய்யுங்கள். அரசாங்கம் கொடுக்கும் சில்லறை ஸ்காலர்ஷிப்புகள் குவார்ட்டருக்கு கூடப் பத்தாது.

அடுத்ததாக பெயர்ப்பலகைகளை எல்லாம் தமிழ்ப் படுத்தப் போகிறார்களாம். அடிப்படை தப்பை சரி செய்யாமல் என்ன மாற்றம் நிகழ்ந்து விடும்? தமிழில் பெயர் வைப்பதை பெருமையாக நினைத்தால், நினைக்க வழி செய்தால் தன்னாலேயே தமிழ்ப் பெயர் வந்து விடப் போகிறது.

தமிழைக் கொஞ்சம் வளைந்து கொடுக்க அனுமதித்தாலே போதும். ஜூன் என்ற மாதத்தை ஏற்றுக் கொண்ட பின் அதை சூன் என்று தான் அழைக்க வேண்டும் என்று சொல்வதில் தான் சிக்கல். ஃபேஸ் புக்கை அப்படியே ஏற்றுக் கொண்ட பின் அதை ஏன் முகப் புத்தகம் என்று மொழியாக்கம் செய்ய வேண்டும். முகப்புத்தகம் என்று அழைக்கும் நண்பர்கள் ஆர்குட்டுக்கு தமிழில் என்ன என்பதையும் சொன்னால் புண்ணியமாகப் போகும்.யாரும் சொல்ல மாட்டார்கள்.இந்தப் போலித்தன்மை தான் தமிழைப் பயிற்று மொழியாக அமைத்துக் கொள்வதில் சிக்கலை உண்டாக்குகிறது.

அமெச்சூர்த்தனமான மொழியாக்கங்கள், யாரும் ஏறெடுத்துப் பார்க்க முடியாத களஞ்சியங்கள் என தமிழுக்கு எதிராக நிற்பது தமிழர்களேதான். இது போதாதென்று பத்திரிக்கைகளில் கூட ஆனந்த விகட குமுதத் தமிழ் என்றும் காலச்சுவட்டு உயிர்மைத் தமிழ் என்கிற பிரிவெல்லாம் வேறு இருக்கிறது.

எனக்குத் தமிழில் மட்டுமே எழுதுவதில் பெருமையோ அல்லது அவமானமோ கிடையாது. நான் தமிழில் சிந்திப்பதால் தமிழிலேயே எழுத முயற்சிக்கிறேன்.இதைப் பெருமையாக நினைக்கும் காலம் வருமானால் அன்று எனக்கு தீபாவளி தான்.

மாற்றம் அத்தியாவசிய தேவைதான். ஆனால் இப்போதிருக்கும் டெஸ்ட் மேட்ச்சை இருபது ஓவர்களாக்கி நவீனப் படுத்துவது செம்மொழி மாநாட்டில் சாத்தியமா?

எதைத் தின்னால் பித்தம் தெளியும் நண்பர்களே?பின் குறிப்பு :


எழுத்து சீர்திருத்தம் பற்றிய நண்பர் கனகரத்னம் ராஜ்குமாரின் கட்டுரை

என் குட்டிக் கடவுளுக்கு!இவளின் அபத்தங்கள் சுவாரஸ்யமானவை

வெயிலோடும் வியர்வையோடும் வரும் தகப்பனிடம்

தெத்துப் பல் காட்டி சிரிப்பாள்

மொழிகளுக்கு வார்த்தை கொடுப்பாள்

சுவர்களுக்கு அர்த்தம் கொடுப்பாள்

வண்ணங்கள் பார்த்து வியப்பாள்

அம்மாவிடம் அடங்கிப் போவாள்

சொல்கூட்டங்களிடயே சுழலுவாள்

கடந்த ஜென்மம் பற்றிக் கூறென்பாள்

தொலைபேசியில் கதை சொல்லுவாள்

தொலைந்திருந்த வாழ்க்கையை மீட்டுத் தருவாள்

மார் மீதமர்ந்து தலை முடி பற்றுவாள்

காதோரம் நகைப்பாள் பள்ளிக்கதைகள் உதிர்ப்பாள்

இன்னும் எத்தனை காலம் இந்த அபத்தங்கள்

வாழ்வின் அனர்த்தங்கள் புரியும் முன்

மழலைத்தனம் முடியும் முன்

வாழ்ந்து தொலைந்து விடு என் குட்டிக் கடவுளே!

*******************************************************************

புகைப்படம் : நன்றி : கார்த்திக் ராஜ்

அங்காடி தெரு...பையா &.....அங்காடி தெரு என்ற படம்.சுத்தி சுத்தி ஒரே தெரு.அதிலும் ஒரே பில்டிங்.சில மனிதர்கள் சில வாழ்க்கை. கலக்கி விட்டார்கள் என்றெல்லாம் சொல்ல முடியவில்லை. இந்த படம் பார்த்து ஒரு வாரம் ஆகியும் சில முகங்கள் மனதை விட்டு அகலவில்லையாதலால் இந்தப் படத்தைப் பற்றி சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.

1. இவ்வளவு பெரிய சென்னையில் அந்த தெருவை விட்டால் அவர்களுக்கு வேறு கதியே இல்லையா? ப்லஸ் டூ படித்தவர்களுக்கு ஹுண்டாயிலும் நோக்கியாவிலுமே வேலை கிடைக்கிறதே..!

2. உண்மையிலேயே அவர்கள் சாப்பிடும் இடமும் சாப்பிடும் முறையும்   அவ்வளவு கோரமானதாகவா இருக்கும்?

3. விக்ரமன் படங்களில் யாருக்கும் கெட்டதே நடக்காது..வசந்தபாலன் சார்..உங்கள் படங்களில் யாருக்கும் நல்லதே நடக்காதா?

4. அந்தக் கடையின் சூப்பர்வைசர் கஸ்டமர்கள் முன்னால் நாயகியையும் மற்றவர்களையும் அடிக்கடி அடித்துக் கொண்டே இருக்கிறார். இது கொஞ்சம் அதீதமாகப் படவில்லை?

5. இந்த படம் பார்த்த பின் தி.நகர் கடக்கும்போதெல்லாம் இந்தப் படமே ஞாபகத்துக்கு வந்து தொலைகிறதே... அது நம் எல்லோருடைய தோல்வியா இல்லை உங்கள் இயக்கத்தின் வெற்றியா?

சில மிகையான காட்சிகளை தவிர்த்துவிட்டால் அங்காடிதெரு ஒரு அரக்கத்தனமான அற்புதமான படம். இது மாதிரியான ஒரு குறிப்பிட்ட பிரிவை பிரதிநிதித்துவப் படுத்துகிற படங்களே விருதுகளை வெல்லும் என தோன்றுகிறது. குறிப்பாக அஞ்சலியின் எக்ஸ்பிரஷன்களும் நடிப்பும் நம் நாயகிகள் இன்னும் வெறும் அழகான பேக்குகள் இல்லை என காட்டுகிறது.

நாட்டின் அதிமுக்கியமான பிரச்சினைகளை பேசும் படங்களை விட நாம் கவனிக்க மறந்த ஒரு கடை சார்ந்த அரசியலையும் வாழ்க்கையையும் சொல்லும் அங்காடி தெரு நேராக நெஞ்சில் கடப்பாரையைக் கொண்டு குத்துகிறது. ஒருவிதமான எரிச்சல் கலந்த வலி அது.


வலி கூட தேவைதான் சில சமயங்களில், விருதுகளுக்காகவேனும்.

பையா

இந்தப் படத்தின் கதையை டைரக்டர் எந்த ஆங்கில படத்திலோ அல்லது ஹிந்தியிலோ அல்லது வேறு எந்த மொழிகளிலும் இருந்தோ எடுத்திருக்கவே முடியாது.காரணம் வேறொன்றுமில்லை ஜென்டில்மென்.... படத்தில் கதையே கிடையாது.இன்டர்வியூ போகும் ஹீரோவை தாதா சீண்ட அவரை ஹீரோ அடித்துவிட பதிலுக்கு தாதா துரத்த என்று பதினோராம் நூற்றாண்டில் வந்திருக்க வேண்டிய படம். இன்னும் பத்து ஆண்டுகளுக்கு வில்லன்கள் எவ்வளவு பெரிய இரும்புத் தடி கொண்டு அடித்தாலும் ஹீரோக்களுக்கு காயமே படாது....கஷ்டம்!

சமீபத்தில் நானும் நண்பரும் ஒரு ஏ.சி. பஸ்ஸில் வந்துகொண்டிருந்தோம். பயணிகள் சலசலவென்று பேசிக்கொண்டும் நெளிந்து கொண்டுமிருந்தார்கள். ஏதோ புது படம் போல.அருண்விஜய் ஆக்ரோஷமாக நடித்துக் கொண்டிருந்தார். ஏறக்குறைய எல்லாரும் மேல் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். பயணிகளின் எரிச்சலைப் பார்த்து கண்டக்டர் படத்தை மாற்றினார். எல்லாரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் எல்லோரும் அமைதியாகி படத்தை ரசித்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

அந்தப் படம் - கரகாட்டக்காரன். தமிழ் ரசனை!

