RSS

பாலாவின் அடுத்த படம்


முன் குறிப்பு:இந்தப் பதிவு பாலா இயக்கப் போகும் அடுத்த படம் பற்றியதல்ல. எப்படி இருக்கலாம் என்ற ஆசையே!



ஒரு படம் பார்த்தால் இது இந்த டைரக்டரின் படம் என்று ஒரு சிலருக்கே சொல்ல முடியும். அதில் இந்த Decade ல் பாலா முதன்மையானவர். சென்ற 7 அல்லது 8 வருடங்களில் மூன்றே படம்.அதில் நிறைய மதிப்பு மிக்க அவார்டுகள் என்று தமிழ் சினிமாவின் மரியாதையான அடையாளம்.ரொம்ப நாள் கழித்து டைரக்டரின் பெயர் டைட்டில் கார்டில் வந்தவுடன் விசில் பறந்ததும் பாலாவுக்கே.

ஆனால் பத்தாண்டுகளில் நடந்தது என்ன?விக்ரம் எனும் ஹீரோ கண்டுகொள்ளப் பட்டார். முன்னணிக்கு வந்தார். சூர்யா கவனிக்கப்பட்டார்.மேலே வந்தார்.இப்போ ஆர்யா.தொடர்ந்து படங்கள் சரியானபடி தேர்வு செய்தால் அவருக்கும் ஸ்டார்டம் கிடைத்து விடும். தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஸ்டார் மேக்கர் பாலா தான்.

முதலில் சேது.பலமான திரைக்கதையை வைத்துக் கொண்டு ஒரு சாதாரண இளைஞனின் அசாதாரண வாழ்க்கையை சித்திரித்த படம். விக்ரமின் உழைப்பால் ஓஹோவென்று ஓடியது.வேறு யாராவது நடித்திருந்தாலும் சுமாராக ஓடியிருக்கும்.

அடுத்து நந்தா.இந்தப் படம் வந்த போது சூர்யா பெரிய ஹிட் எதுவும் கொடுத்திருக்கவில்லை.ராஜ்கிரனும் சரவணனும் வனவாசத்திலிருந்தார்கள்.படம் தொடங்கி 40 நிமிடங்களுக்குப் பிறகே ஹீரோவுக்கு முதல் டயலாக் கொடுத்தார் பாலா.நிஜமான விஷுவல் ட்ரீட்.

பிறகு பிதாமகன்.ஸ்டார் வேல்யூ அதிகமிருந்த படம்.விக்ரமின் கடும் உழைப்பாலும் சூர்யாவின் Versatalityயாலும்படம் பிய்த்துக் கொண்டு ஓடியதோடல்லாமல் தேசிய விருதும் வாங்கியது.கடைசியாக நான் கடவுள்.இந்தப் படத்தைப் பற்றி நீங்களே நிறைய சொந்த அபிப்பிராயம் வைத்திருப்பீர்கள்.

டிரென்ட் செட்டராக தனது இன்னிங்ஸை ஆரம்பித்தவர் இன்னும் டிரென்ட்களை உருவாக்குவாரா ? சந்தேகம் தான் ! பாலா படங்கள் கேள்விப்படாத பயோகிராஃபியாகவே இருக்கிறது. பெரும்பாலும் விளிம்பு மனிதர்களின் பயோகிராஃபி.மனநலம் சரியில்லாதவன்,சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வாழ்ந்தவன், வெட்டியான்,அகோரிகள் என்று நாம் கவனிக்க மறந்த மனிதர்களின் வாழ்க்கை.அதே போல பாலா படங்களின் இன்னொரு விசேஷம் படம் நெடுக இழையோடும் நகைச்சுவை, பின்பு அதிரடியான கிளைமாக்ஸ்.பிறகு Charecterization. இந்த கேரக்டர் எப்படி முழிப்பான், எப்படி பேசுவான் என்பதிலிருந்து அந்த நடிகரின் ஒவ்வொரு அசைவிலும் அந்த கேரக்டரை வெளிப்படச்செய்வது.மேற்படி விஷயங்களை அவர் படங்களை திறனாய்வு செய்து பட்டம் வாங்கப் போகிறவர்கள் கையில் விட்டு விடுவோம்.மற்றொன்று படங்களின் நீளம்.எல்லாமே அதிகபட்சம் 120 நிமிடங்கள் ஓடக்கூடியவை.

