தமிழ்மகனின் "ஆண்பால் - பெண்பால்" -
கனவுகளோடு ஆரம்பிக்கும் ஒரு தாம்பத்யம். நடுவில் எம்.ஜி.ஆர் புகுந்து குட்டையை குழப்பி விடுகிறார். கேட்கவே ஜோராக இருக்கும் இந்த இழை சுவாரஸ்யம் குறையாமல் ஒரு அழகான திரைக்கதையின் நேர்த்தியோடு பயணிக்கிறது , கடைசிக்கு முந்தைய அத்தியாயம் வரை. முடிவில் ஒரு திகைக்கவைக்கும் திருப்பம்.தலையணை சைஸ் புத்தகங்களுக்கு மத்தியில் இருநூற்றி சொச்சம் பக்கங்களில் கைக்கு அடக்கமாக கச்சிதமாக ரகளையாக ஒரு நாவல்.
இந்தக்கதையை பிரியா சொல்வதாக டாக்டர் பிரமீளாவும் அருண் சொல்வதாக ரகுவும் எழுதுகிறார்கள்.
அருண் - பிரியா புது மண தம்பதிகள். பிரியா தனியார் ஆவணக் காப்பகத்தில் வேலை பார்க்கிறாள்.பிரியாவின் தந்தை தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக இருந்து பின்னர் வாழ்க்கையின் நீரோட்டத்தில் கலந்து விட்ட அந்த தலைமுறை பிரதிநிதி. அருண் எம்.ஜி.ஆர் பற்றியெல்லாம் அவ்வளவாக அறிந்திராத அக்கறைப்படாத ஒரு சராசரி. ஆர்வமுடன் இல்லறத்தை எதிர்நோக்கும் போது எம்.ஜி.ஆர் சூட்சும ரூபத்தில் வில்லனாக நுழைகிறார். அதாவது பிரியா தன்னுள் எம்.ஜி.ஆர் ஆவி நுழைந்து விட்டதாக நினைக்க ஆரம்பிக்கிறாள். மனப்பிறழ்வின் ஆரம்பத்தில் இருக்கும் பிரியா வியாதியின் அடர்த்தி ஏற ஏற தன்னை முழுவதுமாக எம்.ஜி.ஆரிடம் ஒப்படைத்து விடுகிறாள்.எம்.ஜி.ஆர் தன் மூலம் குழந்தையின்மை எனும் நிராசையை நிவர்த்தி செய்ய முயல்வதாக நம்புகிறாள். அருணுக்கு முதலில் சிறுபிள்ளைத்தனமாக தெரியும் இந்த விஷயம் மெல்ல மெல்ல அதன் வீர்யம் புரிபட ஆரம்பித்ததும் அதிர்கிறான்.
பிரியாவின் தந்தை எம்.ஜி.ஆரின் ரசிகராக இருந்தது மட்டும் அவளின் ரோகத்துக்குக் காரணமில்லை, அதையும் தாண்டி ஏதோ ஒன்று அவளிடம் எம்.ஜி.ஆரை கொண்டு வந்து சேர்த்திருக்க வேண்டும் என யூகிக்கிறான். அது என்னவென்று தெரிய வரும்போது மொத்தக் கதையின் தன்மையுமே மாறிவிடுகிறது.மாத்திரை மருத்துவம் என எதுவும் பலனளிக்காத நிலையில் குடும்ப நீதி மன்றம் அருணை பிரியாவிடம் இருந்து விடுவிக்கிறது. மனநல நோயாளிகளின் அவஸ்தையையும், விவாகரத்துகள் கேள்விக்குள்ளாக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய அக்கறையான விசாரத்தோடு முடிகிறது நாவல்.
கதையின் பலம் இரண்டு விஷயங்கள்.
1. நேரடியான விவரிப்பாக அல்லாமல் சம்பவங்களூடாக பயணிக்கிறது கதை. அதுவும் ஒரே சம்பவங்களை பிரியா சொல்வதாகவும் பின்னர் அதையே அருண் சொல்வதாகவும் வருகிறது. ஒரே நிகழ்வு - வெவ்வேறு விதமான புரிதல்கள் என்கிற ரஷோமோன் வகை சொல்லாடல் மிகவும் ஆபத்தானது. தனக்கு வசதியான பார்வையை அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு இன்னொன்றை மேலோட்டமாக தந்து விடும் அபாயம் இருக்கிறது. ஆனால் இதில் பெண்ணின் பார்வை ஆழமாகவும் அருணின் பார்வை சற்று நீர்த்தும் , அதனதன் பிரதிநித்துவம் கதையின் தன்மைக்கு நியாயம் சேர்க்கிறது. நாவலின் முடிவில் நிகழும் திருப்பம் கதையின் பார்வையை முற்றிலும் வேறு விதமாக பார்க்க வைக்கிறது.
2. எம்.ஜி.ஆர். - ஒரு தலைமுறையின் ஆதர்சத்தை தள்ளி நின்று பார்க்கவைக்காமல், அவர் வாழ்க்கையில் நடந்த வெகுஜன ஊடகங்களில் அதிகம் வெளிவராத , அறியப்படாத சம்பவங்களை வைத்துப் பின்னியிருப்பது தமிழ் மகனின் சாமர்த்தியம். எம்.ஜி.ஆர் கும்பகோணத்தில் படித்த பள்ளிக்கூடம், மயிலாப்பூரில் அவருக்காக தங்க பஸ்பம் செய்த இடம், தேர்தல் செலவுக்குக் கடன் வாங்கியது எல்லாம் சுவாரஸ்யத்தைக் கூட்டும் அத்தியாயங்கள். ஆனால் என்னதான் பிரியா எம்.ஜி.ஆரை Godly பிம்பமாகப் பார்த்தாலும் எம்.ஜி.ஆரைப் பற்றிய நெகட்டிவ் சமாசாரங்கள் தான் அதிகம் இருப்பதாகப் படுகிறது. தமிழ் மகனும் அதைத் தான் விரும்பியிருக்கிறாரோ என்னவோ?
ஒரு முழு தலைமுறை கடந்துவிட்ட பிறகும் எம்.ஜி.ஆர் எனும் பிம்பம் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் ஆய்வுக்குரியது. அவரை கடவுளாகவோ,ஓட்டு வங்கியாகவோ அல்லது சினிமா எனும் மயக்கமருந்தை சரியான கலவையில் தெளித்து ஒரு பெருங்கூட்டத்தை சிந்திக்கவிடாமல் செய்து ஆட்சியைப் பிடித்த ஒரு தந்திரவாதியாகவோ பார்க்காமல் அவரை அசலாகப் பார்க்க முயற்சி செய்யத் தூண்டியது இந்நாவலின் வெற்றி.
குழப்பமான முன்னுரையை தவிர்த்திருக்கலாம். அது அப்படி ஒன்றும் சிலாக்கியமாகவும் இல்லை. நாவலே வித்தியாசமாக இருக்கும் பொழுது வாசகனின் கவன ஈர்ப்புக்கு வேறெதுவும் தேவை இல்லை. கடைசி அத்தியாயம் வரை மெலிதாக புன்னகைத்துக் கொண்டே வாசிக்கத்தூண்டும் ஒரு வித்தியாசமான கதை - "ஆண்பால் பெண்பால்".
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.
Unknown
Tuesday, February 21, 2012
உங்கள் விமர்சனம் நாவலைப் படிக்கத்தூண்டுகிறது!