இப்படிக்கு சைந்தவி, W/O சிபி ( இன்னும் சில நூறு ஜென்மங்களுக்கு)
சைந்தவி புருஷனுக்கு,

சைந்தவி எழுதுவது.வழக்கமா எல்லாக் கடிதத்துலையும் எழுதிக்கொள்வதுன்னு தான் போடுவேன். ஏன்னா இது வரைக்கும் எந்தக் கடிதத்தையுமே உன் கிட்ட காண்பிச்சதில்ல. எழுதி எழுதி கிழிச்சுப்போட்டு மனசுக்குள்ள சிரிச்சிக்கிட்டே அழறதுலையும் அப்படி ஒரு அல்ப சந்தோஷம்! தவிர நான் எழுதினா நீ கிண்டல் பண்ணி அழவைப்பேன்னும் தெரியும்!

என்னை எப்படிடா கண்டுபுடிச்ச நீ? மேட்சிங்கா டிரஸ் கூட பண்ணிக்கத் தெரியாத என்னை எப்படியெல்லாம் நீ மாத்தின தெரியுமா? நீ வந்து பொன்னு பார்த்துட்டுப் போன பின்னாடி தான் எனக்கே தெரியும் நானும் கொஞ்சம் அழகாதான் இருந்திருக்கேன்னு. பொன்னுங்களோட உள்ளுணர்வு ஒன்னு இருக்கு. கடவுளைவிட சரியா சொல்லிடும். உன்னைப் பார்த்தப்போ தோணுச்சுடா அது, நான் இந்த உலகத்துலயே ரொம்ப அதிர்ஷ்டசாலின்னு! அது பொய்யே ஆகலை , இந்த நிமிஷம் வரைக்கும்!

கல்யாணம் ஆன புதுசுல நான் எப்ப சண்டை போட வந்தாலும் விட்டுக் கொடுத்து விட்டுக் கொடுத்து என்னை ஜெயிச்சிருக்க.என் மேல உனக்குக் கோபமே வராதாடா திருடா! உன் கூட ஒரு சண்டையாவது போடனும்னு மல்லுக்கட்டி நின்னப்பக் கூட பதிலுக்கு முத்தமாக் கொடுத்து என்னை காலி பண்ணிட்டியேடா ராஸ்கல்! என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் எங்க எங்கயோ ஃபாரின்ல செட்டில் ஆனாங்க. ஆனா சொர்க்கத்துல செட்டில் ஆனது நான் மட்டும் தான்னு நினைக்கிறேன்!

எல்லாப் பொண்ணுங்களைப் போல பையன் தான் பொறக்கனும்னு பிடிவாதமா இருந்தேன். எல்லாப் புருஷனுங்க மாதிரி பொன்னுதான் பொறக்கனும்னு நீயும் பிடிவாதமா இருந்த. நான் தோத்துப் போனாலும் உன்னை ஏமாத்தலைடா! பாப்பு வந்தப்புறம் நீ கொஞ்சம் மாறிதான் போயிட்ட. வேலை முடிஞ்சு வந்ததும் முன்னெல்லாம் என் புடவைல முகத்தை துடைச்சிப்ப , வேர்வை இல்லைன்னாலும்.. பாப்பு வந்தப்புறம் வேலை முடிஞ்சு வந்ததும் நேரா அவளைக் கொஞ்சப் போயிடுவ! என் பொண்ணா இருந்தாலும் அவ மேல ஒரு சின்ன பொறாமையே இருந்துச்சு. இதை நான் என் அம்மக்கிட்ட சொன்னப்போ "ரெண்டு குழந்தைகளை வச்சு உன் புருஷன் எப்படி சமாளிக்கிறார்?"னு விஷமத்தனமா கேட்டா. அப்பாவும் பொன்னும் சேந்து கொஞ்ச நஞ்ச லூட்டியாடா அடிச்சீங்க. நீ ஆஃபீஸை கட் அடிச்சுட்டு அவளை ஸ்கூலை கட் அடிக்க வச்சுட்டு ரெண்டு பேரும் சினிமா பார்க்கப் போனீங்களே..எங்கயாவது உலகத்துல இந்தக் கூத்து நடக்குமா?

சமையல் பண்ணும்போது எத்தனை தடவை பின்னாடி பூனை மாதிரி வந்து இடுப்பைக் கிள்ளி சாம்பாரைக் கொட்ட வச்சுருப்ப! எத்தனை தடவ  சமையல்கட்டை  வெக்கப்பட வச்சிருப்ப! ஆனா அதுக்கெல்லாம் பதிலுக்கு உன்னை எப்படி பழி வாங்கிருக்கேன் தெரியுமா? பட்டுப்புடவை சரசரக்க மல்லிகைப்பூவோட உன் முன்னால குறுக்கும் நெடுக்கும் போய் இன்னிக்கு "அது" வேணாம்னு சொல்றப்போ உன் மூஞ்சி ஒரு தினுசா போகும் பாரு...அடடா...அதுக்காகவே இன்னும் நூறு குழந்தை பெத்துக்கலாம் போல இருக்கும். நீயும் என்னை சும்மாவா விட்ட? அதுக்காக பாவி என்னை எத்தனை முறை கெஞ்ச விட்டுருப்ப.. ராட்சஸா!

ஆமா ஹனி மூன்ல எனக்கு ஒரு ஒரு கிஃப்ட் கொடுத்தியே... இதுவரைக்கும் எந்த புருஷனாவது தன் புது பொண்டாட்டிக்கு அப்படி ஒரு கிஃப்ட் கொடுத்திருப்பான்னு நினைக்கிற? அதை பிரிச்சுப் பார்த்ததும் என் முகத்துல வந்த நூறு கிலோ வெக்கம் என்னை விட்டு போறதுக்கு மூனு மாசம் ஆச்சுடா! நம்ம பாப்புவுக்கு விஷ்வா அந்த மாதிரி ஒரு கிஃப்ட் கொடுத்திருப்பானாடா. எனக்கு கிடைச்ச மாதிரி அவளுக்கும் அவன் சிபியா இருப்பானா ... தெரியல.. !

ஆரம்பத்துல நீ எங்கப்பாவை கிண்டல் பண்ணப்பயெல்லாம் எனக்கு அழுகையா வரும். கொஞ்ச நாள் கழிச்சு லேசா சிரிப்பு வந்தது..அப்புறமா பாப்பு கிட்ட அவ புருஷன் உன்னைக் கை காண்பிச்சு சிர்ச்சுக்கிட்டிருந்தப்போ நீ பார்த்துக்கிட்டுருந்த பார்வைல தான் எவ்வளோ பெருமிதம். எங்கப்பாவுக்கும் அன்னிக்கு அப்படிதானே இருந்திருக்கும். சே! அதுக்குப் போய் அழுதிருக்கேனே! யோசிச்சுப் பார்த்தா... கல்யாணம் ஆகி ஒரு நாலஞ்சு வருஷத்துல என்னை சேர்ந்தவங்க எல்லாரும் எனக்கு அன்னியமா தெரிய ஆரம்பிச்சாங்க. அந்தளவுக்கு நீ என்னை ஆக்கிரமிச்சிருந்த! நான் உனக்கு அப்படி என்னடா பண்ணினேன்? எதுக்காகடா என் மேல அவ்வளோ பாசத்தைக் கொட்டுன நீ? உலகத்துல இவ்வளவு சந்தோஷமா ஒரு மனைவி இருப்பாளாடா?

இத்தனையும் இப்ப எதுக்குன்னு கேக்கறியா?முதல்லயே சொன்னேனே "உள்ளுணர்வு". இதுவரைக்கும் என் உள்ளுணர்வு தவறினதே இல்லை. எனக்கு என்னமோ பயமாவே இருக்குடா. உனக்கு ஏதோ ஆயிட்டுருக்கு.எதையோ என் கிட்ட இருந்து மறைக்கிற. எதை என்கிட்ட இருந்து மறைக்க நினைச்சாலும் உன் கண்ணு காட்டிக் கொடுத்துடும். இன்னைக்குக் காலைல இருந்து உன் கண்ணு என் கிட்ட பொய் சொல்லத் திணறுது. உனக்கு ஏதாவது ஒன்னுன்னா அதுக்கப்புறம் இந்த உலகம் எப்படி சுத்தும்ங்கிறதை பார்க்கிற தைரியம் எனக்கில்லை. எப்பவும் கிழிச்சுப் போடுற லெட்டரை இந்த முறை கிழிச்சுப் போடணும்னு தோணலை.

இன்னும் என்னென்னவோ எழுத தோனுதுடா... நாம போன ஆல் இண்டியா டூர்..ஒரு தடவை நீ ரேடியோல ப்ரோகிராம் பண்ணது... நான் டைஃபாய்ட்ல கிடந்தது.. ஏதேதோ ஞாபகத்துக்கு வருது..அதெல்லாம் அப்படியே எழுதினா , அழுது லெட்டர் ஈரமாகிடும்.வேண்டாம்!

இப்போ என்னோட இந்த நினைவுகளை டேபிள் மேல வச்சிடறேன். ஒரு வேளை நாளைக்கு உனக்கு இதை படிக்கிற சந்தர்ப்பம் இருந்து என்னைக் கிண்டல் பண்ணாலும் பரவாயில்லை.

