RSS

மயக்கம் என்ன - எமோஷனல் மசாலா!


அபத்தமான நோக்கு வர்மங்களில் இருந்தும் , ட்ரெய்னை கையால் நிறுத்தும் கொடுமைகளில் இருந்தும் தமிழ் சினிமாவுக்கு ஒரு தாற்காலிக விடுதலை கிடைத்துள்ளது. அதுவும் சமீப காலங்களில் எமோஷனல் டிராமா என்கிற ஒரு தளமே விடுமுறைக்கு சென்று , திரும்பி வந்திருக்கிறது "மயக்கம் என்ன " மூலமாக.
தனுஷ் செல்வராகவன் இணைந்தால் என்ன நடக்குமோ ..அதே தான். கொஞ்சம் காதல், கொஞ்சம் பண்பாட்டு மீறல்கள், கொஞ்சம் சைக்கோத் தனம், ஆனால் இம்முறை பாஸிட்டிவாக ஒரு கிளைமாக்ஸ். அங்கங்கே பளிச்சிடும் லாஜிக் பொத்தல்களையும் மீறி மனதைக் கவர்ந்து விடுகிறது படம்.

( கார்த்திக்) தனுஷ் ஒரு ஃபோட்டொகிராஃபர். நண்பரின் ஆதரவில் வாழ்ந்து வருகிறார்கள் கார்த்திக்கும் அவன் தங்கையும். வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபரான மாதேஷிடம் அசிஸ்டண்ட்டாக சேரும் ஆசையில் அவர் முன் தன் புகைப்படங்களை காட்டுகிறான். அவமானப் படுத்தி அனுப்பி விடுகிறார்.ஆனால் அதே புகைப்படங்களை தன் பெயரில் பத்திரிக்கையில் வெளியிட்டு பேர் வாங்கிக் கொள்கிறார். இதனிடையில் நண்பனின் கேர்ள் ஃப்ரண்டுக்கும் (ரிச்சா) கார்த்திக்குக்கும் காதல். நண்பனை சமாதானப் படுத்தி ரிச்சாவைக் கல்யாணம் பண்ணிக்கொள்கிறான். தான் எடுத்த புகைப்படத்துக்கு மாதேஷுக்கு விருது கிடைத்த அதிர்ச்சியில் மாடியில் இருந்து கீழே விழுந்து மன நலம் பாதிக்கப்படுகிறான். நிறைய குடித்து , மனைவியை அடித்து , அபார்ஷன் வரை கொண்டு போய் பின் மனம் திருந்தி மனைவியின் முயற்சியால் பத்திரிக்கைகளில் கவனிக்கப்பட்டு பிரபலமாகிறான். சர்வதேச புகைப்பட விருதுக்காக மாதேஷுடன் கார்த்திக்கின் புகைப்படம் ஒன்றும் போட்டிக்கு கலந்து கொள்கிறது. யாருக்கு விருது என்பதுடன், கார்த்திக் மாதேஷுக்கு அழுத்தமாக தாங்க்ஸ் சொல்வதுடன் படம் முடிகிறது.

நமக்கு பாலச்சந்தர் படத்தில் ஆரம்பித்து விக்ரமன் படத்தில் முடிவது போல ஒரு பிரமை. ஆனாலும் அங்கங்கே தெரியும் செல்வராகவன் டச், படு ஷார்ப்பான வசனங்கள் குறைகள் எல்லாவற்றையும் மறக்கடிக்கிறது.ஒரு ரெகுலர் தமிழ் சினிமா கதை தான். ஆனல் வசனங்களும் , ராம்ஜியின் ஒளிப்பதிவும் ,முக்கியமாக ஜீ.வி யின் பின்னணி இசையும் (ஒரிஜினல் என்று நம்புவோம்) படத்தை வேறு தளத்துக்குக் கொண்டு செல்கின்றன. தனுஷும் ரிச்சாவும் காட்டும் எக்ஸ்பிரஷன்கள் நிச்சயமாக இதற்கு முன் நமக்கு பாலு மகேந்திரா படங்களில் மட்டுமே காணக் கிடைப்பவை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பாடல் வந்தவுடன் ஸ்க்ரீன் அருகே போய் ஆடும் விடலைகளைப் பார்க்க முடிந்தது இந்தப் படத்தில் தான் (காதல் என் காதல்). ஓட ஓட பாட்டை படமாக்கியிருக்கும் விதமும் வித்தியாசம். மற்றபடி மயக்கம் என்ன ஒன்றும் புது வகையான படமெல்லாம் இல்லை. இரண்டாவது பாதியில் திரைக்கதையில் சற்று தொங்காமல் இருந்திருந்தால் செல்வராகவனுக்கு இது இன்னொரு 7 ஜியாக இருந்திருக்கக்கூடும்.

