அகல்யாவுக்கு- A Letter from Constant Lover
அகல்யாவுக்கு!
நீ எப்படி இருக்கிறாய் என்பதை விட எப்படி இருப்பாய் என்பதில் தான் இப்போது ஆர்வம் அதிகம். நாம் படித்த ஸ்கூலை பார்க்கும்போது இப்போது உனக்கு என்ன தோன்றுகிறதோ தெரியவில்லை. எனக்கு நிச்சயம் நாம் கடலை போட்ட மரத்தடி கண்ணுக்குத் தெரிகிறது. நான் மென்று துப்பிய பபிள்கம்கள், நீ என் தலைமுடியை கலைத்து விளையாடியது என்று எல்லாமும் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.ஆனாலும் ஜிவ்வென்று இருக்கிறது. எத்தனை எத்தனை சுவாரஸ்யங்கள்...அத்தனையையும் உன் கணவனிடம் சிரித்துக் கொண்டே சொல்லியிருப்பாய் என நம்புகிறேன்.
கடைசி பெஞ்சின் இந்தப் பக்கம் நானும் அந்தப் பக்கம் நீயும். எத்தனை லூட்டி அடித்திருப்போம்? உனக்கு ஒன்றாவது ஞாபகமிருக்கிறதா அகல்யா..? நான் ஒரு முறை தற்செயலாக பிராக்டிகல் நோட்டின் ஒரு பக்கத்தில் கிறுக்கிவிட்டேன் என்று அந்த கெமிஸ்ட்ரி டீச்சர் பேயாட்டம் ஆடிய போது, இரண்டே நாளில் முழுவதும் எழுதி தந்தாயே..அப்போதே முடிவு செய்துவிட்டேன் நீ தான் என் வாழ்க்கை என்று. ஆனால் விதியை பார்த்தாயா... நீ எனக்கு இன்று வெறும் தியரி. நான் என் பேரக் குழந்தைகளுடன் கதைகள் பேசும்போது நீ என் கற்பனை கதாபாத்திரங்களுடன் கலந்திருப்பாய்.
உன்னைப் பற்றி சிலாகிப்பதில் எனக்கு அலுப்புத் தட்டுவதே இல்லை.என்ன செய்ய... திருநகர் மூன்றாவது பஸ் ஸ்டாப்பில் வைத்து உனக்குக் கிரீட்டிங் கார்டும் ஒரு மௌத் ஆர்கனும் கொடுத்து ஐ லவ் யூ சொன்னேன்..ஞாபகமிருக்கிறதா? அந்த கிரீட்டிங் கார்ட் நம் நண்பன் வாங்கிக் கொடுத்தது என்ற அதி பிரசித்தமான உண்மை உனக்குத் தெரியாமலே போகட்டும். அப்பொழுதே நீ வேண்டாமென்று சொல்லியிருந்தால் இப்படி இரவு கண்விழித்துக் கடிதம் எழுதிக்கொண்டிருந்திருக்க மாட்டேன்.பின்பொருமுறை மீனாக்ஷி அம்மன் கோவிலில் வைத்து எதேச்சையாகப் பார்த்து ( இதுவும் எதேச்சை அல்ல) பொற்றாமரை குளத்தில் வைத்து உன்னிடம் உளறிக் கொட்டிகொண்டிருந்தேன்.எத்தனை ரம்மியமான பொழுதுகள்.எங்கே போனாய் அகல்யா?
ஒவ்வொரு முறை பொய் சொல்லும் போதும் தலையில் ஒரு முடி உதிரும் என்று பயமுறுத்தி இருந்தாய். உன்னிடம் நான் ஒரு லட்சத்து முப்பதாயிரத்து இருநூற்று பதினேழு பொய்கள் சொல்லியிருக்கிறேன்.இன்னும் வழுக்கை விழவில்லை.அப்படியென்றால் நீ என்னிடம் சொன்ன முதல் பொய்யா அது?
