அதிர்ஷ்ட தேவதை யார் பக்கம் - உலகக் கோப்பை 2011
1987 ல் மைக் கேட்டிங் அந்த ரிவர்ஸ் ஸ்வீப் ஆடாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
1996 ல் கல்கத்தா ரசிகர்கள் கலவரம் செய்யாமல் இருந்து காம்ப்ளி காப்பாற்றியிருந்தால் எப்படி இருந்திருக்கும்?
1999 ல் ஆலன் டொனால்ட் அந்த ஒரு ரன்னை வேகமாக ஓடியிருந்தால் எப்படி இருந்திருக்கும்?
சில கணங்கள் தான் வாழ்வின் பெரும்பாலான பகுதியை தீர்மானிக்கிறது! கிரிக்கெட் மட்டும் என்ன விதி விலக்கா? கிரிக்கெட்டை Game of Glorious Uncertainties என்பார்கள்.கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மாற்றப்போகும் அந்த ஒரு கணம் இந்தத் தொடரிலும் நடக்கக் கூடும்.அபிலாஷின் மேலிருந்து கீழ் நோக்கும் அந்த கிரிக்கெட் தேவதையும் தோழிகளும் இந்தியக் கிரிக்கெட்டை ஆசீர்வதிக்கட்டும்.எப்பொழுதும் கிரிக்கெட் பார்க்கும்போது மட்டும் சட்டைப்பையிலிருந்து எட்டிப்பார்க்கும் தேசப்பற்றுக்கு நிதர்சனம் ஸ்னேகிதமாக இல்லாமல் போக வாய்ப்பிருக்கிறதல்லவா.எல்லோரும் ஆரூடம் சொல்கிறார்கள். சிலர் டெக்னிகலாக... சிலர் உள்ளுணர்வின் மூலம்!
ஃபேவரைட்டுகள் சொதப்புவதும் எதிர்பாராமல் கெவின் பிரயன் போன்றவர்கள் ஸ்டார்களாவதும் உலக்கோப்பையில் சகஜம். ஆனால் தனி ஒரு மேட்ச் வின்னரால் மட்டுமே கோப்பையைத் தட்டிகொண்டு வந்துவிட முடியாது! ரசிகர்களின்,மீடியாக்களின் பிரஷர் காரணமாக எந்த ஃபேவரைட் அணியும் சொதப்பத்தான் செய்யும். விதிவிலக்கு ஆஸ்திரேலியா மட்டுமே! 2003 லும் 2007 லும் யாராக இருந்தாலும் அடித்து நொறுக்கி துவம்சம் செய்யும் நோக்கிலேயே விளையாடி ஜெயித்தார்கள். அதன் காரணம் அவர்கள் ஜெயிப்பதை ஒரு Habit ஆக வைத்திருந்தது தான். ஆசிய நாடுகளுக்கு அது சுத்தமாகக் கிடையாது. ஒருவேளை அது தான் கிரிக்கெட் ஆசிய நாடுகளில் இவ்வளவு காலூன்றுவதற்கு காரணமாகவும் இருக்கலாம்.
சமபலத்துடன் நான்கைந்து தேசங்கள் உறுமிக்கொண்டு நிற்கும் வேளையில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கக்கூடும்?
மேற்கிந்திய தீவுகள் : டாரன் சாமி துவக்க விழாவில் சிரித்துக் கொண்டே வந்ததைப் பார்த்தால் சுற்றுலா வந்த மாதிரிதான் இருந்தது. தோற்றாலும் பிரச்சினை இல்லை என்பதால் எவ்வளவு முன்னேறினாலும் லாபம் தான்.
நியூஸிலாந்து : எல்லா நல்ல பிளேயர்கள் இருந்தும் ஏன் தோற்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியவில்லை. வெட்டோரி ஒரு அதிரடி கேப்டன் கிடையாது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.கேப்டன் எவ்வழி பிளேயர்கள் அவ்வழி!
தென் ஆப்பிரிக்கா : இவர்கள் அதிர்ஷ்டத்துக்கு வேற்றுக் கிரகத்திலிருந்து ஏலியன்கள் இறங்கி அதனால் டக் வொர்த் முறையில் வெளியேறினால் கூட ஆச்சர்யமில்லை. அப்படி ஒரு அதிர்ஷ்டக் கட்டைகள். ஸ்பின்னர்களுக்கு பயந்து நடுங்காத பட்சத்தில் இறுதி வரை முன்னேறக் கூடும்.
இங்கிலாந்து : இந்த அணியை பொறுத்த வரையில் ரெண்டே விஷயம் தான். இவர்கள் இரண்டு தப்பு செய்தால் தோற்றுவிடுவார்கள். எதிர் அணியினரை இரண்டு தப்பு செய்ய வைத்தால் ஜெயிப்பார்கள். நெருக்கடியை சமாளிப்பதில் பிரிட்டிஷ் வீரர்கள் ஒன்றும் சம்ர்த்தர்கள் இல்லை. ஆஸ்திரேலியாவைப் போல கடைசி வரை ஒரு கை பார்த்து விடுவது என்ற மனோ திடத்தில் இங்கிலாந்து ஆடினால், கோப்பை கைகூடும்.
ஆஸ்திரேலியா : எல்லோராலும் இந்த முறை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ள அணி. 87 லும் , 99 லும் இவர்கள் ஒன்றும் ஃபேவரைட் கிடையாது என்பதை கவனிக்கவும்.ஆனால் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்கள்.
