இப்படிக்கு சைந்தவி, W/O சிபி ( இன்னும் சில நூறு ஜென்மங்களுக்கு)
சைந்தவி புருஷனுக்கு,
சைந்தவி எழுதுவது.வழக்கமா எல்லாக் கடிதத்துலையும் எழுதிக்கொள்வதுன்னு தான் போடுவேன். ஏன்னா இது வரைக்கும் எந்தக் கடிதத்தையுமே உன் கிட்ட காண்பிச்சதில்ல. எழுதி எழுதி கிழிச்சுப்போட்டு மனசுக்குள்ள சிரிச்சிக்கிட்டே அழறதுலையும் அப்படி ஒரு அல்ப சந்தோஷம்! தவிர நான் எழுதினா நீ கிண்டல் பண்ணி அழவைப்பேன்னும் தெரியும்!
என்னை எப்படிடா கண்டுபுடிச்ச நீ? மேட்சிங்கா டிரஸ் கூட பண்ணிக்கத் தெரியாத என்னை எப்படியெல்லாம் நீ மாத்தின தெரியுமா? நீ வந்து பொன்னு பார்த்துட்டுப் போன பின்னாடி தான் எனக்கே தெரியும் நானும் கொஞ்சம் அழகாதான் இருந்திருக்கேன்னு. பொன்னுங்களோட உள்ளுணர்வு ஒன்னு இருக்கு. கடவுளைவிட சரியா சொல்லிடும். உன்னைப் பார்த்தப்போ தோணுச்சுடா அது, நான் இந்த உலகத்துலயே ரொம்ப அதிர்ஷ்டசாலின்னு! அது பொய்யே ஆகலை , இந்த நிமிஷம் வரைக்கும்!
கல்யாணம் ஆன புதுசுல நான் எப்ப சண்டை போட வந்தாலும் விட்டுக் கொடுத்து விட்டுக் கொடுத்து என்னை ஜெயிச்சிருக்க.என் மேல உனக்குக் கோபமே வராதாடா திருடா! உன் கூட ஒரு சண்டையாவது போடனும்னு மல்லுக்கட்டி நின்னப்பக் கூட பதிலுக்கு முத்தமாக் கொடுத்து என்னை காலி பண்ணிட்டியேடா ராஸ்கல்! என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் எங்க எங்கயோ ஃபாரின்ல செட்டில் ஆனாங்க. ஆனா சொர்க்கத்துல செட்டில் ஆனது நான் மட்டும் தான்னு நினைக்கிறேன்!
எல்லாப் பொண்ணுங்களைப் போல பையன் தான் பொறக்கனும்னு பிடிவாதமா இருந்தேன். எல்லாப் புருஷனுங்க மாதிரி பொன்னுதான் பொறக்கனும்னு நீயும் பிடிவாதமா இருந்த. நான் தோத்துப் போனாலும் உன்னை ஏமாத்தலைடா! பாப்பு வந்தப்புறம் நீ கொஞ்சம் மாறிதான் போயிட்ட. வேலை முடிஞ்சு வந்ததும் முன்னெல்லாம் என் புடவைல முகத்தை துடைச்சிப்ப , வேர்வை இல்லைன்னாலும்.. பாப்பு வந்தப்புறம் வேலை முடிஞ்சு வந்ததும் நேரா அவளைக் கொஞ்சப் போயிடுவ! என் பொண்ணா இருந்தாலும் அவ மேல ஒரு சின்ன பொறாமையே இருந்துச்சு. இதை நான் என் அம்மக்கிட்ட சொன்னப்போ "ரெண்டு குழந்தைகளை வச்சு உன் புருஷன் எப்படி சமாளிக்கிறார்?"னு விஷமத்தனமா கேட்டா. அப்பாவும் பொன்னும் சேந்து கொஞ்ச நஞ்ச லூட்டியாடா அடிச்சீங்க. நீ ஆஃபீஸை கட் அடிச்சுட்டு அவளை ஸ்கூலை கட் அடிக்க வச்சுட்டு ரெண்டு பேரும் சினிமா பார்க்கப் போனீங்களே..எங்கயாவது உலகத்துல இந்தக் கூத்து நடக்குமா?