சரி! அடிக்கடி தேசியவிருது வாங்கும் டைரக்டர் என்ன செய்யலாம்? அவர் படங்களைப் போல சிலவற்றைத் தயாரிக்கலாம்.சில முக்கியமான படங்களுக்கு திரைக்கதை அமைத்துத் தரலாம்.அதைவிட முக்கியமானது , அவரைப் போன்று நேட்டிவிட்டி,எதார்த்தம் என்று எடுக்கப்படும் கொடுமைகளில் இருந்து தமிழ் மக்களை காப்பாற்றலாம். தமிழின் ஆகச் சிறந்த நாவல்கள் திரைப்படமாகாமலே உள்ளன. அதற்குத் திரை வடிவம் தரலாம். உ.தா. ஒரு புளியமரத்தின் கதை.

எங்களுடைய எதிர்பார்ப்பெல்லாம் ஒரே மாதிரியான Genre ல்  தேங்கி விடாமல் அடுத்தடுத்து வெவ்வேறு கேரக்டர்களில் உங்கள் படங்களைப் பார்க்க வேன்டும் என்பது தான். யோசித்துப் பாருங்கள் ! ரஜினிகாந்தை வைத்து முள்ளும் மலரும் போல ஒரு படத்தை பாலா எடுத்தால் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்?
தமிழ் சினிமாவிலிருந்து இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்கு படங்களை அனுப்பும் டைரக்டர்கள் கவனிக்கவும்.பாலாவிடமிருந்து கற்றுக்கொள்ள மூன்று முக்கியமான விஷயங்கள் இருக்கின்றது.

1. நம்மிடமே ஏராளமான கதைகள் உள்ளன. நாவல்கள் சிறுகதைகள் என்று கணக்கிலடங்காமல் இருக்கின்றன.
2. அபத்தமாக காப்பியடிக்காதீர்கள்.இன்ஸ்பிரேஷன் வேறு பிளாகியாரிஸம் வேறு.முப்பது ரூபாய்க்கு பைசைக்கிள் தீவ்ஸும் ரஷோமோனும் கிடைக்கிறது.
3. கிளைமாக்ஸ். பாலாவின் கிளைமாக்ஸ் காட்சிகளைப் பற்றி ஒரு தனி ஆய்வே நடத்தலாம்

பாலா அவர்களே!உங்களை அறியாமலே நீங்கள் ஸ்டார்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் டைரக்டர்களை உருவாக்க வேண்டுமென்பதே எங்கள் ஆசை.ஆஸ்கர் விருது வாங்கும் திறமைகள் நம்மிடம் இருந்தும் தமிழ் சினிமா ஆடியன்ஸான நாங்கள் யோகி பொக்கிஷம் போன்ற படங்களை தியேட்டரில் அதிக காசு கொடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் பாலாவிடமிருந்து வருஷத்துக்கு ஒரு படமாவது எதிர்பார்ப்பதில் தவறில்லயே. தவிர மீண்டும் மீண்டும் வாழ்க்கையில் ஓரங்கட்டப் பட்டவர்களின் கதையையே எடுத்துக் கொண்டிருந்தால் ஒரு வித சலிப்பு தட்டி விடாதா? உங்கள் அடுத்த படத்தில் முற்றிலும் வேறான கதாபாத்திரங்களோடு ஒரு விஷுவல் ட்ரீட் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் நீங்கள் Director's Director ஆகிவிட்டீர்கள்.
  1. ராஷா

    Sunday, January 24, 2010

    ரொம்ப முக்கியமான விசயத்தை விட்டுடீங்க..

    எல்லா டைரக்டரும் பாலா கிட்ட கத்துக்க வேண்டியது..

    கதாநாயகிய கவர்ச்சி பொருளா கான்பிக்காத, சிறு துளிகூட ஆபாசம் இல்லாத சினிமா எனக்கு தெரிஞ்ச ஒரே டைரக்டர் அது பாலா மட்டுமே.

    தேசிய விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.