இலங்கை : பேட்டிங்கில் ஸ்ட்ராங்.பவுலிங்கிலும் ஸ்ட்ராங். பழைய இந்திய அணியினர் போல் நிறைய மேட்ச் வின்னர்கள் இருந்தும் கணிக்க முடியாத அணி. பாகிஸ்தானுடன் விளையாடியதைப் பார்த்தாலே புரிந்திருக்கும்.அதிகபட்சம் செமிஃபைனல்ஸ்.
இந்தியா : நிறைய எதிர்பார்ப்புகள். தோனியின் மீது கூடுதல் சுமை. யூசுஃப் பதானை முன்னால் இறக்கி விட்டு தோனி பின்னால் இறங்கினால் உத்தமமாக இருக்கும். ஆஸ்திரேலிய , இலங்கை வீரர்களுக்கு நன்கு பரிச்சயப்பட்ட ஹர்பஜனை கழட்டிவிட்டு அஸ்வினுக்கு வாய்ப்பளித்தால் மாஜிக்குகள் எதிர்பார்க்கலாம்.
இந்த உலகக்கோப்பை போட்டிகளில் ஸ்பின்னர்களை பற்றி நிறைய ஆராய்ச்சி செய்கிறார்கள். ஸ்பின்னர்களுக்கு ஸ்லாக் விக்கெட்டுகளைக் கழட்டுவதில்தான் முக்கியப் பங்கு இருக்கும். ஆனால் விதியை வெல்ல பார்ட்னர்ஷிப் பிரேக்கர்கள் தேவை. மிதவேகப் பந்து வீச்சைப் பற்றி யாரும் கவலைப்பட்டாற்போல் தெரியவில்லை.
மிகவும் மெதுவாக எழும்பும் பிட்சுகள் கொண்ட இந்தியாவில் நிலைத்து ஆடுவது மிகவும் சுலபம். அதை உடைப்பது 30-40 ஒவர்களில் வீசும் பவுலர்களிடம் தான் உள்ளது. அதற்கு ஆல் ரவுண்டர்கள் தேவை. நாம் அதைப் பற்றியும் கவலைப்பட்டது போல் தெரியவில்லை. இர்ஃபான் பதான் இருந்திருந்தால் நமது அணி சற்று வலுவாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
மேலும் கோப்பையை வெல்வதற்கு கேப்டன் கூலாக இருந்தால் மட்டும் போதாது. வெறி வேண்டும். லீக் ஆட்டங்களிலும் சாம்பியன் போல் ஆடும் அணி தான் இறுதிப் போட்டி வரை வரும். 2003 ல் ஆடிய இந்திய அணி முதல் மேட்சை தவிர்த்து எல்லா ஆட்டங்களிலும் சாம்பியன் போலவே ஆடியது. ஆனால் கங்குலியிடம் இருந்த வெறியை விட ரிக்கி பான்டிங்கிடம் இருந்த வெறி அதிகம். அதனால் தான் அவர்களால் கோப்பையை தொடர்ந்து கைப்பற்ற முடிந்திருக்கிறது.
இது வரை சாம்பியன் ஆன எந்த அணியையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆல்ரவுண்டர்கள் அந்த அணியில் நிறைந்திருப்பார்கள். 83 ல் இந்தியா..92 ல் பாகிஸ்தான்... 96 ல் இலங்கை என ஆசிய நாடுகள் ஜெயித்த எந்த வெற்றி அணியிலும் ஆல்ரவுண்டர்களின் பங்கு கணிசமாக இருந்திருக்கும்.அதே போல் ஒரு வேடிக்கையான உண்மை என்னவென்றால் கோப்பையை வெல்லும் எந்த அணியும் அந்தத் தொடரில் தான் ஃபார்முக்கு வரும்.அல்லது உலகத்தொடரின் முந்தைய போட்டிகளில் ஃபார்முக்கு வரும். 83 ல் இந்தியா வெஸ்ட் இண்டீஸின் சுற்றுபயணத்தில் அசத்திய கையோடு கோப்பையைத் தட்டிச் சென்றது. 96 ல் இலங்கை அந்தத் தொடருக்கு முன் தான் ஃபார்ம் ஆக ஆரம்பித்தது.99 உலகக்கோப்பையில் ஃபார்முக்கு வந்த ஆஸ்திரேலியா 10 வருடங்களுக்கு மேலாக தனது ஆட்டத்திறனை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.
இந்த உலகக்கோப்பையில் ஒரு அணி தற்பொழுதுதான் ஃபார்முக்கு வர ஆரம்பித்திருக்கிறது. கிரிக்கெட் மீதுள்ள காதலில் தேசப்பற்றை சற்று மூலையில் அமர்த்தி வைத்துவிட்டுப் பார்த்தால் அந்த அணிதான் என்னோட ஃபேவரைட்டும்.
அந்த அணி - பாகிஸ்தான்!
************************************************************************************
முனைவ்வ்வர் பட்டாபட்டி....
Saturday, March 05, 2011
கிரிக்கெட் மீதுள்ள காதலில் தேசப்பற்றை சற்று மூலையில் அமர்த்தி வைத்துவிட்டுப் பார்த்தால் அந்த அணிதான் தான் என்னோட ஃபேவரைட்டும்.
//
நீ விஜயகாந்தை எதுக்கு உசுப்பேத்தி விடறே?..
ஹி..ஹி
நல்ல வேளைப்பா.. எனக்கு ஆணி அதிகம்.. ஹி..ஹி