இப்போ உன்னைக் கட்டிப்புடிச்சுத் தூங்கணும் போல இருக்கு. உன்கிட்ட சொன்னா "போடி கெழவி..."ன்னு கிண்டல் பண்ணுவ. அதனால ஹனிமூன்ல நீ எனக்குக் குடுத்த கிஃப்டை கட்டிப் புடிச்சுத் தூங்க போறேன்.

இப்படிக்கு

உன் செல்ல பொண்டாட்டி

சைந்தவி

**************************************************************************************

இன்றைக்கு தான் எல்லா சடங்கும் முடிந்தது. வீட்டை சுத்தம் செய்யும் போது இந்தக் கடிதம் என் கைக்குக் கிடைத்தது.அங்கிள் கடிதம் எழுதும்போது இந்தக் கடிதம் டேபிள் மேல்தான் இருந்திருக்கவேண்டும்.இதை அங்கிள் வாசித்திருப்பாரா?...தெரியவில்லை.என்ன மாதிரி அடர்த்தியான காதல் இது. வாழ்க்கையில் எதையும் நாம மிஸ் பண்ணிடக் கூடாது பாப்பு.இவங்களை நெனைச்சா சந்தோஷமா இருக்கு. ஆனா இப்பொ மனசு முழுக்க வெறுமையா இருக்கிறது நிஜம்.அழுது வீங்கின கண்களுடன் பாப்பு என் நெஞ்சில் முகம் புதைத்து தூங்கிக் கிட்டிருக்கா. இவளை நான் எப்படி காதலிக்கப் போறேன்? யெஸ்... ஆன்ட்டி கட்டிப்புடிச்சுத் தூங்கின அந்த ஹனிமூன் கிஃப்ட். அது என்னவாயிருக்கும்? "


கனத்த இதயத்துடன் தன் டைரியை மூடிய படி, பாப்புவை தலையணையில் கிடத்திவிட்டு , அரை வெளிச்சத்தில் அந்த கிஃப்டை தேடத்துவங்கினான் விஷ்வா.

பின் குறிப்பு : இது வெளியூர்காரன் எழுதிய மீ டூ சைந்தவி யின் தொடர்ச்சி. அவனைக் கேட்காமலே அவனுடைய சைந்தவி பற்றி எழுதியதற்கு அவன் என்னை மன்னிக்க வேண்டும். தொடர் பதிவு , தொடர் சிறுகதை என்றெல்லாம் சொல்லி உங்களை துன்புறுத்த விரும்பவில்லை. நண்பனின் மேலும் அவனுடைய படைப்பின் மேலும் உள்ள உரிமையில் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனம் செய்திருக்கிறேன். இந்தக் கதையையும் யார் வேண்டுமானாலும் தொடரலாம் வெளியூர்காரனின் அனுமதியோடு

அட்ரஸ் மாறிப்போச்சு மிஸ்டர் பட்டாபட்டி!


முன் குறிப்பு :

யோவ் பட்டாபட்டி !யாரோ ரெண்டு பேர் உனக்குப் போட வேண்டிய லெட்டரை எனக்கு அனுப்பிச்சிட்டாங்கய்யா..கொஞ்சம் என்னன்னு பாரு!

************************************************************************************************
லெட்டர் 1


அன்புள்ள பட்டாபட்டிக்கு,

வணக்கம். இதுவரைக்கும் தமிழ் சினிமா பயங்கர கறுப்பா நிறைய பேரை பார்த்திருந்தாலும் கறுப்பா பயங்கரமா இருக்கிறது நான் மட்டும் தான். பத்து வருஷத்துக்கு ஒரு முறை என் படம் எதுனா சூப்பர் ஹிட் ஆயிடும், அதுவும் என்னால இல்ல. எவனாச்சும் நல்ல டைரக்டர் நல்ல கதையோட சிக்கிருப்பான்.

தொப்புள்ல பம்பரம் மட்டுமே விட தெரிஞ்ச என்னை ரிக்கி பான்டிங், தோனி ரேஞ்சுக்கு கேப்டன்னு கூப்பிட்டு என்னை நம்பியும் முட்டாப் பசங்க ரசிகர் மன்றம் வச்சு வாழ்ந்துகிட்டிருந்தாங்க.அவனுகளோட அரசியல் ஆசைல மண் அள்ளிப் போடக்கூடாதேங்கிற நம்பிக்கைல நானும் கட்சி ஆரம்பிச்சேன். பாருங்க பட்டாபட்டி சார் அன்னிலேருந்து எனக்கு கிரகம் ஸ்டார்ட் ஆயிடுச்சு! கிரகத்துக்கு ஒரே ஒரு சீட் ஜெயிச்சு எம்.எல்.ஏ வும் ஆயிட்டேன்.திடீர்னு ஒரு நாள் என் கல்யாண மண்டபத்தை இடிச்சுப் போட்டு என்னையே ஒன் வே ல போக வச்சுட்டானுங்க!

என் கட்சிக்கார பயலுக ஒரு தடவ என் படத்தைப் பார்த்திருந்தாலே ஒவ்வொரு படமும் 100 நாள் ஓடிருக்கும்.ஆனா அவனுகளும் தெளிவாதான் இருந்திருக்கானுங்க.

பார்லிமெண்டுக்கு தேர்தல் நடந்தப்போ என்னை நம்பியும் என் கூட கூட்டணி வச்சிக்கலாம்னு சில கேனப் பயலுக சுத்திக்கிட்டு இருந்தானுக. அவனுகளையும் எகத்தாளமா கழட்டி வுட்டுட்டேன். மக்களை நான் தப்பா கணிச்சுட்டேனா இல்லை அவங்க என்னை சரியா புரிஞ்சுக்கிட்டாங்களான்னு தெரியலை..சமீப காலமா நாங்க டெபாசிட்டே வாங்கறதில்ல!நானும் என் அண்ணியும்...சே..தொண்டர்களோட அண்ணியும் , என் மச்சானும் சேந்து குடும்ப அரசியல் பண்ணக் கூடாதுன்னு முடிவு பண்ணினோம். ஒண்ணும் வேலைக்கு ஆகல! வர்ற தேர்தலுக்கு சுப்பிரமணிய சாமி கட்சி கூட என்னோட கூட்டணி வைக்க மாட்டானுங்க போல தெரியுது!

இப்போ நான் என்ன செய்யலாம் பட்டாபட்டி சார்? கௌரவமா கட்சியை கலைச்சிட்டு மதுரைக்குப் போய் ரைஸ்மில் நடத்தலாமா..? இன்னுமொரு பத்து வருஷம் வெய்ட் பண்ணி ஒரு ஹிட் படம் குடுக்கலாமா..என் வாழ்க்கைல ஒரு ஒளி ஏத்தி வைங்க பட்டாபட்டி சார்

இப்படிக்கு

தமிழ் சினிமாவின் நிரந்தர போலீஸ் ஆபீசர்************************************************************************************************************

லெட்டர் 2

மிஸ்டர் பட்டாபட்டி..

எனக்க்கு யார்கிட்டயும் எப்பவும் ரெக்வெஸ்ட் பண்ணிப் பழக்கமில்ல. ஆனா நீங்க எல்லாத்துக்கும் சொல்யுஷன் சொல்லுவீங்களாமே. நான் அந்த காலத்து கான்வென்ட் கேர்ல். நல்லா டான்ஸ் பண்ணுவேன். நல்லா நடிப்பேன். ரொம்ப வருஷமா எம்.ஜி.ஆர் கட்சியை அவர் செத்தப்புறம் நான் தான் மெய்ன்டெய்ன் பண்றேன்! தமிழ்நாட்டுக்கு ரெண்டு டெர்ம் சி.எம்மா இருந்திருக்கேன் . ஆனா பாருங்க பட்டாபட்டி இப்போ தமிழக மக்கள் ஒரு மைனாரிட்டி அரசால பயங்கர துன்பத்துல இருக்காங்க.You know what நான் ஒரு இரும்பு மனுஷி! எல்லாருக்கும் அம்மா. ஆனா எனக்கும் ரெஸ்ட் தேவை தானே..அதுக்காக கொடநாட்ல போய் ரெஸ்ட் எடுத்தா இந்த மைனாரிட்டி மீடியா ரொம்ப பேசறானுங்க. மைனாரிட்டி கூட்டணி கட்சிக் காரனுங்களும் வெளில வேற போக மாட்டேங்குறானுங்க.( ஸாரி..ஒவ்வொரு தடவையும் மைனாரிட்டி என்கிற வார்த்தை அதுவாவே சேந்துக்கும் ..கண்டுக்காதீங்க)

எல்லாத்துக்கும் மேல என் கட்சி எம்.எல்.ஏக்கள் எல்லாம் சேந்து குரூப் குரூப்பா மைனாரிட்டி ஆளுங்கட்சில சேந்து எங்களையே மைனாரிட்டி எதிர்க்கட்சி ஆக்கிடறானுங்க. இந்த மைனாரிட்டி எஸ்.வி.சேகர் வேற ஆளுங்கட்சி கூட்டத்துக்குப் போய் அடிக்கடி மானத்தை வாங்கறார். விலைவாசியை எதிர்த்துப் போராடலாம்னா காங்கிரஸ் கோவிச்சுக்கும். ராமதாஸ் கட்சியோட கூட்டணி வச்சிக்கிறதுக்கு பதிலா நான் திரும்ப சினிமாவிலேயே நடிக்கப் போயிடுவேன். பா.ஜ.க அட்டர் வேஸ்ட். வைகோவையும் கம்யூனிஸ்ட்களையும் துரத்திவிட்டாலும் போக மாட்டேங்குறாங்க.