சமையல் பண்ணும்போது எத்தனை தடவை பின்னாடி பூனை மாதிரி வந்து இடுப்பைக் கிள்ளி சாம்பாரைக் கொட்ட வச்சுருப்ப! எத்தனை தடவ சமையல்கட்டை வெக்கப்பட வச்சிருப்ப! ஆனா அதுக்கெல்லாம் பதிலுக்கு உன்னை எப்படி பழி வாங்கிருக்கேன் தெரியுமா? பட்டுப்புடவை சரசரக்க மல்லிகைப்பூவோட உன் முன்னால குறுக்கும் நெடுக்கும் போய் இன்னிக்கு "அது" வேணாம்னு சொல்றப்போ உன் மூஞ்சி ஒரு தினுசா போகும் பாரு...அடடா...அதுக்காகவே இன்னும் நூறு குழந்தை பெத்துக்கலாம் போல இருக்கும். நீயும் என்னை சும்மாவா விட்ட? அதுக்காக பாவி என்னை எத்தனை முறை கெஞ்ச விட்டுருப்ப.. ராட்சஸா!
ஆமா ஹனி மூன்ல எனக்கு ஒரு ஒரு கிஃப்ட் கொடுத்தியே... இதுவரைக்கும் எந்த புருஷனாவது தன் புது பொண்டாட்டிக்கு அப்படி ஒரு கிஃப்ட் கொடுத்திருப்பான்னு நினைக்கிற? அதை பிரிச்சுப் பார்த்ததும் என் முகத்துல வந்த நூறு கிலோ வெக்கம் என்னை விட்டு போறதுக்கு மூனு மாசம் ஆச்சுடா! நம்ம பாப்புவுக்கு விஷ்வா அந்த மாதிரி ஒரு கிஃப்ட் கொடுத்திருப்பானாடா. எனக்கு கிடைச்ச மாதிரி அவளுக்கும் அவன் சிபியா இருப்பானா ... தெரியல.. !
ஆரம்பத்துல நீ எங்கப்பாவை கிண்டல் பண்ணப்பயெல்லாம் எனக்கு அழுகையா வரும். கொஞ்ச நாள் கழிச்சு லேசா சிரிப்பு வந்தது..அப்புறமா பாப்பு கிட்ட அவ புருஷன் உன்னைக் கை காண்பிச்சு சிர்ச்சுக்கிட்டிருந்தப்போ நீ பார்த்துக்கிட்டுருந்த பார்வைல தான் எவ்வளோ பெருமிதம். எங்கப்பாவுக்கும் அன்னிக்கு அப்படிதானே இருந்திருக்கும். சே! அதுக்குப் போய் அழுதிருக்கேனே! யோசிச்சுப் பார்த்தா... கல்யாணம் ஆகி ஒரு நாலஞ்சு வருஷத்துல என்னை சேர்ந்தவங்க எல்லாரும் எனக்கு அன்னியமா தெரிய ஆரம்பிச்சாங்க. அந்தளவுக்கு நீ என்னை ஆக்கிரமிச்சிருந்த! நான் உனக்கு அப்படி என்னடா பண்ணினேன்? எதுக்காகடா என் மேல அவ்வளோ பாசத்தைக் கொட்டுன நீ? உலகத்துல இவ்வளவு சந்தோஷமா ஒரு மனைவி இருப்பாளாடா?
இத்தனையும் இப்ப எதுக்குன்னு கேக்கறியா?முதல்லயே சொன்னேனே "உள்ளுணர்வு". இதுவரைக்கும் என் உள்ளுணர்வு தவறினதே இல்லை. எனக்கு என்னமோ பயமாவே இருக்குடா. உனக்கு ஏதோ ஆயிட்டுருக்கு.எதையோ என் கிட்ட இருந்து மறைக்கிற. எதை என்கிட்ட இருந்து மறைக்க நினைச்சாலும் உன் கண்ணு காட்டிக் கொடுத்துடும். இன்னைக்குக் காலைல இருந்து உன் கண்ணு என் கிட்ட பொய் சொல்லத் திணறுது. உனக்கு ஏதாவது ஒன்னுன்னா அதுக்கப்புறம் இந்த உலகம் எப்படி சுத்தும்ங்கிறதை பார்க்கிற தைரியம் எனக்கில்லை. எப்பவும் கிழிச்சுப் போடுற லெட்டரை இந்த முறை கிழிச்சுப் போடணும்னு தோணலை.