  1. Rettaival's Blog

    Monday, January 25, 2010

    மிகவும் சரியே ராஷா! அக்ரஹாரத்து மாணவி, ஈழத்துப் பெண், கஞ்சா விற்பவள், பிச்சைக்காரி என்று பாலாவின் நாயகிகள் ஒவ்வொருவரும் ஃபாரின் லொகேஷன்களில் இடுப்பை ஆட்டாதவர்களே!

  1. Anonymous

    Monday, January 25, 2010

    இயக்குனர் இமயம் பாலா அவர்களே
    ==================================

    மனிதனுக்குள் இருந்த‌
    ர‌த்த‌ ச‌தையிலிருந்து
    வெட்டிய உங்கள் க‌தையில்
    சொட்டிய‌து ர‌த்த‌ம் அல்ல‌.
    கொட்டிய‌து ச‌த்த‌ம்.
    க‌ட‌வுளின் ச‌த்த‌ம்.
    ம‌னித‌னை முழுமையாக்க‌
    த‌ன்னை ஊனமாய்
    விஸ்வ‌ரூப‌ம் காட்டிய‌தை
    நீங்கள் காட்டினீர்க‌ள்.
    இத‌ற்கு
    அந்த‌ "பிறை சூடிய‌ பித்த‌ன்"
    த‌ன் ச‌டையிலிருந்த‌
    பிறையையே
    "விருது" ஆக‌
    கொடுத்துவிட்டான்.
    அத‌னால் உங்க‌ள் அடுத்த‌ ப‌ட‌ம்
    வ‌ரும் வ‌ரை
    நிலாக்க‌ளின் உலாக்க‌ள்
    இங்கு இல்லை.
    இருளில் நாங்கள் தவிப்பதா?
    உங்க‌ள் ப‌டைப்புக்காமிரா
    சூரிய‌னை நோக்கிப்பார்க்க‌ட்டும்.
    அந்த‌ "கிர‌க‌ண‌த்தில்"
    ம‌த‌ம் எனும் இருளை
    ம‌ன‌ வெளிச்ச‌ம் வ‌ந்து
    அழித்துத்துடைக்க‌ட்டும்.
    வாழ்க‌!உங்க‌ள் திரைக்க‌லை!


    இப்ப‌டிக்கு
    அன்புட‌ன் க‌விஞ‌ர் ருத்ரா
    < epsi...@gmail.com >

  1. Veliyoorkaran

    Monday, January 25, 2010

    பிளாகியாரிஸம் வேறு///
    என்னடா என்னென்னமோ வார்த்தையெல்லாம் சொல்ற...என்னடா ஆச்சு உனக்கு...ஆனா பாலா - ரஜினி காம்பினேசன்ல முள்ளும் மலரும் மாதிரி ஒரு படத்த நெனைச்சு பார்கரப்பவே அழகா இருக்குடா..ரஜினி மாதிரி ஒரு நல்ல நடிகன கம்மர்சியல் சினிமா தின்னுடுச்சு...அவர மறுபடியும் நடிக்க வெக்க பாலா போன்ற இயக்குனர்களால மட்டும்தான் முடியும்...அருமையான விசயத்துக்கு திரி கொளுத்தி போட்ருக்க..நல்ல சினிமா ரசிகர்களின் சார்பில் நன்றி....

  1. பின்னோக்கி

    Tuesday, January 26, 2010

    பெரிய டைரக்டராக, பெரிய நடிகராக நான் சிறு வயதிலிருந்து நினைத்தவர்கள் எல்லாம், சில ஆங்கிலப்படங்களிலிருந்து சீனை சுருட்டியவர்களாகவே இருக்கிறார்கள். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் பாலா. இதுவரை வெளிநாட்டு படங்களிலிருந்து சீனை சுடாதிருப்பதே மிகப் பெரிய சாதனை. வாழ்த்துக்கள் விருதுகளுக்காக.

    120 நிமிடங்கள் ? சரியா ?

  1. senthilkumar

    Wednesday, January 27, 2010

    balavin aduttha padam full comedy enpathu nam ethirparpukku theeni podum ena ninakkiren. namakku salippu thattuvathu therinthuvittatho..i expect visual comedy from bala.all the best for avan/ ivan.{annan & thambi}

Post a Comment