சிங்கபூர்ல ஹோட்டல் என்ன ரேட் போகுது...? சாரி பழக்க தோஷம். இப்போ நான் என்ன பண்ணலாம் பட்டாபி? யோசிச்சு நிதானமா எங்கயாவது போய் ஆறு மாசம் ரெஸ்ட் எடுத்து பொறுமையா சொன்னாக் கூட போதும். ஏதாவது ஏடாகூடமா பதில் சொன்னீங்கன்னா அடுத்த ஆட்சில நடு ராத்திரில தூக்கிடுவேன் ஜாக்கிரதை!

இப்படிக்கு

இத்ய தெய்வம் டாக்டர் பொதுச்செயலாளர் புரட்சி தலைவி etc etc....


ஹோசான்னா ! விண்ணைத் தாண்டி வந்தாச்சே


தமிழ் சினிமாவுக்கு நல்ல பேய் ஏதாவது பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறதா என தெரியவில்லை. வித்தியாசமான Genre படங்கள் வெளிவந்து எல்லாரையும் தியேட்டருக்குள் இழுக்கின்றன. ஒரு ஃபான்டஸி ஃபிக்ஷன், ஒரு வங்கி கொள்ளை, ஒரு spoof ,கோவா என படங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை! சமீபத்தில் அப்படி ஆச்சர்யப் படுத்தியது விண்ணை தாண்டி வருவாயா என்னும் ஒரு புதுக்கவிதை.

மழை நேரத்தில் ஸ்பென்ஸர் பிளாசா வாசலில் உட்கார்ந்து கொண்டு காதலியுடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல படம் நெடுக ஒரு சாரல் அடித்துக் கொண்டே இருந்தது. கௌதம் நல்ல படம் எடுக்கிறாரோ இல்லையோ , காதலை வெறி கொண்டு ரசித்திருக்கிறார். காதலின் தோல்வியை படு எதார்த்தமாக திரையில் சித்திரம் வரைந்திருக்கிறார்.

கௌதம் நிச்சயமாக ஏதோ ஒரு கேட்டில் நின்று கொண்டு ரசிக்க ரசிக்க சைட் அடித்திருக்க வேண்டும்! அவரது முதல் காதல் அமெரிக்கா பறந்திருக்க வேண்டும். ஏதோ ஒன்று..நமக்கு நல்ல படம் கிடைக்கிறதே! இரண்டே கேரக்டர்கள்..பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.ஆனால் சலிப்பு தட்டவில்லை. காதலும் காதல் சார்ந்த இடங்கள் மட்டுமே லொகேஷன்களாக வருகின்றன.சொட்டச் சொட்டக் காதல், பொங்கி வழிகிற காதல் என ... கார்த்திக்கும் ஜெஸ்ஸியும் பல இடங்களில் சிக்ஸர் அடித்திருக்கிறார்கள்.ஒரு சில இடங்களில் டக் அவுட் ஆகியிருக்கிறார்கள்.

எங்கெல்லாம் படம் கிண்டலடிக்கப் படும் சூழ்நிலை இருக்கிறதோ அங்கு கௌதமே கிண்டல் செய்து கொள்வது புத்திசாலித்தனம். த்ரிஷாவின் funny walk ... த்ரிஷா கல்யாண சீன்கள் ...கடைசியில் படத்தின் ரிசல்ட் பற்றி பேசும் சீன்கள் எல்லாம் ஜாலி கேலிகள்.

மிகவும் ஆச்சர்யம் சிம்பு! குறிப்பாக அமெரிக்காவில் பார்க்கில் உட்கார்ந்து த்ரிஷாவிடம் பேசும் காட்சி.உங்களுக்கு இவ்வளவு நடிக்க வருமா சிம்பு? இதே போல நாலு படம் நடித்தீர்களானால் உங்களை ரசிப்பவன் என்று தைரியமாக வெளியில் கூறிக்கொள்ளலாம் உங்கள் ரசிகர்கள். அதே போல் ஒரே எக்ஸ்பிரஷனை வைத்துக்கொண்டு ஒப்பேற்றி வந்த த்ரிஷா மற்ற டைரக்டர்களுக்கு ஒரு செய்தி சொல்லியிருக்கிறார். வெறுமனே டூயட் பாட மட்டும் கூப்பிடாதீர்கள் என்பதே அது!

ஒளிப்பதிவும், காஸ்ட்யூம்ஸும் இசையும் பொருந்தியிருக்கிறது படத்துடன். ஆனால் , அமெரிக்கா , அந்த டான்ஸர்கள், கைகோர்த்துக் கொண்டு ஊர்சுற்றும் ஒரு டூயட் பாடல் என பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் தவிர்த்துவிடுங்கள் கௌதம்.சலிக்கிறது!

படத்தில் ஒரு விரசம் இல்லை, ஒரு முகம் சுழிக்கவைக்கிற காட்சிகள் இல்லை.இந்த படத்துக்கு ஏன் யூ/ஏ சர்ட்டிஃபிகேட் கொடுத்தார்கள் என தெரியவில்லை. சில முத்தக் காட்சிகள்..அதுவும் ராணி 6 ராஜா யாரு பார்க்கும் தமிழ் நெஞ்சங்களுக்கெல்லாம் இது ஜுஜுபி. நம் சென்சார் அதிகாரிகளுக்கு வரலாற்று ரீதியாகவே ஏதோ பிரச்சினை போல.

எத்தனையோ ரயில் கிளைமாக்ஸ் படங்களை ஆதரித்த தமிழ் ரசிகர்கள் இந்த படத்தின் கிளைமேக்ஸுக்காகவும் நிச்சயம் ஆதரிப்பார்கள்.

Congrats to Karthik, Jessy and Gowtham!

சச்சினும் ஜட்டி விளம்பரமும் வொயிட் நைட்ஸும்!ரொம்ப கஷ்டமா போச்சு சார்! இந்த படு பாதக பய மனசு எதெதுக்கெல்லாம் கிடந்து அடிச்சிக்குது பாருங்க! சச்சின் 200 அடிச்சுப்புட்டாரு..யாரோட? சாம்பியன்ஸ் பங்களாதேஷோடயோ ஜிம்பாப்வேயோடயோ இல்லை... சொத்தை டீம் சௌத் ஆஃப்ரிக்காவோட...எவன் வேணா அடிப்பான்! இதெல்லாம் நாட்டுக்கு ரொம்ப அவசியமா? நீங்களே சொல்லுங்க?


எனக்கு என்ன தோணுதுன்னா..இதனால சச்சினுக்கு ஜட்டி விளம்பரம் கிடைக்கும்..ஆனா தெலுங்கானா பிரச்சினை தீருமா... தீராது! காஷ்மீர் பிரச்சினை ஓயுமா...ஓயாது! என்ன கருமம் சார் இது..நாட்டுல எவனுக்கும் சிந்திக்கவே தெரியலை! மூளை கெட்டுப் போய் கிறுக்குப் புடிச்சு அலையிறானுங்க..இப்படிதான் சார் ஏ.ஆர்.ரகுமான்னு ஒரு பய... நாட்டுல எவ்வளோ பிரச்சினை இருக்கு...அதை பத்தியெல்லாம் கவலைப் படாம அவன் பாட்டுக்கு ம்யூசிக் போட்டுட்டு இருக்கான்..அவனை கண்டிச்சு வளர்க்க ஆளில்லாம போச்சு வாத்யாரே...இந்த லட்சணத்துல அவன் போட்ட பாட்டுக்கு அவனுக்கு ஆஸ்கார் வேற...

அவனுக்கு ஆஸ்கர்னு கேட்ட போது நெஞ்செல்லாம் எனக்குப் பதறிடுச்சு! இதனால அவனுக்கு ஹாலிவுட் சான்ஸெல்லாம் வேற கிடைக்கும்...நம்மாளு ஒருத்தன் வெளிநாட்ல போய் சாதனை செஞ்சா நமக்கு எவ்வளவு அசிங்கம் சார்! சே.. இவனுங்க எல்லாம் எப்பதான் திருந்த போறாங்களோ...ஆஸ்கார் மேடைல ரகுமான் பேசின தமிழை கேட்டப்போ..எனக்கு மானமே போயிடுச்சி!ஈழத்தமிழர் பிரச்சினை நடக்கும் போது அதிகமா பாராட்டு விழா வேண்டாம்னு சொன்ன இவன்லாம் ஒரு தமிழன்!

ஏர்டல் விளம்பரத்துக்காகத்தான் அவன் இவ்வளோ நாள் ம்யூசிக் போட்டு நேஷனல் அவார்டெல்லாம் வாங்கினான்னு நான் சொன்னா எவனும் நம்ப மாட்றானுங்க சார்!..