நமக்குப் பிடிக்காத அந்த ஃபிஸிக்ஸ் மாஸ்டரை நான் கேள்வி கேட்டு படுத்தி எடுத்துக் கொன்டிருந்த போது உன் ஓரக்கண்ணில் எவ்வளவு பெருமிதம். அவர் என்னைக் கேவலமாக திட்டி கிளாஸ் ரூமை விட்டு வெளியே அனுப்பும் போது கூட உன் முகத்தில் பெருமிதம். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ஒரு பெண்ணின் கர்வம் இல்லையா அது? இன்றும் அந்த காட்சி என் கனவில் வந்து போகும்.ஆனால் ஃபிஸிக்ஸ் மாஸ்டர் முகம் மட்டும் லேசாக பிரகாஷ் ராஜ் ஜாடையில் வருகிறது.
அரையிருட்டில் அலைபாயுதே படம் பார்க்கையில் ஸ்னேகிதனே பாடல் வரும்போது என் தலை முடியை கோதி விட்டுக்கொண்டிருந்தாய்.அந்த நேரத்தில் பிரதமர் பதவி கொடுத்திருந்தால் கூட வேன்டமென்றிருப்பேன்.உன் கணவன் துரதிர்ஷ்டசாலி.அந்த பதினாறு வயது அகல்யவை நினைத்து இப்படி கடிதம் எழுதும் பாக்கியம் அவனுக்குக் கிடைக்குமா?
ஸ்கூல் முடிந்தவுடன் நான் ஃபுட்போர்டில் தொங்கியபடியே நண்பர்களுடன் பஸ்ஸில் போவதை உன் அம்மாவுடன் காரிலிருந்து ஒரு வித பதட்டத்துடன் பார்த்தபடியே பயணிப்பாய்.எந்த சினிமாவிலாவது அது வந்திருக்கிறதா அகல்யா... உன் தங்கை என்று ஒரு டெட்டி பியர் பொம்மையை அறிமுகம் செய்துவைத்தாயே.. எவ்வளவு வளர்ந்திருப்பாள் ? இப்போது அவள் பின்னால் என்னைப் போல் ஒரு அதிர்ஷ்டசாலி சுற்றிக் கொண்டிருப்பானோ?
என்னிடம் நீ கோபபப்பட்டு எனக்கு நினைவில்லை...அந்த கடைசி தினத்தைத் தவிர. என்னையும் இந்தப் பாழாய்ப் போன உலகத்தினுள் இழுத்து வந்து விடலாம் என்று எப்படி எப்படியோ முயற்சித்தாய்.Ha Ha Ha...Lovers dream.Dreamers love. I am a dreamer , damn it!
இதெல்லாம் காதல் இல்லை இன்ஃபாக்ச்சுவேஷன் என்று நண்பன் பிதற்றினான்.அது உண்மையென்றால் காதலை விட இன்ஃபாக்ச்சுவேஷனே எனக்கு மிகவும் பிடித்தமானது.நமது இந்த அபத்தமான இந்த காதலை பெரியார் நிலையம் பிரிட்டிஷ் பேக்கரி அருகில் வைத்து நீ முறித்துக் கொன்ட போது உன் மேல் எனக்குத் துளியும் கோபமில்லை.ஏனென்றால் நீ கனவிலிருந்து நிஜத்துக்குப் போய்விட்டிருந்தாய். நான் அந்த பெருங்கனவில் இருந்து வெளியே வர மறுத்துவிட்டிருந்தேன். நீ என்றைக்கு நிஜமான உலகத்தில் கலந்து விட்டாயோ அன்றே நீ என்னிலிருந்து இறக்கத் தொடங்கியிருந்தாய்.
ஸ்வாசங்கள் சீராக வரத் திணறும் இந்த தருணத்தில் நீ மூன்றாம் சாமத்தின் கனவுகள் முடியும் தருவாயில் இருப்பாய்! நடு இரவில் விழித்துக் கொள்ளாதே...இந்தப் பின்னிரவுக் கடிதத்தை முடிக்கும் போது காற்றினூடாக இதன் அலைகள் உன்னை வந்து எழுப்பும் வரை நீ தூங்கிக்கொண்டே இருக்க வேண்டுமென்ற ஆசையுடன் இந்தக் கடிதத்தை எழுதி முடிக்கிறேன்.
அன்புடன்
A Constant Lover
sdfsd
Saturday, February 13, 2010
ARUMAI THOZAR,PAGALAVAN KUZUMATHTHIL INTHA MADALAI SERTHTHULLAEN,THODARNTHU EZUTHUNGKAL.NANDRI