RSS

அ இ அ தே மு தி ம மு க...?
"என்றுச் சொன்னால் மிகையாகாது ... என்று முடிக்காமல் இழுத்துக்கொண்டே செல்லும் ஜனநாயகமான வீராவேசப் பேச்சுக்களை ஒலிப்பெருக்கிகள் அலற ஆரம்பித்துவிடும். புது ரோடு , புது நோட்டு, புது சரக்கு ..கலக்கறே தமிழா என்று விண்ணவர் கூட வியந்து போற்றும் அளவுக்கு இனிமேல் செழிப்பு ஜாஸ்தி ஆகிவிடும். பணப்புழக்கம் எகிறும். கதர்களும் கரைவேட்டிகளும் நம்மை கொஞ்ச காலத்துக்கேனும் எஜமானர்களாக பாவிக்கும். திறந்த ஜீப்பில் முன்பின் அறிமுகமல்லாத ஒருவர் கைவலிக்கக் கும்பிடு போட்டுக்கொண்டே வருவார். கட்சிதாவல்களும் அணிமாற்றங்களும் சகஜமாகும். ஆனந்தவிகடன் போட்டி நடத்தும்.ஞாநி 49 ஓ போடுங்கள் என்பார்.

நிற்க!

இதெல்லாம் எல்லாத் தேர்தல்களிலும் நடப்பது தானே என்று தோணக்கூடும். ஆனால் பவர்கட்,விலைவாசி புண்ணியத்தில் இருப்பது மௌனமான எதிர்ப்பு அலையா அல்லது அரிசி இலவசங்கள் புண்ணியத்தில் ஆதரவு அலை அடிக்கிறதா என கணிக்க முடியாத குழப்பமான தேர்தல் இது. ஆனால் ஒன்று நிச்சயம்.இதுவரை யார் யாருடன் கூட்டணி சேர்கிறார்கள் என்பதை வைத்து ஓரளவுக்கு வெற்றி தோல்வி நிச்சயிக்கப்பட்டு வந்தது. முதல் முறையாக யார் யாரோடு சேராமல் இருக்கிறார்கள் என்பதில் அடங்கியிருக்கிறது இந்த முறை வெற்றியின் சூட்சுமம்.

2006 தேர்தல்:-

திமுக+காங்+பாமக+கம்யூ முறையே வாங்கிய ஓட்டு சதவீதம் 26.4+8.38+5.55+4.24 என மொத்தத்தில் 44.57 % வாக்குகள். வென்ற தொகுதிகள் = 163
அதிமுக+மதிமுக+வி.சி+ஜனதா(எஸ்) வாங்கிய ஓட்டு சதவீதம் 32.52+5.97+1.29+0.07 என மொத்தம் 39.85 % வாக்குகள்.வென்ற தொகுதிகள் = 69.
விஜயகாந்த் பெற்றது 8.32 சதவீதம்.வென்ற தொகுதி 1. சுயேச்சை 1 தொகுதி(3.01%)

இதில் திமுக+காங் மற்றும் அதிமுக+மதிமுக கட்சிகள் மட்டுமே தங்கள் கூட்டணியை முறிக்காத கட்சிகள்.

அதிமுக 2001ல் (31.44) பெற்ற சதவீதத்தைக்காட்டிலும் 2006ல் 1.08 % அதிகம் பெற்று எதிர்க்கட்சி ஆனது.

திமுக 2001ல் (30.92) பெற்ற சதவீதத்தைக்காட்டிலும் 2006ல் 4.52 % குறைவாகப் பெற்று ஆட்சி அமைத்தது. இது தான் நம் ஜனநாயகத்தின் விசித்திரமும் கேடும். இந்த விசித்திரத்துக்கு முக்கியமான காரணமாகப் பார்க்கப் படுவது விஜயகாந்த் பெற்ற 8.32 % ஒரு காரணமென்றாலும் காங்கிரஸ் 2001ஐ (2.48%) காட்டிலும் 2006ல் பெற்ற 8.38 % வாக்குகள் அதி முக்கியமானவை. ஆனால் அவர்களால் மந்திரி சபையில் இடம்பெற முடியாது.ஏன் ஆசைப்படக் கூட முடியாது. இது தான் விசித்திரம். ஜெயித்தும் பலனில்லாமல் வெறுமனே அறிக்கைகள் கொடுப்பது எவ்வளவு கொடுமை.??

