எழுத்துச் சீர்திருத்தம் - எதைத் தின்னால் பித்தம் தெளியும்
ஒரு அயல் மாநிலத்தவன் ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டு சகஜமாக சென்னை நகரத்தில் ஜீவிக்க முடியும்.ஆனால் தமிழ் மட்டுமே தெரிந்த ஒரு மனிதன் சென்னை போன்ற மாநகரத்தில் ஜீவிப்பது மகா கஷ்டம். தமிழ் போன்ற தொன்மையான மொழிக்கு இது அதீதமான கேவலம்.எதனால் இந்த நிலைமை என்ற ஆராய்ச்சியெல்லாம் செய்தால் பலர் கோபத்துக்கு ஆளாக நேரிடும். நம்முடைய ஆசையெல்லாம் செம்மொழி அந்தஸ்தை அரசியல் அல்லாது நிஜமாகவே மொழிக்குக் கிடைத்த கௌரவமாக மாற்றவேண்டும் என்பது தான்.
வரப்போகும் தமிழ் மாநாட்டில் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வரப் போவதாக காற்று வாக்கில் செய்தி அடிபடுகிறது. நல்லது தான்.குழந்தைகள் பழகும் விதமாக இலகுவாக மாற்றப் போவதாக சொல்கிறார்கள். அதாவது 247 வடிவங்களிலிருந்து கொஞ்சமாக குறைத்தால் மனனம் செய்வதற்கு வசதியாக இருக்கும்.உபயோகப் படுத்துவதும் எளிது என்பது அவர்களது கணக்கு. தமிழை இவ்வளவு வருஷங்களாக நாம் கஷ்டப் பட்டுக் கற்றுக்கொண்டதாகவும் இனி வரும் தலைமுறை எளிதாக கற்றுக்கொள்ளப் போவதாகவும் ஒரு நம்பிக்கை. வளைத்து வளைத்து எழுதுவதனால் தமிழ் வளரவில்லை எனக் கருதுவார்களானால் அதைப் போன்ற முட்டாள்தனம் இந்த பூமியில் இல்லை.
பிரச்சினை தமிழ் அல்ல.தமிழனின் உளவியல் சிக்கல் தான். படித்த நடுத்தர வர்க்கத்துக் குழந்தைகள் தமிழில் பேசக் கூச்சப் படுகின்றன. ஆங்கிலத்தைப் போல் நம் தமிழும் சந்தேகத்துக்கில்லாமல் நல்ல மொழி தானென ஒத்துக் கொள்ள மறுக்கும் சமூகம்.தமிழில் சிந்தித்து கஷ்டப் பட்டாகிலும் ஆங்கிலத்தில் மனதுக்குள் மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் பேசுகிறார்களன்றி தமிழில் பேசினால் பாவம் என்பது போல ஒரு மனோபாவம். சென்னை நகரப் பள்ளிகளிலோ கேட்கவே வேண்டாம். ஆங்கிலப் புலமையே வேலை பெற்றுத் தருமென்ற நம்பிக்கையில் தமிழை தரை டிக்கெட் என்று குழந்தைகளை நம்பச் செய்வதில் சமர்த்தர்கள்.
தமிழக ஆட்சியாளர்களுக்கோ அலாவுதீன் அற்புத விளைக்கைத் தேய்ப்பது போல அரசாணை இட்டவுடன் எல்லோரும் தமிழை மொழிப்பாடமாக எடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கை. மாணவர்கள் தமிழ் படிப்பதை பெருமையாக நினைக்க வழி செய்யுங்கள். அரசாங்கம் கொடுக்கும் சில்லறை ஸ்காலர்ஷிப்புகள் குவார்ட்டருக்கு கூடப் பத்தாது.
அடுத்ததாக பெயர்ப்பலகைகளை எல்லாம் தமிழ்ப் படுத்தப் போகிறார்களாம். அடிப்படை தப்பை சரி செய்யாமல் என்ன மாற்றம் நிகழ்ந்து விடும்? தமிழில் பெயர் வைப்பதை பெருமையாக நினைத்தால், நினைக்க வழி செய்தால் தன்னாலேயே தமிழ்ப் பெயர் வந்து விடப் போகிறது.
தமிழைக் கொஞ்சம் வளைந்து கொடுக்க அனுமதித்தாலே போதும். ஜூன் என்ற மாதத்தை ஏற்றுக் கொண்ட பின் அதை சூன் என்று தான் அழைக்க வேண்டும் என்று சொல்வதில் தான் சிக்கல். ஃபேஸ் புக்கை அப்படியே ஏற்றுக் கொண்ட பின் அதை ஏன் முகப் புத்தகம் என்று மொழியாக்கம் செய்ய வேண்டும். முகப்புத்தகம் என்று அழைக்கும் நண்பர்கள் ஆர்குட்டுக்கு தமிழில் என்ன என்பதையும் சொன்னால் புண்ணியமாகப் போகும்.யாரும் சொல்ல மாட்டார்கள்.இந்தப் போலித்தன்மை தான் தமிழைப் பயிற்று மொழியாக அமைத்துக் கொள்வதில் சிக்கலை உண்டாக்குகிறது.
அமெச்சூர்த்தனமான மொழியாக்கங்கள், யாரும் ஏறெடுத்துப் பார்க்க முடியாத களஞ்சியங்கள் என தமிழுக்கு எதிராக நிற்பது தமிழர்களேதான். இது போதாதென்று பத்திரிக்கைகளில் கூட ஆனந்த விகட குமுதத் தமிழ் என்றும் காலச்சுவட்டு உயிர்மைத் தமிழ் என்கிற பிரிவெல்லாம் வேறு இருக்கிறது.
எனக்குத் தமிழில் மட்டுமே எழுதுவதில் பெருமையோ அல்லது அவமானமோ கிடையாது. நான் தமிழில் சிந்திப்பதால் தமிழிலேயே எழுத முயற்சிக்கிறேன்.இதைப் பெருமையாக நினைக்கும் காலம் வருமானால் அன்று எனக்கு தீபாவளி தான்.
மாற்றம் அத்தியாவசிய தேவைதான். ஆனால் இப்போதிருக்கும் டெஸ்ட் மேட்ச்சை இருபது ஓவர்களாக்கி நவீனப் படுத்துவது செம்மொழி மாநாட்டில் சாத்தியமா?
எதைத் தின்னால் பித்தம் தெளியும் நண்பர்களே?
பின் குறிப்பு :
எழுத்து சீர்திருத்தம் பற்றிய நண்பர் கனகரத்னம் ராஜ்குமாரின் கட்டுரை
முனைவ்வ்வர் பட்டாபட்டி....
Saturday, April 24, 2010
இரு படிச்சுட்டு வாரேன்