இன்னும் என்னென்னவோ எழுத தோனுதுடா... நாம போன ஆல் இண்டியா டூர்..ஒரு தடவை நீ ரேடியோல ப்ரோகிராம் பண்ணது... நான் டைஃபாய்ட்ல கிடந்தது.. ஏதேதோ ஞாபகத்துக்கு வருது..அதெல்லாம் அப்படியே எழுதினா , அழுது லெட்டர் ஈரமாகிடும்.வேண்டாம்!
இப்போ என்னோட இந்த நினைவுகளை டேபிள் மேல வச்சிடறேன். ஒரு வேளை நாளைக்கு உனக்கு இதை படிக்கிற சந்தர்ப்பம் இருந்து என்னைக் கிண்டல் பண்ணாலும் பரவாயில்லை.
இப்போ உன்னைக் கட்டிப்புடிச்சுத் தூங்கணும் போல இருக்கு. உன்கிட்ட சொன்னா "போடி கெழவி..."ன்னு கிண்டல் பண்ணுவ. அதனால ஹனிமூன்ல நீ எனக்குக் குடுத்த கிஃப்டை கட்டிப் புடிச்சுத் தூங்க போறேன்.
இப்படிக்கு
உன் செல்ல பொண்டாட்டி
சைந்தவி
**************************************************************************************
இன்றைக்கு தான் எல்லா சடங்கும் முடிந்தது. வீட்டை சுத்தம் செய்யும் போது இந்தக் கடிதம் என் கைக்குக் கிடைத்தது.அங்கிள் கடிதம் எழுதும்போது இந்தக் கடிதம் டேபிள் மேல்தான் இருந்திருக்கவேண்டும்.இதை அங்கிள் வாசித்திருப்பாரா?...தெரியவில்லை.என்ன மாதிரி அடர்த்தியான காதல் இது. வாழ்க்கையில் எதையும் நாம மிஸ் பண்ணிடக் கூடாது பாப்பு.இவங்களை நெனைச்சா சந்தோஷமா இருக்கு. ஆனா இப்பொ மனசு முழுக்க வெறுமையா இருக்கிறது நிஜம்.அழுது வீங்கின கண்களுடன் பாப்பு என் நெஞ்சில் முகம் புதைத்து தூங்கிக் கிட்டிருக்கா. இவளை நான் எப்படி காதலிக்கப் போறேன்? யெஸ்... ஆன்ட்டி கட்டிப்புடிச்சுத் தூங்கின அந்த ஹனிமூன் கிஃப்ட். அது என்னவாயிருக்கும்? "
கனத்த இதயத்துடன் தன் டைரியை மூடிய படி, பாப்புவை தலையணையில் கிடத்திவிட்டு , அரை வெளிச்சத்தில் அந்த கிஃப்டை தேடத்துவங்கினான் விஷ்வா.
பின் குறிப்பு : இது வெளியூர்காரன் எழுதிய மீ டூ சைந்தவி யின் தொடர்ச்சி. அவனைக் கேட்காமலே அவனுடைய சைந்தவி பற்றி எழுதியதற்கு அவன் என்னை மன்னிக்க வேண்டும். தொடர் பதிவு , தொடர் சிறுகதை என்றெல்லாம் சொல்லி உங்களை துன்புறுத்த விரும்பவில்லை. நண்பனின் மேலும் அவனுடைய படைப்பின் மேலும் உள்ள உரிமையில் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனம் செய்திருக்கிறேன். இந்தக் கதையையும் யார் வேண்டுமானாலும் தொடரலாம் வெளியூர்காரனின் அனுமதியோடு
தோழி
Saturday, March 20, 2010
sainthavi kalakkaraanga ella idathulaiyum. super