அப்புறம் இந்த சச்சின் பயலுக்கு தேசபக்தி இருக்கற மாதிரி நடிக்கவே தெரியலை சார்.. சென்னை ல பாகிஸ்தானோட ஆடும்போது முதுகைப் பிடிச்சுக்கிடே ஆடினானே..அதுலயெல்லாம் நடிப்பு பத்தாது சார்! கைல காயம், கால் ல காயம்,முதுகில ஆபரேஷன்.. இதெல்லாமே பிசாத்து ஜட்டி விளம்பரத்துக்காகத்தானே! அப்பா செத்த நாலு நாள் ல செஞ்சுரி போட்டதெல்லாம் காசு குடுத்து தான போட்டாரு! எனக்கென்னவோ இந்த நாடு உருப்படும்னு தோணலை சார்!

இதுக்காக மட்டும் தான் மனசு கஷ்டப்பட்டுச்சுன்னு நினைக்காதீங்க...ரோஜர் ஃபெடரர் ரெக்கார்ட் மேல ரெக்கார்ட் பிரேக் பண்ணப்பவும் தனியா உக்காந்து அழுதேன்! இந்த மனுஷன் அவங்க நாட்டுக்காக இப்படி துரோகம் பண்றாரேன்னு! அப்புறம் உசைன் போல்ட்..நீச்சலடிப்பானே ஒரு பையன்..மைக்கேல் ஃபெல்ப்ஸ்..அவன் செஞ்ச சாதனைக்கு அவனை தூக்குல போட்டாதான் சார் என் மனசு ஆறும்!

இவனுகளுக்கு இதே பொழைப்பு சார்...சாதனை ஏதாவது செய்ய வேண்டியது... நாட்டுல நல்ல பேர் வாங்க வேண்டியது...என்னை இப்படி பதிவு போட்டு அழவைக்க வேண்டியது? அடிச்ச 200 ரன்னை இவ்வளோ நாள் சப்போர்ட் பண்ண மக்களுக்கு அர்ப்பணிச்சுட்டு தேச்சபக்தியை ஜட்டிக்குள்ள வச்சிடறானுங்க சார்! நாங்க எல்லாம் பதிவு எழுதியே நாட்டை காப்பத்தணும்... இவனுக ரெக்கார்டுகளை எல்லாம் உடைச்சிட்டு இந்தியாவுக்கு அவமானத்தை தேடித் தருவாங்க! என்ன மனுஷங்க சார் இவங்க?

இப்படிக்கு என்றுமே ஜட்டி விளம்பரம் கிடைக்காத கோபத்துடன்

ஒரு ப்ளாக்கர்!

(இந்த பதிவு எதற்காக என்று நினைத்து ஏங்கும் நெஞ்சங்கள் புலவன் புலிகேசி பக்கத்துப் போங்க..விடை கிடைக்கும்!அப்புறம் எங்களுக்கு எதிர்பதிவு போடறதா நினைச்சு சச்சினின் தேசபக்தியை திரும்பவும் அவமானப் படுத்தினால் அவர்கள் சங்கு, சச்சின் சத்தியமா அறுக்கப்படும்....இப்படிக்கு கடவுள் சச்சினின் சாதுவான பூசாரிகள்)

Repair almost Anything


My name is Khan and am not a Terrorist என்று முதல் காட்சியில் ஏர்போர்ட் அதிகாரிகளிடம் ஷாருக் கான் சீறும் போது நமக்குள் லேசாக ஒரு அதிர்வு ! மதத்தின் பெயரால் பயங்கரவாதம் செய்யும் கொலைகாரர்களை விட அதிகம் துன்பங்களை தினமும் சின்ன சின்ன அவமானங்களை சந்திக்கும் அதே மதத்தின் சாமானியர்களின் வலி துயரமானது. ஒரு பாஸ்போர்ட் எடுக்கும்போதும் நண்பர்கள் மத்தியில் கேஷுவலாக அரசியல் பற்றியோ பேசும் போதும் அவர்கள் நிச்சயமாக வெளியில் சொல்ல முடியாத அசௌகரியத்தை உணர்வார்கள்.ஆனால் அதை திரைப்படமாக எடுப்பது கொஞ்சம் சிக்கல் தான்.அதுவும் பெரிய ஸ்டார்களை வைத்துக் கொண்டு.


Asperger's Syndromeல் பாதிக்கப் பட்ட ரிஸ்வான் கான்(ஷாருக்) ஒரு சில விஷயங்களில் புத்திசாலி.எந்தப் பொருளையும் ரிப்பேர் செய்யும் அளவுக்கு புத்திசாலி.தம்பியின் நிறுவனத்தில் அழகுப் பொருட்கள் விற்கும் சேல்ஸ்மேன் வேலை கிடைக்கிறது.பியூட்டி ஷாப்பில் வேலை செய்யும் மந்திராவிடம் (கஜோல்)காதல் கொள்கிறார்.டைவர்ஸ் ஆகி மகனுடன் தனியே வாழும் மந்திராவுடன் நெருக்கம் ஏற்பட்டு கல்யாணமும் செய்து கொள்கிறார்.வாழ்க்கை ஜாலியாகப் போகிறது 9/11 சம்பவம் வரை. அதுவரை நன்பனாகப் பார்த்த மந்திராவின் மகனை அவனுடைய பள்ளியிலும் வெளியிலும் வெறுப்புடன் பார்க்கிறார்கள். ஒரு சின்ன தகராறில் அவனை கொன்றும் விடுகிறார்கள்.

 தன் மகனுக்கு ஒரு முஸ்லிம் தகப்பனாக வந்ததால்தான் அவனை இழந்தோம் என்ற விரக்தியில் ரிஸ்வான் கானிடம் கோபம் கொள்கிறாள். ரிஸ்வான் சமாதானம் செய்ய முயல்கையில் "போ..போய் நாங்கள் தீவிரவாதியில்லை என அதிபரிடம் சொல்லிவிட்டு வா.."என துரத்தி விடுகிறார். ரிஸ்வானின் பயணம் துவங்குகிறது. போலீஸில் மாட்டிக் கொள்வது, தீவிரவாதத்தை எதிர்ப்பது..ஹரிகேன் புயலில் சிக்கியவர்களை மீட்பது தேசத்தின் ஹீரோ ஆவது என பிற்பகுதி முழுக்க ஃபாரஸ்ட் கம்ப்.

டாம் ஹேங்ஸில் ஐம்பது சதவீதமாவது செய்து விடவேண்டும் என்கிற முனைப்பு ஷாருக்கிடம் தெரிகிறது. கஜோல் குச் குச் ஹோத்தா ஹை போல துறு துறுவென நடிக்க முயல்கிறார். பாவம் வயது ஒத்துழைக்க மறுக்கிறது போலும்.சோக காட்சிகளில் அசத்தல்.

கரன் ஜோஹருக்கு ஒரு வார்த்தை.. இது போன்ற சென்சிடிவான படங்களில் உங்கள் டிரேட் மார்க் காட்சிகளை ஒதுக்கி விடுங்கள். படத்தின் ஆதார செய்தி அடிபட்டு விடுகிறது.ஆனால் சில காட்சிகள் மனசை உருக்குகிறது. ஆஃப்ரிக்க மக்களுக்கு நிதி சேர்க்கும் காட்சி, 9/11க்கு பிறகு நடக்கும் அஞ்சலிக் கூட்டம் என சில காட்சிகள் அற்புதம். ஹம் ஹை விஷ்வாஸ் என ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பாடுவது கரன் ஜோஹர் படத்தில் மட்டுமே நடக்கும்.
 
ரவி.கே.சந்திரன் , ஷங்கர் எசான் லாய், தீபா எல்லாரும் இந்த கதைக்கு என்ன தேவையோ அதைவிட அதிகமாகவே கொடுத்திருக்கிறார்கள்.

Religion was man's emotional response to unknown என்றார் Marret. எல்லா முஸ்லிம்களும் தீவிர வாதி அல்ல என்பதை சொல்ல வந்த ஷாருக் கரண் கூட்டணி ஹரிகேன் புயல் , Asperger's சின்ட்ரோம் , ஃபாரஸ்ட் கம்ப் என எங்கெங்கோ போய் சொல்ல வந்ததை கோட்டை விட்டு விட்டார்கள்.

மணிரத்தினத்தின் அஞ்சலி ஸ்பீல்பெர்கின் ஈ.டி(Extra Terrestrial) படத்தின் பிரமாதமான இன்ஸ்பிரேஷன் என்றால் MNIK , Forrest Gump ன் மிதமான இன்ஸ்பிரேஷன்.

வெளியூர்காரனிடம் ஒரு அசல் பேட்டி!


வெத்து டோமர்,வேகாத டாபர் என்றெல்லாம் பொது மக்கள் அன்புடன் அழைப்பது யாரை?எல்லா ஃபிகர்களும் ரசிப்பதற்கே என்று டயலாக் விடும் ஆஸ்கார் நாயகன் யார்? விஜய் படம் வந்தாலும் அஜித் படம் வந்தாலும் விமர்சனம் செய்து சகட்டுமேனிக்கு அடி வாங்குவது யார்?கோரஸாக நீங்கள் கத்துவது கேட்கிறது...

