RSS

தமிழ்மகனின் "ஆண்பால் - பெண்பால்" -


"ஐ லவ் யூ" என்கிற பிரயோகத்தை ஒரு ஆண் சொல்வதற்கும் ஒரு பெண் சொல்வதற்கும் எத்தனை வேறுபாடுகள்? சுகம், துக்கம், சந்தோஷம், மரணம் என வாழ்வின் அத்தனை கூறுகளையும் ஓர் ஆண் எதிர்கொள்வதற்கும் அதையே ஒரு பெண் எதிர்கொள்வதற்கும் தான் எவ்வளவு வித்தியாசங்கள். அதுவும் மனப்பிறழ்வு போன்ற அதிகம் அறியப்படாத ஒரு சிக்கலை பால்பாற் சிந்தனைகளை "ஆண்பால் பெண்பால் " என்கிற நாவலாக ரசனையான நடையில் தந்திருக்கிறார் தமிழ் மகன்.


கனவுகளோடு ஆரம்பிக்கும் ஒரு தாம்பத்யம். நடுவில் எம்.ஜி.ஆர் புகுந்து குட்டையை குழப்பி விடுகிறார். கேட்கவே ஜோராக இருக்கும் இந்த இழை சுவாரஸ்யம் குறையாமல் ஒரு அழகான திரைக்கதையின் நேர்த்தியோடு பயணிக்கிறது , கடைசிக்கு முந்தைய அத்தியாயம் வரை. முடிவில் ஒரு திகைக்கவைக்கும் திருப்பம்.தலையணை சைஸ் புத்தகங்களுக்கு மத்தியில் இருநூற்றி சொச்சம் பக்கங்களில் கைக்கு அடக்கமாக கச்சிதமாக ரகளையாக ஒரு நாவல்.

இந்தக்கதையை பிரியா சொல்வதாக டாக்டர் பிரமீளாவும் அருண் சொல்வதாக ரகுவும் எழுதுகிறார்கள்.

அருண் - பிரியா புது மண தம்பதிகள். பிரியா தனியார் ஆவணக் காப்பகத்தில் வேலை பார்க்கிறாள்.பிரியாவின் தந்தை தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக இருந்து பின்னர் வாழ்க்கையின் நீரோட்டத்தில் கலந்து விட்ட அந்த தலைமுறை பிரதிநிதி. அருண் எம்.ஜி.ஆர் பற்றியெல்லாம் அவ்வளவாக அறிந்திராத அக்கறைப்படாத ஒரு சராசரி. ஆர்வமுடன் இல்லறத்தை எதிர்நோக்கும் போது எம்.ஜி.ஆர் சூட்சும ரூபத்தில் வில்லனாக நுழைகிறார். அதாவது பிரியா தன்னுள் எம்.ஜி.ஆர் ஆவி நுழைந்து விட்டதாக நினைக்க ஆரம்பிக்கிறாள். மனப்பிறழ்வின் ஆரம்பத்தில் இருக்கும் பிரியா வியாதியின் அடர்த்தி ஏற ஏற தன்னை முழுவதுமாக எம்.ஜி.ஆரிடம் ஒப்படைத்து விடுகிறாள்.எம்.ஜி.ஆர் தன் மூலம் குழந்தையின்மை எனும் நிராசையை நிவர்த்தி செய்ய முயல்வதாக நம்புகிறாள். அருணுக்கு முதலில் சிறுபிள்ளைத்தனமாக தெரியும் இந்த விஷயம் மெல்ல மெல்ல அதன் வீர்யம் புரிபட ஆரம்பித்ததும் அதிர்கிறான்.

பிரியாவின் தந்தை எம்.ஜி.ஆரின் ரசிகராக இருந்தது மட்டும் அவளின் ரோகத்துக்குக் காரணமில்லை, அதையும் தாண்டி ஏதோ ஒன்று அவளிடம் எம்.ஜி.ஆரை கொண்டு வந்து சேர்த்திருக்க வேண்டும் என யூகிக்கிறான். அது என்னவென்று தெரிய வரும்போது மொத்தக் கதையின் தன்மையுமே மாறிவிடுகிறது.மாத்திரை மருத்துவம் என எதுவும் பலனளிக்காத நிலையில் குடும்ப நீதி மன்றம் அருணை பிரியாவிடம் இருந்து விடுவிக்கிறது. மனநல நோயாளிகளின் அவஸ்தையையும், விவாகரத்துகள் கேள்விக்குள்ளாக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய அக்கறையான விசாரத்தோடு முடிகிறது நாவல்.

கதையின் பலம் இரண்டு விஷயங்கள்.