தேமுதிகவுக்கு சென்ற முறை விழுந்த வாக்குகள் அனைத்தும் தனியாக நின்ற தைரியத்துக்கும் திமுகவுக்கு எதிராக, ஆனால் அதிமுகவையும் பிடிக்காமல் விழுந்த வாக்குகள். இப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் இந்த சதவீதம் பெருமளவு சிதறிப்போகும். அது யாருக்குப் போகும் என்பது தெரியாமல் தான் எல்லோருக்கும் தலை சுற்றுகிறது.

தி.மு.க

2ஜி விஷயத்தில் அடி வாங்கி இருக்கும் இமேஜை சரி கட்ட மேலும் மேலும் இலவசங்களை அள்ளிக்கொட்டக் கூடும். நிச்சயம் தாய்மார்களை கவரும் ஏதோ ஒன்று.அநேகமாக கிரைண்டர் அல்லது செல்ஃபோனாக இருக்கலாம்(எவன் அப்பன் வீட்டு சொத்து). ஸ்டாலினை முதல்வராக முன்னிறுத்தும் பட்சத்தில் அழகிரி தென்மாவட்டங்களில் தன் கைவரிசையை காட்டக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களின் வேண்டப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு சீட் கொடுத்தாலெ 150 சீடுக்கு மேல் வந்துவிடும். அப்புறம் கட்சிக்காரர்களுக்கு ? விடுங்கள் ...கழகமே குடும்பம், குடும்பமே கழகம்!!! பேராசிரியர், ஆற்காட்டார் எல்லாம் வி.ஆர்.எஸ் வாங்கிகொள்வது நல்லது.இது என் கடைசி தேர்தல் என்கிற சென்டிமென்ட் சீன் வேலைக்கு ஆகாது தலைவரே! போன முறை கடைசி அஸ்திரமாக இலவசத்தை அள்ளிவிட்டது போல் ஏதாவது இண்டிரஸ்டிங்காக யோசியுங்கள்!

அ.தி.மு.க

இது வாழ்வா சாவா பிரச்சினை . இந்த முறை ஜெயிக்காவிட்டால் கட்சியில் ஜெ.வையும் சசிகலாவையும் தவிர எல்லோரும் தி,மு.கழகத்தில் சேர்ந்துவிடும் வாய்ப்பிருக்கிறது.(ராசாவிடம் தமிழ்நாட்டையே வாங்கும் அளவுக்கு பைசா இருக்கும் போல...கேவலம் ஒரு கட்சியை வாங்குவதா கஷ்டம்?). கடந்த ஆட்சியின் போது கொடுத்த கசப்பான மருந்துகளெல்லாம் மக்கள் மறந்துவிட்டது ஒரு நல்ல விஷயம்.ஆனால் இன்னும் ஜெயா டி.வி யில் ரபி பெர்னார்ட் ஒவ்வொரு மாவட்டச் செயலாலர்களையும் கருணாநிதியை திட்டவைத்து பேட்டி எடுக்கவைத்துக் கொண்டிருந்தால் தேறுவது கஷ்டம். மக்களுக்குப் புரியவைப்பதற்கும் போராடுவதற்கும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.விலைவாசியை விட அற்புதமான ஆயுதம் ஏது? காங்கிரஸ் கை கழுவி விட்டதில் ஏற்பட்ட நஷ்டத்தை விஜயகாந்த் சரிக்கட்டக்கூடும். தடாலடியாக முடிவெடுப்பது சில சமயம் நல்லதுதான். ஆனால் அதுவே ஒரு பத்துவருஷம் பத்திய சாப்பாடு போட்டுதுன்னா...மேடம் யோசிக்கணும்!