இவருடைய பதிவுகளை படித்து விட்டு இப்படியொரு பீஸை நாங்கள் கண்டதில்லை என மரியா ஷரபோவாக்களும் ப்ரிட்னி ஸ்பியர்ஸ்களும் ஏன் வியாசர்பாடி முட்டு சந்தில் இட்லி விற்கும் ஆயாக்களும் கூட இனி எங்கள் ச்சோ ச்வீட் லவ்வர் பாய் வெளியூர்காரன் தான் என்று சத்தியம் செய்துள்ளனர்

களைப்பில் இருந்த மாவீரன் வெளியூர்காரனை பேட்டி எடுக்கலாமானு கேட்டேன். டைம்ஸ் பத்திரிக்கை கேட்டும் மறுத்த வெளியூர்காரன் (ச்ச..என்ன கருமம் டா!) ரெட்டைவால்ஸுக்கு அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்...

( நானும் எல்லா பேட்டிகள்லையும் பார்த்திருக்கேன்..முழு பகுதியை எங்க காயலான் கடைக்குப் போட்ருவானுங்களா)...சரி ஓகே..ஒவர் டூ வெளியூர்!

ரெட்டைவால்ஸ் : "வெளியூர்காரன்"ற பேர்ல எழுதுறீங்களே..இதுக்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா?

வெளியூர்காரன் :நான் முத முதல்ல மெட்ராஸ் வந்தப்போ எங்க போனாலும் வெளியூர்காரனா நீ?னு கேட்டு டார்ச்சர் பண்ணானுங்க. இதையே ஏன் புனை பெயரா வச்சுக்கக் கூடாதுன்னு யோசிச்சேன்.

ரெ.வா:எங்க எல்லாம் இந்த மாதிரி பல்ப் வாங்கினீங்க?

வெ.கா:டீ கடைல, துணிக்கடைல, தியேட்டர்ல அப்புறம் நான் போன எல்லா எடத்திலயும்! பய புள்ளைக பார்த்தவுடனே கண்டுபுடிச்சிடறானுங்க.

ரெ.வா: ரொம்ப நல்லது! எழுதணும்னு உங்களை யார் கட்டாயப் படுத்தினா?

வெ.கா: சுஜாதா இறந்தப்போ ரொம்ப கஷ்டமாயிருந்தது. அந்த வெற்றிடத்தை யார் நிரப்பப் போறான்னு யோசிச்சப்போ சட்டுனு இந்த முடிவெடுத்துட்டேன்.

ரெ.வா:இதனால மக்கள் பாதிக்கப்படுவாங்கங்கறதை நீங்க யோசிச்சுப் பார்க்கலையா?

வெ.கா:அவனவன் அசல் படம் பாக்கறதுக்கு லைன் கட்டி நிக்கிறான்..நான் என்ன அப்படியா சாவடிச்சுடப் போறேன்!

ரெ.வா: சரி வெளியூர்காரன் உங்க பார்வைல தமிழ் சமூகம் எப்படி இருக்கு?

வெ.கா: வெளங்காது

ரெ.வா: என்னது வெளங்காதா?

வெ.கா:ரொம்ப கஷ்டம் சார்!(பேசிக் கொண்டிருக்கும் போதே கண் கலங்குகிறது....) ஃபிரண்ட்ஸ் கிட்ட பெட் கட்டினேன் சார்.. வேட்டைக்காரன் படம் 200 நாள் ஓடப் போவுது... தலைவர் அரசியல்ல கலக்கப் போறார்..பார்லிமெண்ட்ல பஞ்ச் டயலாக் பேசுவார்..அதைக் கேட்டு சோனியா காந்தியே பயப்படுவாங்கன்னு என்னென்னமோ கனவு கண்டேன் ..எல்லாம் பாழாப் போயிடுச்சு! நேத்து கூட ஒருத்தன் ஃபோன் பண்ணான். மாப்ள..போண்டா மணி ரசிகர் மன்றம் திறக்கறாங்களாம்.தலைவர் பதவி எடுத்துக்கிறியான்னு நக்கல் பண்ணான் சார். ஆனா நாங்க அசர மாட்டோம். சுறாவை விட்டு எல்லாரையும் கடிக்கலைன்னா பாருங்க...தலைவரை கிண்டல் பண்ணி எஸ்.எம்.எஸ் அனுப்பியே என்னை நோகடிக்கிறானுங்க... இந்த தமிழ் சமூகம் உருப்படுமா சார் நீங்களே சொல்லுங்க!

இளைய தளபதி வாழ்க

இளைய தளபதி தகப்பனார் வாழ்க..சாரி சார் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன்!

ரெ.வா: நீங்க நிறைய சினிமா விமர்சனம் பண்றீங்களே.. அடூர் கோபால கிருஷ்ணன் மதுர் பண்டார்கர் படங்களை பத்தியெல்லாம் ஏன் எழுத மாட்றீங்க?

வெ.கா : பண்டார்கரா..எதுனா புது டைப் பிரியாணிங்களா! ஏன்யா யோவ்..வேட்டைக்காரன் பாக்குற முட்டாப் பயகிட்ட பேரலல் சினிமா..அவார்ட் சினிமான்னு உளறிட்டு இருக்க...நாங்க எல்லாம் ஒரு தடவை முடிவு பண்ணோம்னா.. எங்க பேச்சை நாங்களே கேக்கமாட்டோம் யா..

இளைய தளபதி வாழ்க
சஞ்சய் வாழ்க சந்திரசேகர் வாழ்க சங்கீதா வாழ்க...

சாரி சார் மறுபடி எமோஷனல் ஆயிட்டேன்...

ரெ.வா : ஏன் இவ்வளோ எமொஷன் ஆவுறீங்க!

வெ.கா : அது அப்படி தாங்க. தலைவரை பத்தி பேசும் போது யூரின் வந்துடுது..வாமிட்டிங் வந்துடுது..பிளட் பிரஷர் ஏறுது..(மனசுக்குள்... சுறாவாவது ஓடுமா...) நீங்க அடுத்த கேள்வியை கேளுங்க சார்

ரெ.வா: ரீமேக் படங்களைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?

வெ.கா : ரொம்ப நல்ல விஷயம். வெறும் டைட்டில மட்டும் சுட்டு என்ன பிரயோஜனம்? கதையோட அல்லேக்கா தூக்கினாதான எடுபடும்! இவனுங்களுக்கு பிரஸண்டேஷன் வரலை.. ரெண்டு மாசம் முன்னாடி சோனா ஏன் ஆஸ்திரேலியா போனாங்க என்ற அதி முக்கியமான கேள்வியை நீங்க இன்னும் கேக்கலைங்கறதை நினைவு படுத்த விரும்புறேன் ரெட்டைவால்ஸ்!

தளபதி வாழ்க.

ஸாரி பா...மறுக்கா டென்ஷன் ஆயிட்டேன்...

ரெ.வா :சரி சொல்லுங்க ரெண்டு மாசம் முன்னாடி சோனா ஏன் ஆஸ்திரேலியா போனாங்க?

(சோனா ஏன் ஆஸ்திரேலியா போனங்க என்பது பற்றியும்,,மேலும் பதிவுலகம், தமிழக அரசியல் , 2011 ல் யார் முதல்வர், தான் ஒரு லவ்வர் பாய் ஆனது பற்றியும் மனம் (மற்றும் கண்டதையும் )திறந்த வெளியூர்காரனின் பதில்கள் ...அடுத்த பதிவில்!)

தனிமையுடன் ஒரு தனிமை
சில தருணங்களில் தனிமையை கொண்டாடுகிறேன்

சில நேரம் ஆயாசம்

தொடர்புகள் அற்றுப்போன

பைத்தியக்கார வெளிகளில் அலைய விரும்புகிறது மனம்.

பாரதியின் ஞானரதம் போல் எனக்கொன்று கிடைக்காதா?

மா பலா வாழை பக்கார்டி

எங்ஙனம் திரும்புவேன் கர்ப்பப்பைக்குள்

மெய்யெனக் காற்றும் பொய்யெனத் தீண்டலும்

ஜன்னல்கள் இல்லாத வீட்டின் மேற்கூரையில்

பல்லி போல் ஒட்டிக் கொள்கிறேன்

சங்குக் கூச்சல்களை கண்டு பயந்திருக்கிறீர்களா?

ராப் பொழுதின் கடற்கரைக் காற்று?

கழுவாத தேநீர் கோப்பைகள்?

சீரான மின்விசிறியின் சப்தம்?

தொடர்ந்தடிக்கும் தொலை பேசி?

யாருக்கேனும் நஷ்டமுண்டா

தனிமையுடன் தனிமையுடன் எனை நான் கொண்டு போனால்!

அகல்யாவுக்கு- A Letter from Constant Lover
அகல்யாவுக்கு!


நீ எப்படி இருக்கிறாய் என்பதை விட எப்படி இருப்பாய் என்பதில் தான் இப்போது ஆர்வம் அதிகம். நாம் படித்த ஸ்கூலை பார்க்கும்போது இப்போது உனக்கு என்ன தோன்றுகிறதோ தெரியவில்லை. எனக்கு நிச்சயம் நாம் கடலை போட்ட மரத்தடி கண்ணுக்குத் தெரிகிறது. நான் மென்று துப்பிய பபிள்கம்கள், நீ என் தலைமுடியை கலைத்து விளையாடியது என்று எல்லாமும் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.ஆனாலும் ஜிவ்வென்று இருக்கிறது. எத்தனை எத்தனை சுவாரஸ்யங்கள்...அத்தனையையும் உன் கணவனிடம் சிரித்துக் கொண்டே சொல்லியிருப்பாய் என நம்புகிறேன்.