1. நேரடியான விவரிப்பாக அல்லாமல் சம்பவங்களூடாக பயணிக்கிறது கதை. அதுவும் ஒரே சம்பவங்களை பிரியா சொல்வதாகவும் பின்னர் அதையே அருண் சொல்வதாகவும் வருகிறது. ஒரே நிகழ்வு -  வெவ்வேறு விதமான புரிதல்கள் என்கிற ரஷோமோன் வகை சொல்லாடல் மிகவும் ஆபத்தானது. தனக்கு வசதியான பார்வையை அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு இன்னொன்றை மேலோட்டமாக தந்து விடும் அபாயம் இருக்கிறது. ஆனால் இதில் பெண்ணின் பார்வை ஆழமாகவும் அருணின் பார்வை சற்று நீர்த்தும் , அதனதன் பிரதிநித்துவம் கதையின் தன்மைக்கு நியாயம் சேர்க்கிறது. நாவலின் முடிவில் நிகழும் திருப்பம் கதையின் பார்வையை முற்றிலும் வேறு விதமாக பார்க்க வைக்கிறது.

2. எம்.ஜி.ஆர். - ஒரு தலைமுறையின் ஆதர்சத்தை தள்ளி நின்று பார்க்கவைக்காமல், அவர் வாழ்க்கையில் நடந்த வெகுஜன ஊடகங்களில் அதிகம் வெளிவராத , அறியப்படாத சம்பவங்களை வைத்துப் பின்னியிருப்பது தமிழ் மகனின் சாமர்த்தியம். எம்.ஜி.ஆர் கும்பகோணத்தில் படித்த பள்ளிக்கூடம், மயிலாப்பூரில் அவருக்காக தங்க பஸ்பம் செய்த இடம், தேர்தல் செலவுக்குக் கடன் வாங்கியது எல்லாம் சுவாரஸ்யத்தைக் கூட்டும் அத்தியாயங்கள். ஆனால் என்னதான் பிரியா எம்.ஜி.ஆரை Godly பிம்பமாகப் பார்த்தாலும் எம்.ஜி.ஆரைப் பற்றிய நெகட்டிவ் சமாசாரங்கள் தான் அதிகம் இருப்பதாகப் படுகிறது. தமிழ் மகனும் அதைத் தான் விரும்பியிருக்கிறாரோ என்னவோ?

ஒரு முழு தலைமுறை கடந்துவிட்ட பிறகும் எம்.ஜி.ஆர் எனும் பிம்பம் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் ஆய்வுக்குரியது. அவரை கடவுளாகவோ,ஓட்டு வங்கியாகவோ அல்லது சினிமா எனும் மயக்கமருந்தை சரியான கலவையில் தெளித்து ஒரு பெருங்கூட்டத்தை சிந்திக்கவிடாமல் செய்து ஆட்சியைப் பிடித்த ஒரு தந்திரவாதியாகவோ பார்க்காமல் அவரை அசலாகப் பார்க்க முயற்சி செய்யத் தூண்டியது இந்நாவலின் வெற்றி.

குழப்பமான முன்னுரையை தவிர்த்திருக்கலாம். அது அப்படி ஒன்றும் சிலாக்கியமாகவும் இல்லை. நாவலே வித்தியாசமாக இருக்கும் பொழுது வாசகனின் கவன ஈர்ப்புக்கு வேறெதுவும் தேவை இல்லை. கடைசி அத்தியாயம் வரை மெலிதாக புன்னகைத்துக் கொண்டே வாசிக்கத்தூண்டும் ஒரு வித்தியாசமான கதை - "ஆண்பால் பெண்பால்".

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.
  1. Unknown

    Tuesday, February 21, 2012

    உங்கள் விமர்சனம் நாவலைப் படிக்கத்தூண்டுகிறது!

  1. Rettaival's Blog

    Tuesday, February 21, 2012

    நன்றி ஞானசேகரன்... விலை கொஞ்சம் அதிகம் தான். ஆனாலும் வாங்கிப் படிக்கலாம்

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Tuesday, February 21, 2012

    உமக்கு ஒரு சவால்...
    இதே போல், எச்சக்கல்...சாரிப்பா... எக்சைல் நாவலையும் விமர்சிக்கமுடியுமா?


    ஒரு அல்லக்கை, சுஜாதாவின் எழுத்துடன் ஒப்பிட்டுப்பேசியதை யூ-ட்யூபில் பார்த்து.. டர்ர்ர்ர்ர் ஆகி இருக்கேன்..

    படிச்சுப்பார்த்துட்டு.. இன்னாதான் எழுதியிருக்குனு சுருக்கமா சொன்னா.. புண்ணியமா போகும் சார்...

  1. Rettaival's Blog

    Tuesday, February 21, 2012

    பட்டாபட்டி...எதையும் தாங்கும் இதயம் எனக்கில்லை...ஆளை வுடு!

  1. Veliyoorkaran

    Tuesday, February 21, 2012

    மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்..! நீங்கள் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளது போல் தமிழ்நாடு கூடிய விரைவில் நாசமா போயிரும்..! பகிர்விற்கு நன்றி...!--எங்கயோ எதையாச்சும் படிச்சிட்டு எங்கயாச்சும் போய் எதையாச்சும் எழுதி வெய்க்கும் சங்கம்...! :)

  1. Rettaival's Blog

    Wednesday, February 22, 2012

    Veliyoorkaran said...
    மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்..! நீங்கள் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளது போல் தமிழ்நாடு கூடிய விரைவில் நாசமா போயிரும்..! பகிர்விற்கு நன்றி...!--எங்கயோ எதையாச்சும் படிச்சிட்டு எங்கயாச்சும் போய் எதையாச்சும் எழுதி வெய்க்கும் சங்கம்...! :)
    ***********************************************

    பட்டாபட்டி பதிவு எதுனா படிச்சியா...?

