வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்
பதிப்பகம் : உயிர்மை.
ஆசிரியர் : எஸ்.வி.ராமகிருஷ்ணன்
நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுக் குறிப்புகள் எழுதுவதில் அத்தனை சிக்கல்கள் கிடையாது.ஆனால் சமீப கால வரலாற்று சம்பவங்களை எழுதுவதில் சற்றுக் கவனமாயிருக்க வேண்டும். அதாவது 40 அல்லது 50 வருடங்களுக்கு முந்தைய கதைகள் என்றால் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.ஏனெனில் அது நம் தாத்தாவிடம் கதை கேட்பது போல்.. சுவாரஸ்யம் கருதி நாலு பிட்டு தாத்தா சேர்த்து விட்டாரானால் பாட்டி போட்டுக் கொடுத்து விடுவார்.
மதுரைக்கல்லூரியில் படிக்கும்போது கிருஷ்ண மூர்த்தி என்று ஒரு ஆங்கிலப் பேராசிரியர் இருந்தார்.வகுப்பில் பாடத்தைப் பற்றி பேசுவதை விட அவர் வாழ்ந்து லயித்திருந்த நாற்பது வருடங்களுக்கு முந்தைய மதுரையைப் பற்றியும் அந்தக்கால அரசியல் பேசுவதிலேயே நேரத்தை செலவிடுவார். ஆனாலும் அந்தக் கதைகள் அவ்வளவு ரம்யமாயிருக்கும். தெருவிளக்கு ஏற்றும் அரசாங்க உத்தியோகஸ்தனின் ஜம்பம் முதல் பெரியார், காங்கிரஸ் சினிமா என்று எல்லாக்கதைகளுமே சற்று ஒரு சார்பாக இருந்தாலும் சுவாரஸ்யத்துக்குக் குறைவிருக்காது. அந்த சுவாரஸ்யத்துக்கு நிகரானது எஸ்.வி.ராமகிருஷ்ணனின் வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்.
அரசியலில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள பழைய செய்திதாள்களும் பாடப் புத்தகங்களுமே போதும்.ஆனால் அன்றைய பழக்கவழக்கங்கள் ,மக்கள் எந்த மாதிரியான விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்தார்கள் என்பதெல்லாம் புதுமைப் பித்தன் ,கல்கி போன்றோரின் கதைகளைப் படித்து நாமாக ஊகித்துக் கொள்ளவேண்டியது தான். இந்தக் கட்டுரைத் தொகுப்பு அந்தக் குறையை ஓரளவுக்கேனும் நிவர்த்தி செய்கிறது.என் தாத்தாவும் அவர் அப்பாவும் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று கொஞ்சமேனும் அனுமானம் செய்து கொள்ள முடிகிறது.
இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளை விவரிக்கிறது. நாற்பதுகள் தான் சென்ற நூற்றாண்டின் முக்கியமான பத்தாண்டுகள்,அரசியல் ரீதியாகவும் ,சமூக ரீதியாகவும்.இரண்டாம் உலக யுத்தம் ,பாகிஸ்தான் பிரிவினை , காங்கிரஸ் அதிகாரம் பெற்றதும் ,அமைப்பு ரீதியாக திராவிட கட்சிகள் வலுவடைய ஆரம்பித்ததுமான ஒரு Transition phase .
ஏறத்தாழ இரண்டு மூன்று பக்கங்களுக்குள் அடங்கி விடும் முப்பது கட்டுரைகளின் தொகுப்பே வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்.முன்னுரையை கூட ஒரு கட்டுரை போலவே எழுதியிருக்கிறார் எஸ்.வி.ராமகிருஷ்ணன்.கிட்டத்தட்ட 110பக்கங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட விஷயங்கள். இரண்டு தலைமுறைகளுக்கு முந்தைய வாழ்க்கை முறையை ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு தன் சந்ததியினருக்கு சாவகாசமாக சொல்வது போல் அமைந்திருப்பது இத்தொகுப்பின் விசேஷம்.
பள்ளிக்கூடங்களில் ஆண்களும் பெண்களுக்குமான நட்பும் மதிப்பீடும் எப்படி இருந்தது , பணம் -காசின் பரிமாணம் (அணா,பைசா,தம்பிடி கணக்குகள்),தீபாவளி எப்படிக் கொண்டாடினார்கள்,ஜானவாச ஊர்வலங்கள் என்பது போன்ற மேலோட்டமாக சின்ன விஷயங்களாகத் தெரிந்தாலும் வாசிக்கையில் ஒரு விதமான குறு குறுப்பை ஏற்படுத்துவது உண்மை.
நம்மில் பெரும்பாலானோர் கடிதப் பரிவர்த்தனைகளையே மறந்து விட்ட நிலையில் அந்தக் காலத்தில் மொட்டைக் கடுதாசியின் சமூக அந்தஸ்து பற்றி ஒரு கட்டுரை.குச்சி ஐஸ் பற்றின விவரணைகளும், தமிழ்நாட்டில் அய்யப்பன் விரதங்கள் எவ்வாறு பிரபலாமனது பற்றியும் ,வக்கீல் நார்ட்டன் துரையின் பிரசித்தி பெற்ற அந்த Reverse Argument பற்றியும் கூட சற்று எள்ளல் நடையுடன் விவரித்திருப்பது அழகு.ஒரே குறை நாற்பதுகள் ஐம்பதுகளில் தமிழக அரசியல் சூழல் குறித்து சற்று விவரித்திருக்கலாம். அதாவது அண்ணா காலத்து திராவிடக் கட்சிகள் பற்றியும் ராஜாஜி காலத்து காங்கிரஸ் பற்றியும்.
மறு நாள் விடிந்தால் இந்தியா சுதந்திர நாடு.அதற்கு முந்தைய தினம் அதாவது பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி நாளான்று லார்ட் மவுண்ட் பேட்டன் கையெழுத்திட்ட கடைசிக் கோப்பு எது தெரியுமா? பாலன்பூர் நவாபின் ஒரு அதி முக்கியமான கோரிக்கை.அன்றைய பாலன்பூர் இன்றைய குஜராத்.(புத்தகம் முழுக்க இது போன்ற தகவல்களால் நிரம்பி வழிகிறது).பாலன்பூர் நவாபின் கோரிக்கை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா......புத்தகத்தில் தெரிந்து கொள்ளுங்களேன்.இந்தியா பிரிட்டனிடம் அடிமைப் பட்டதன் காரணம் தெரியும்.
**********************************************************************************
முனைவ்வ்வர் பட்டாபட்டி....
Friday, June 04, 2010
ஏதாவது PDF பைல் இருக்கு.. இல்லாட்டி ..அங்கு வரும்போது தான் வாங்கனும் ரெட்டை...