கடைசி பெஞ்சின் இந்தப் பக்கம் நானும் அந்தப் பக்கம் நீயும். எத்தனை லூட்டி அடித்திருப்போம்? உனக்கு ஒன்றாவது ஞாபகமிருக்கிறதா அகல்யா..? நான் ஒரு முறை தற்செயலாக பிராக்டிகல் நோட்டின் ஒரு பக்கத்தில் கிறுக்கிவிட்டேன் என்று அந்த கெமிஸ்ட்ரி டீச்சர் பேயாட்டம் ஆடிய போது, இரண்டே நாளில் முழுவதும் எழுதி தந்தாயே..அப்போதே முடிவு செய்துவிட்டேன் நீ தான் என் வாழ்க்கை என்று. ஆனால் விதியை பார்த்தாயா... நீ எனக்கு இன்று வெறும் தியரி. நான் என் பேரக் குழந்தைகளுடன் கதைகள் பேசும்போது நீ என் கற்பனை கதாபாத்திரங்களுடன் கலந்திருப்பாய்.

உன்னைப் பற்றி சிலாகிப்பதில் எனக்கு அலுப்புத் தட்டுவதே இல்லை.என்ன செய்ய... திருநகர் மூன்றாவது பஸ் ஸ்டாப்பில் வைத்து உனக்குக் கிரீட்டிங் கார்டும் ஒரு மௌத் ஆர்கனும் கொடுத்து ஐ லவ் யூ சொன்னேன்..ஞாபகமிருக்கிறதா? அந்த கிரீட்டிங் கார்ட் நம் நண்பன் வாங்கிக் கொடுத்தது என்ற அதி பிரசித்தமான உண்மை உனக்குத் தெரியாமலே போகட்டும். அப்பொழுதே நீ வேண்டாமென்று சொல்லியிருந்தால் இப்படி இரவு கண்விழித்துக் கடிதம் எழுதிக்கொண்டிருந்திருக்க மாட்டேன்.பின்பொருமுறை மீனாக்ஷி அம்மன் கோவிலில் வைத்து எதேச்சையாகப் பார்த்து ( இதுவும் எதேச்சை அல்ல) பொற்றாமரை குளத்தில் வைத்து உன்னிடம் உளறிக் கொட்டிகொண்டிருந்தேன்.எத்தனை ரம்மியமான பொழுதுகள்.எங்கே போனாய் அகல்யா?

ஒவ்வொரு முறை பொய் சொல்லும் போதும் தலையில் ஒரு முடி உதிரும் என்று பயமுறுத்தி இருந்தாய். உன்னிடம் நான் ஒரு லட்சத்து முப்பதாயிரத்து இருநூற்று பதினேழு பொய்கள் சொல்லியிருக்கிறேன்.இன்னும் வழுக்கை விழவில்லை.அப்படியென்றால் நீ என்னிடம் சொன்ன முதல் பொய்யா அது?

நமக்குப் பிடிக்காத அந்த ஃபிஸிக்ஸ் மாஸ்டரை நான் கேள்வி கேட்டு படுத்தி எடுத்துக் கொன்டிருந்த போது உன் ஓரக்கண்ணில் எவ்வளவு பெருமிதம். அவர் என்னைக் கேவலமாக திட்டி கிளாஸ் ரூமை விட்டு வெளியே அனுப்பும் போது கூட உன் முகத்தில் பெருமிதம். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ஒரு பெண்ணின் கர்வம் இல்லையா அது? இன்றும் அந்த காட்சி என் கனவில் வந்து போகும்.ஆனால் ஃபிஸிக்ஸ் மாஸ்டர் முகம் மட்டும் லேசாக பிரகாஷ் ராஜ் ஜாடையில் வருகிறது.

அரையிருட்டில் அலைபாயுதே படம் பார்க்கையில் ஸ்னேகிதனே பாடல் வரும்போது என் தலை முடியை கோதி விட்டுக்கொண்டிருந்தாய்.அந்த நேரத்தில் பிரதமர் பதவி கொடுத்திருந்தால் கூட வேன்டமென்றிருப்பேன்.உன் கணவன் துரதிர்ஷ்டசாலி.அந்த பதினாறு வயது அகல்யவை நினைத்து இப்படி கடிதம் எழுதும் பாக்கியம் அவனுக்குக் கிடைக்குமா?

ஸ்கூல் முடிந்தவுடன் நான் ஃபுட்போர்டில் தொங்கியபடியே நண்பர்களுடன் பஸ்ஸில் போவதை உன் அம்மாவுடன் காரிலிருந்து ஒரு வித பதட்டத்துடன் பார்த்தபடியே பயணிப்பாய்.எந்த சினிமாவிலாவது அது வந்திருக்கிறதா அகல்யா... உன் தங்கை என்று ஒரு டெட்டி பியர் பொம்மையை அறிமுகம் செய்துவைத்தாயே.. எவ்வளவு வளர்ந்திருப்பாள் ? இப்போது அவள் பின்னால் என்னைப் போல் ஒரு அதிர்ஷ்டசாலி சுற்றிக் கொண்டிருப்பானோ?

என்னிடம் நீ கோபபப்பட்டு எனக்கு நினைவில்லை...அந்த கடைசி தினத்தைத் தவிர. என்னையும் இந்தப் பாழாய்ப் போன உலகத்தினுள் இழுத்து வந்து விடலாம் என்று எப்படி எப்படியோ முயற்சித்தாய்.Ha Ha Ha...Lovers dream.Dreamers love. I am a dreamer , damn it!

இதெல்லாம் காதல் இல்லை இன்ஃபாக்ச்சுவேஷன் என்று நண்பன் பிதற்றினான்.அது உண்மையென்றால் காதலை விட இன்ஃபாக்ச்சுவேஷனே எனக்கு மிகவும் பிடித்தமானது.நமது இந்த அபத்தமான இந்த காதலை பெரியார் நிலையம் பிரிட்டிஷ் பேக்கரி அருகில் வைத்து நீ முறித்துக் கொன்ட போது உன் மேல் எனக்குத் துளியும் கோபமில்லை.ஏனென்றால் நீ கனவிலிருந்து நிஜத்துக்குப் போய்விட்டிருந்தாய். நான் அந்த பெருங்கனவில் இருந்து வெளியே வர மறுத்துவிட்டிருந்தேன். நீ என்றைக்கு நிஜமான உலகத்தில் கலந்து விட்டாயோ அன்றே நீ என்னிலிருந்து இறக்கத் தொடங்கியிருந்தாய்.

ஸ்வாசங்கள் சீராக வரத் திணறும் இந்த தருணத்தில் நீ மூன்றாம் சாமத்தின் கனவுகள் முடியும் தருவாயில் இருப்பாய்! நடு இரவில் விழித்துக் கொள்ளாதே...இந்தப் பின்னிரவுக் கடிதத்தை முடிக்கும் போது காற்றினூடாக இதன் அலைகள் உன்னை வந்து எழுப்பும் வரை நீ தூங்கிக்கொண்டே இருக்க வேண்டுமென்ற ஆசையுடன் இந்தக் கடிதத்தை எழுதி முடிக்கிறேன்.

அன்புடன்
A Constant Lover

My name is Khan & கலைஞரின் பன்ச் சாங்
கரண் ஜோஹர் டைரக்ஷனில் ஷாருக் நடித்தால் பாடல்கள் எப்படி இருக்கும் என்று ஒரு உங்களுக்கே ஒரு யூகம் இருக்கும். அதில் இம்மி பிசகாமல் பாடல்களை கொடுத்திருக்கிறார்கள் ஷங்கர்- எசான் - லாய். குச் குச் ஹோதா ஹையில் வரும் துஜே யாத்ன மேரி போல் இங்கே சஜ்டா என்றொரு பாடல். ஜோதா அக்பரில் வரும் க்வாஜா பாடலை கொஞ்சம் தொட்டு சென்றிருக்கிறார்கள்.ரஹத் ஃபதே அலி கான் பாடியிருக்கிறார்.பிரபல நஸ்ரத் ஃபதே அலி கானின் மருமகனாம். தேரெ நெய்னா என்ற பாடலை வேறு எந்த ஷாருக் படத்துக்குள்ளும் நுழைத்து விடலாம். அவரும் அதே போல் தலையை ஆட்டி ஆட்டி ஆடப் போகிறார்.
அட்னன் சாமியும் ஷங்கர் மகாதேவனும் பாடியிருக்கும் நூர்-ஏ-குதா என்ற பாடல் தான் கிளாஸ்.இரண்டாவது முறை கேட்கும் போதே உருக்குகிறது. அட்னான் சாமி குரலில் என்னத்தைத் தடவி பாடுகிறார் என்று தெரியவில்லை. இவரை அதிகமாக தமிழில் பயன்படுத்த மாட்டேன்கிறார்கள். பிறகு அல்லா ஹி ரஹெம் என்று ரஷீத் கான் பாடிய பாடல். படத்தோடு பார்த்தால் ரசிக்க முடியும். சூரஜ் பாடலின் ஸ்டைலயும் பீட்டுகளையும் நிறைய ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்க முடியும்.ஸ்ட்ரிங்ஸில் குழையும் தீம் ம்யூசிக் அருமை. எல்லாமே அக்மார்க் ஷாருக் பட பாடல்கள்.
ஷாருக் கஜோல் கரண் என்று மெகா வசூல் படங்களை கொடுத்த கூட்டணி.சாதாரணமாவே ஷாருக் கொன்சம் உணர்ச்சி குவியல்.இதில் ஆட்டிஸம் வந்தவராக வேறு நடிக்கிறார். படத்தின் ஸ்டில்களையும் ட்ரெய்லரையும் பார்த்தால் சென்டிமென்ட் கடலில் மூழ்கடித்து விடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.லேசாக Forrest Gump வாடையும் அடிக்கிறது. My name is khan தீவிர ஷாருக் கஜோல் ரசிகர்களுக்காக ஷங்கர் எசான் லாய் கொடுத்திருக்கும் கஸாட்டா ஐஸ்கிரீம்.