உருக்கமான காதல் கதை என நினைத்து வந்தவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தான். ஆனாலும் இது போன்ற படங்கள் வெற்றி பெறுவது வேலாயுதம் மங்காத்தா வெற்றி பெறுவதை விட உத்தமமானது .

மயக்கம் என்ன - Typical Selvaraghavan Film.
**********************************************************************************

அழகிய சினிமா -- ஆதாமின்டே மகன் அபு
ஒரு ஹஜ் யாத்திரை.அதற்கான ஒரு வயதான தம்பதிகளின் முயற்சி. நெகட்டிவான எந்த ஒரு விஷயமும் இல்லாமல் மெதுவான வேகத்தில் நகரும் ஆழமான படம் - ஆதாமின்டே மகன் அபு!
சலீம்குமாரின் அபாரமான நடிப்பில் சலீம் அகமது இயக்கி இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படம்.

அபுவும் (சலீம்) ஆய்ஷும்மாவும் (ஸரீனா வஹாப்)  மகனால் கைவிடப்பட்ட வயதான தம்பதிகள். அத்தரும் யுனானி மருந்துகளும் விற்று ஜீவனம் நடத்துகிறார்கள். அபுவிற்கு ஒரே ஒரு கனவு . மனைவியை அழைத்துக் கொண்டு ஹஜ் சென்றுவர வேண்டும். டிராவல்ஸில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து பணம் புரட்ட ஆரம்பிக்கின்றனர். வியாபாரம் நலிந்த நிலையில் பத்து வருடம் சேமித்த பணமும் கூட போதாதென்கிற நிலமை. மாடு,மரம் என அனைத்தையும் விற்று ஹஜ் செல்ல தயாராகிறார்கள். புனித யாத்திரைக்குத் தயாராகி புது  துணிகள் எல்லாம் எடுத்து ஊரில் எல்லாரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்புமுன் மீண்டும் பணப்பிரச்சினை. ஊரிலுள்ள அனைவரும், ட்ராவல் ஏஜன்ட் முதற்கொன்டு உதவிக்கு வருகிறார்கள்.ஆனாலும்..தம்பதிகள் ஹஜ் சென்றார்களா என்பது மீதி கதை.

 மாயா ஜாலங்களோ சென்டிமென்டுகளை நியாயப் படுத்தும் ஃப்ளாஷ்பேக்குகளோ எதுவும் தேவைப்படாத, கதையை அதன் போக்கில் மெதுவாக நகர்த்தும் திரைக்கதை. அதற்கு யானை பலம் சேர்க்கும் மது அம்பாட்டின் ஒளிப்பதிவு. . அதை விட முக்கியமாக , காஸ்டிங். நெடுமுடி வேணு, கலாபவன் மணி என ஓரிரு காட்சிகள் வந்தாலும் எங்குமே நடிப்பது தெரியவில்லை.மற்றும் உறுத்தாத பிண்ணனி இசை. அவார்டு வாங்கும்  படம் என்றாலே காத தூரம் ஓடிவிடும் நம் ரசிக கண்மனிகள் தமிழிலும் இது போன்ற சின்ன பட்ஜெட் ஆச்சர்யங்களை ஆதரித்தால் நமக்கு இன்னும் வெரைட்டியான படங்கள் கிடைக்கும்.

இந்த படத்தில் மிகவும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, ஒளிப்பதிவும் பிண்ணனி இசையும். சமீப காலங்களில் ஒரு மெலோடிராமவுக்கு தமிழிலும் மலையாளத்திலும் இப்படி ஒரு சினிமாட்டொக்ராஃபியை பார்க்க முடிந்ததே இல்லை. மிகையில்லாத , ரொம்பவே யதார்த்தமான நடிப்பு. பாஸ்போர்ட் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் செல்லும் காட்சியில் நடுங்கும் சலீம், தேசிய விருதுக்கு நிச்சயம் வொர்த் தான். மொத்தத்தில் குறை சொல்ல முடியாத ஒரு ஆர்ப்பாட்டமில்லாத அழகிய சினிமா "ஆதாமின்டே மகன் அபு"

உலக சினிமாவை ஈரானிலோ கொரியாவிலோ தேட வேண்டிய அவசியமே இல்லை. அது இங்குதான் நம் லைப்ரரிகளில் தூங்கிகொண்டிருக்கிறது. அதை யார் எழுப்பி வெளியே கொண்டு வருகிறார்கள் என்பது தான் கேள்வி!

ஆதாமின்டே மகன் அபு - Slow but Sound Film!
**********************************************************************************