பா.ம.க:

ராமதாஸ் எந்த கூட்டணியில் இருக்கிறார் என மக்கள் டி.விக்கே தெரியவில்லை.அவரது கட்சிக்காரர்களிடம் கேட்டால் அன்புமணிக்கே தெரியலைன்னு பதில் வருகிறது. அன்புமணியிடம் கேட்டால் ராமதாஸுக்கே தெரியாது என்பார். ஒரு ராஜ்ய சபா சீட்டும் சுகாதார மந்திரி பதவி கொடுத்தால் முஷரஃப், ஷேக் ஹசீனா, ஏன் புரூனே சுல்தானிடம் கூட கூட்டணி வைத்துக்கொள்வார். கேட்டு வாங்கும் இடத்திலிருந்து கொடுத்ததை வாங்கிகொள்ளும் நிலைக்கு வந்துவிட்டதும் ஆங் அதென்ன ..காலத்தின் கட்டாயம்.

மதிமுக :

ராமதாஸுக்காவது அன்பு மணி ராஜ்யசபா மந்திரிபதவி என்று அரசியல் செய்ய ஒரு காரணம் இருக்கும். ஆனால் வைகோவுக்கு எதற்காக அரசியல் செய்கிறோம் எதை வைத்து அரசியல் செய்வது என்பதை கண்டுபிடிக்கவே பெரும்பாடாக இருக்கும்.அண்ணனைப் பொறுத்தவரை அம்மா எவளவு சீட் கொடுத்தாலும் அது போனஸ் தான்.இரட்டை இலை சின்னத்திலேயே நின்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

சரி ஏன் திடீரென்று ஜனநாயகத்தின் மேல் இவ்வளவு கரிசனம் என்று கேட்கலாம்? இருக்கிறது. ஓட்டுப்போடாவிட்டால் உறுத்தும். ஓட்டுப்போட்டால் மனசாட்சி எட்டிநின்று கை கொட்டி சிரிக்கும்.

திமுக+காங்கிரஸுக்குக்கு ஓட்டுப்போட்டால் எப்படியும் கைசெலவுக்கே வழிப்பறி தான் செய்யவேண்டும். அதிமுக அன்ட் கோவுக்குப் போட்டால் கோபத்தில் அரசு ஊழியர்களோடு தனியார் கம்பேனி ஊழியர்களையும் சேர்த்து டெஸ்மா எஸ்மா என்று போட்டால் புழல் என்ன கொடைக்கானலா? சத்தியமாக தாங்க முடியாது. பிரேமலதா விஜயகாந்த் மீட்டிங்கில் பிளிறுவதைப் பார்த்தால் "எங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க...அப்புறம் பாருங்க எவ்வளோ சுருட்டிக் காண்பிக்கிறோம்னு " என்று சவால் விடுவதைப்போல் உள்ளது. 49 ஓ போடலாமென்று பார்த்தால் அதனால் யாருக்கும் பிரயோஜனமில்லை. இங்கு இருப்பது ஒரே கட்சி தான். அதன் பெயர் அகில இந்திய அண்ணா தேசிய முற்போக்கு திராவிட மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகம்.

அதனால் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன்.

என்னவா?

என் ஓட்டை எனக்கே போட்டுவிடுவது என்று. அதான் பாஸ் ! இவனுங்க கிட்ட இருந்து தப்பிக்கணும்னா இதான் ஒரே வழி! நானும் எலெக்ஷன் ல நின்னுடலாம்னு பார்க்கறேன்.

என்ன பார்க்கிறீர்கள் ?

நாம் தான்  இந்நாட்டு மன்னர்களாயிற்றே!