***************************************************************************************வா வா தலைவா என்றொரு பாடல். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. உன்னி மேனன் ஹரி சரண் என்று வழக்கமாக ஹாரீஸின் இசையில் கௌதம் மெனன் படத்தில் பாடுவது போல் ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள்.மைக்கேல் ஜாக்ஸன் விஜயலக்ஷ்மி நவனீதகிருஷ்ணன் பாடல்களைப் பாடினால் எப்படி இருக்கும் ? அப்படி முதல்வரை வாழ்த்தி ஒரு பாடல் . விஜய் அஜித் எல்லாம் தோற்றுப் போவர்கள். அப்படியொரு ஓபனிங் சாங் நம் முதல்வருக்கு.கருமம் நம் சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்தால் பயமாக இருக்கிறது. ஒரு மனிதருக்கு எவ்வளவுதான் பாராட்டுதல்கள் பிடிக்கும். அவருக்கே சலிப்பு தட்டாதா.. இல்லை புகழ்பவர்களுக்குதான் கொஞ்சம் கூட கூச்சமே இருக்காதா? உங்களுக்குப் பாராட்டு விழாவும் பஞ்ச் பாடல்களும் போட்டுக் குஷிப்படுத்தினால் தான் வேலைக்கு ஆகுமென்றால் பொதுமக்களாகிய நாங்கள் என்ன செய்யவேண்டும் கலைஞரே?

கிருஷ்ணா கிருஷ்ணா...A tale of Past Present and Future!
கிருஷ்ணன் என்றதும் உங்கள் ஞாபக செல்களில் என்னவெல்லாம் ஓடுகிறது? வெண்ணை திருடுபவன், விளையாட்டுப் பிள்ளை, குருக்ஷேத்திரத்தின் சூத்திரதாரி, கோபிகைகள்,பிருந்தாவனம், மதுரா.

உப பாண்டவத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் நம்மை புனைவுக்குள் அழைத்துச் சென்றது போல கிருஷ்ணா கிருஷ்ணா எனும் இக்குறுநாவலில் புனைவிலிருந்து வந்து நம்முடன் உரையாடுகிறார் இந்திரா பார்த்தசாரதி.இது நாள்வரை புராணங்களின் மீதும் இதிகாசக் கதைகளின் மீதும் வைத்திருந்த அபிப்பிராயத்தை லேசாக அசைத்து விடுகிறது இந்நாவல். கிருஷ்ணனின் பால்யம், வாலிபம், அரசியல், முக்கியமாக கிருஷ்ணனின் அந்திம பொழுதுகளை கற்பனையோடோ அல்லது நிஜமாகவோ விவரிக்கிறது இந்நூல்.வாழ்க்கைக் குறிப்பாக அல்ல...சில பல தர்க்கங்களோடு.

ஜரா எனும் வேடனிடம் கிருஷ்ணன் அம்பெய்தப்படும் சூழ்நிலையில் கிருஷ்ணன் ஜராவிடம் தன் Auto-Biography யாக சொல்லும் விஷயங்களை வேடன் நாரதரிடம் கூறி நாரதர் நம்மிடம் உரையாடுவதாக எழுதப்பட்டிருக்கிறது. யாதவர்களின் முடிவும் மதுராவின் துரதிர்ஷ்டமும் இன்னும் பல நிகழ்ச்சிகளுக்கு காரண காரியங்கள் புராணங்களிலேயே விவரிக்கபட்டிருக்கும். ஆனால் அதன் உண்மையான அர்த்தம் காண விழைவதே புனைவின் சுவாரஸ்யம். உதாரணமாக சம்பவாமி யுகே யுகே என்று நம் சமூகத்தில் அடிக்கடி ஒரு வார்த்தை உதிக்கக் கேள்விபட்டிருப்பீர்கள்.அதாவது எங்கே அதர்மம் தலை தூக்குகிறதோ எட்சட்ரா எட்சட்ரா..நான் மீண்டும் வருவேன் என்று.அதன் மறு அர்த்தம் கிருஷ்ணனாகிய நான் எடுத்த அவதாரத்தை அந்தந்த காலங்களுக்கு ஏற்ப நீங்களே அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள் என்பது தான்.இப்படியாக இ.பார்த்தசாரதி காட்டும் உள்ளர்த்தங்கள் நிறைய.

கிருஷ்ணன் நினைத்திருந்தால் குருக்ஷேத்திரமே நடந்திருக்காதே. எதற்காக அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் விஸ்வரூபத்தைக் காட்டி நமக்குக் கதை சொல்ல வேன்டும். இதெல்லாம் நீண்ட நாள் விடையில்லாமல் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்விகள். அதற்கான விடையை கிட்டத்தட்ட நெருங்கியிருக்கிறது 'கிருஷ்ணா கிருஷ்ணா'.

Political Strategies எப்படி யுகம் யுகமாக ஆளுங்கட்சியையும் எதிர்க்கட்சியயும் அலைக்கழித்திருக்கிறது என்பதையும் அநாயசமாக விவரிக்கிறது இந்நூல். எல்லோருக்கும் பிடித்தமானவனாக கிருஷ்ணன் ஏன் அரசனாக இருக்க விரும்பவில்லை என்ற கேள்விக்கான பதில் அவன் வாழ்க்கையாக இருக்கிறது. கீதை எப்பொழுது பிறந்தது என்பதை நாம் அறிவோம். என்ன மாதிரியான சைக்கிக் டென்ஷனில் உருவானது என்பதையும் இ.பா அவருடைய மொழியில் அலசியிருக்கிறார்.

கடமையை செய்.பலனை எதிர்பாராதே என்பதன் உள்ளர்த்தம் யோசிக்க வைக்கிறது. அர்ஜுனனுக்கு ஏற்படும் Existentialistic Dilemmaவிலிருந்து அவனை காப்பாற்றி ஒரு போரை உருவாக்கி எதை விளக்குகிறான் கிருஷ்ணன்? எல்லாம் மாயை என்பதையா?.கிருஷ்ணனின் வாழ்க்கையில் இன்றைய அவசர உலகின் ஆதார கேள்விகளுக்கு பதில் தரும் சுவாரஸ்யத்தை எட்டிபிடித்திருக்கிறார் இ.பா. கிருஷ்ணனை ஒரு சமுதாயக் கனவு என்று அறிவித்துவிட்டே நாரதரை நம்முடன் உரையாட விட்டிருக்கிறார்.நாரதரும் தேவ பாஷையில் பேசுவதில்லை.நம் மொழியிலேயே பேசுகிறார்.அவரது உரையாடலில் இண்டர்நெட் வருகிறது.Weinberg வருகிறார். போருக்காக தூது செல்லும் கிருஷ்ணனை Ambassador at Large என்றழைக்கிறார்.

மிகவும் ஆச்சரியப் பட வைத்த விஷயம், கிருஷ்ணனின் முடிவு. தன் அந்தியில் பிரியத்துக்குரிய ராதாவை தேடிச் செல்கிறான் கிருஷ்ணன்.பால்யத்தில் ராதாவுடனான லீலைகள் திரும்பவும் நடுக்குமா என்ற நப்பாசையில்.எல்லாம் தலைகீழாக இருக்குமென்ற எதிர்பார்ப்புடன் செல்பவனுக்கு அங்கே ஆச்சரியம்.சிறுவர்கள் குழலூதிக்கொன்டிருக்கிறார்கள்.எல்லோரும் கிருஷ்ணனாக மாறிவிட்டிருக்கிறார்கள். கிருஷ்ணனும் குழ்லூத முயற்சிக்கிறான். இசை வருவதில்லை. அங்கு ராதாவை வயாதான மூப்படைந்தவளாகப் பார்க்கத் தைரியமில்லாமல் ஜராவிடம் அம்பை (மரணத்தை) வாங்கிக் கொள்ள காட்டுக்குத் திரும்புகிறான். கிருஷ்ணனின் வாழ்க்கை இவ்வளவு சுவாரஸ்யமா என்று வியப்படைய வைக்கிறது இ.பா வின் புனைவு. கிருஷ்ணா கிருஷ்ணா சமுதாயக் கனவின் சமகால நீட்சி என்பதோடல்லாமல் வருங்காலத்துக்குமான புனைவுமாகிறது.

வரலாற்றிலிருந்து கொஞ்சமாக விலகி சரடு விடுவதை விட கஷ்டமானது புராணங்களிலிருந்து Logic ஐ எடுத்து நம்மை தர்க்கிக்க வைப்பது.

கிருஷ்ணா கிருஷ்ணா is that kind of one.