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Wednesday, February 22, 2012

    பட்டாபட்டி பதிவு எதுனா படிச்சியா...?
    //

    பயபுள்ள படிச்சிருப்பான் போலிருக்கு..!!!

  1. திண்டுக்கல் தனபாலன்

    Wednesday, February 22, 2012

    நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் !

  1. சாம் ஆண்டர்சன்

    Wednesday, February 22, 2012

    சாருவ நோண்டாட்டி தூக்கம் வராதாடா

  1. Rettaival's Blog

    Thursday, February 23, 2012

    நன்றி திண்டுக்கல் தனபாலன்!

  1. தமிழ்மகன்

    Thursday, February 23, 2012

    மிக நன்றாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள். நீங்கள் சொன்னது போல முன்னுரை நீளம்தான். ஆனால் இந்த நாவலுக்காக நான் சுமார் 30 ஆன்டுகளாகத் திட்டமிட்டதுபோல ஒரு ஈர்ப்பைக் கொண்டுவர அதில் முயன்றேன். என்னுடைய பல நூல்களின் முன்னுரைகள் எம்.ஜி.ஆரின் நினைவுநாளான டிசம்பர் 24&ல் வெளியான ஒற்றுமையை அதில் கொண்டுவர நினைத்தேன். எம்.ஜி.ஆர். மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை என்பதை வலியுறுத்திச் சொல்வதால் ஒரு வாசக ஈர்ப்பு இருக்கும் எனவும் எதிர்பார்த்தேன்.
    -தமிழ்மகன்
    tamilmagan2000@gmail.com

  1. Rettaival's Blog

    Friday, February 24, 2012

    விமர்சனத்தைப் பார்வையிட்டு கருத்திட்டமைக்கு நன்றி தமிழ்மகன். நெடு நாட்களுக்குப் பிறகு ஒரே மூச்சில் வாசிக்கவைத்த கதை இது.வறண்ட தமிழ் நாவல் சூழலில் இது போன்ற சுவாரஸ்யங்கள் அவ்வப்போது எங்களை ஆசுவாசப் படுத்துகின்றன. உங்களது அடுத்த படைப்பு இந்த நாவலுக்கு முற்றிலும் வேறான ஒரு Plotல் அமைந்து இதே சுவாரஸ்யத்தோடு எங்களை ரசிக்க வைக்கும் என நம்புகிறேன்.

  1. ILLUMINATI

    Sunday, February 26, 2012

    தமிழ்நாட்டின் தங்கமகனுக்கு முன்னாடி தமிழ் மகனாவது,இங்கிலீஷ் மகனாவது? எழுத்தாளர்களுக்கு மரியாத கொடுக்கத் தெரியுதா உங்களுக்கு? ஒரு எழுத்தாளன் தன்னைப் பத்தி தானே பில்ட் அப் கொடுதுக்கிற நாற வேலை எல்லாம் பார்க்க வேண்டி இருக்குது. இன்னும் எக்ஸ்சைல் படிக்கலையா நீ? :)

  1. ILLUMINATI

    Sunday, February 26, 2012

    On a serious note, நல்ல விமர்சனம் மச்சி.

  1. Jerji

    Sunday, May 20, 2012

    forget the novel for a moment. Look at the Tamil culture today. Dont you feel like slapping all those fans of sixties and seventies who with some fancy and intoxication gave a chance to the Tamil cinemvai piditha saniyan.
    All the present day misery of TN can be traced and attributed to that influence of deifying reel heroes.
    Now for the crux of the matter. It is high time these images which are now being touted as Gods an temples shown the reality. On that count if the novel had made move 1 I wish the endeavour all success.
    Jayraj

  1. Rettaival's Blog

    Monday, May 21, 2012

    ஜெர்ஜி!

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. சினிமாக்காரர்கள் தமிழக அரசியலில் நுழைந்து நாசப்படுத்தி, அரசியலையே ஒரு சினிமா ஷோவாக மாற்றி வைத்துள்ளனர் என்பதும் மறுக்க முடியாது.ஆனால் சினிமா வாடையே இல்லாத பல மாநிலங்களிலும் முன்னேற்றமும் கலாசாரமும் அவ்வளவு யோக்கியமானதாக இல்லையே?

    நாயக பிம்பத்தில் மயங்கி அதிகாரத்தை கையில் கொடுப்பதென்பது நம் தேசிய வியாதி.அதிலும் குறிப்பாக பில்டப்புகளில் கிறங்கி யதார்த்தத்தை கண்டுகொள்ளாமல் விடுவது சங்க காலத்தில் இருந்தே தொடர்ந்து வந்திருக்கிறது. குறிப்பிட்ட காலகட்ட ரசிகர்களை மட்டும் நொந்து என்ன பயன்?

Post a Comment