இது வரைக்கும் தமிழ் சினிமா பார்க்காதது..இது ரொம்ப புதுசு என்பார்களே..அது இந்தப் படத்துக்கு ஓரளவு பொருந்தும்.ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள், காதில் பூ வைக்கும் சமாச்சாரங்கள் என்று நிறைய இருந்தும் படம் 3 மணி நேரம் நம்மை கட்டிப் போட்டு விடுகிறது.
கி.பி 1279 ல் கடைசி சோழ மன்னன் தன் நாட்டை இழக்கும் போது தன் வாரிசைக் காப்பாற்றி தொலைவில் வியட்னாம் அருகில் உள்ள ஒரு தீவுக்கு அனுப்பிவிடுகிறான்.கூடவே முன்பு கைப்பற்றி இருந்த பாண்டியர்களின் குல தெய்வ சிலையையும். வாரிசுக்கு அரணாக நிறைய தடைகளையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.
ஏறத்தாழ 750 ஆண்டுகளுக்குப் பிறகு தொல் பொருள் ஆராய்ச்சியாளரான பிரதாப் போத்தன் அந்த இடத்தைத் தேடிப் போய் தொலைந்து விடுகிறார்.அவரைக் கண்டு பிடிக்க ரீமா சென் தலைமையில் ஒரு அழகம் பெருமாள் புடை சூழ ஒரு டீம். அதற்கு துணையாக ஆண்ட்ரியா.ஆண்ட்ரியாவுக்கு மட்டுமே ஓலைச்சுவடியைப் படித்து தெரிந்து தீவை அடைய வழி தெரிகிறது. இவர்களுக்கெல்லாம் கார்த்தி மற்றும் அவரது நண்பர்கள் கூலி வாங்கிகொண்டு கப்பலில் துணைக்கு வரும் ஹெல்பர்கள். மொத்தம் ஏழு தடங்கல்கள். தண்ணீரில் அலையும் விஷ ஜந்து,காட்டுவாசிகள், புதைகுழி,சர்ப்பம் பசி தாகம் ,கடைசியாக கிராமம் என்று அத்தனையும் அட்டகாசம். எல்லாவற்றையும் கடந்து போகும் கார்த்தி, ரீமா, ஆண்ட்ரியாவுக்குக் காத்திருக்கிறது அதிர்ச்சி!
அங்கே இன்னும் சோழர்கள் வாழ்கிறார்கள்.சோழ ராஜனாக பார்த்திபன்! கார்த்தி, ரீமா ஆண்ட்ரியா மூவரையும் கட்டிப் போட்டு சித்திரவதை செய்க்றார்கள். ரீமா சென் யார் என்பது தெரியும்பொழுது ஆரம்பிக்கிறது கதை. தான் கொண்டுவந்த செய்தி ஒன்று உள்ளது என்ற படி, ராஜாவிடம் கலவி செய்த பிறகே சொல்வேன் என்பதும்..அதன் பின் வரும் காட்சிகளும் அட்டகாசம். சோழ மக்கள் அங்கே உமக்காகக் காத்திருக்கிறார்கள், ராஜ்யத்தை ஏற்கவேண்டும் என்பதே அந்த செய்தி என்று ரீமா ஆசை காட்ட சோழ ராஜாவான பார்த்திபனும் மக்களுடன் நாடு திரும்ப ஒத்துக்கொள்கிறார். பார்க்திபனும் ரீமாவும் சண்டை போடும் காட்சியிலும் பின்பு படம் முடியும் வரை நாம் கேட்கும் தமிழும் இதற்கு முன் நிறைய சரித்திரக் கதைகளில் கூட கேட்காதது. ரீமா பாண்டிய பேரரசின் வாரிசு என்பதோடு நிறுத்தியிருக்கலாம். கமாண்டொ ஆஃபிசரான அழகம் பெருமாளும் இன்னும் ஏழு பேரும் பாண்டிய வாரிசுகள் என்பதும் கடைசியில் போரின் போதும் கூட ஆர்மி ஆட்களுடன் அவர்கள் பழைய பாண்டியர்கள் டிரெஸ்ஸில் இருப்பது உறுத்துகிறது.
சிறையில் அடைக்கப்பட்ட கார்த்தி கிளாடியேட்டர் பாணியில் ஒரு மைதானத்தில் நடக்கும் சண்டையில் சோழர்களிடையே ஹீரோவாகி சோழப் படையுடனே சேர்ந்து விடுகிறார். போர் வியூகம் வகுப்பதெல்லாம் கூட சார் தான். கடைசியில் போரில் என்ன ஆகிறது ? காணாமல் போன பிரதாப் போத்தன் என்ன ஆனார்..?சோழ மன்னன் நாடு திரும்பினானா...அவனது வாரிசை யார் காப்பாற்றுவது என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை வெள்ளித்திரையில்.
படத்தின் மிகப் பெரிய பலம் காமிரா , ரீமா சென் , பின்னணி இசை மற்றும் செல்வ ராகவன். இப்படி ஒரு கதையை யோசித்ததற்கே அவரைப் பாராட்டலாம். பார்த்திபன் அறிமுகமாகும் காட்சியிலும், புதைகுழி காட்சிகளிலும் செல்வராகவன் நிமிர்கிறார். ஆனால் நிறைய இடங்களில் பல இங்கிலீஷ் படங்கள் கண்முன் தோன்றி மறைகின்றன. 300, கிளாடியேட்டர் என்று ஏகப்பட்ட படங்கள். ஆனால் தமிழிலும் சரித்திரப் படங்கள் எடுக்க முடியும் என்று காட்டியிருக்கிறார்களே.அதுவும் பழைய படங்களில் வருவது போலல்லாமல், நிஜமாக.படத்தில் நிறைய ரத்தம்,வன்முறை.
ஆனால் படம் பார்க்கும் போது அது பொருட்டாகவே இல்லை. ரீமா, பார்த்திபன், கார்த்தி , ஜி.வி.பிரகாஷ், டைரக்டர் என்று ஆயிரத்தில் நிறைய பேர் படத்தைத் தூக்கி நிறுத்த கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறை தமிழ் படங்கள் பார்க்கும் போதும் பிளாகில் கண்டபடி ஓட்ட வேண்டும் என்றே தோன்றும். இந்தப் படத்தில் ஓட்டுவதற்கு நிறைய இருந்தும் அப்படிச் செய்யத் தோன்றவில்லை.
"துள்ளுவதோ இளமை" வந்த பிறகு அது மாதிரி 30 குப்பைகளாவது வந்திருக்கும். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் மாதிரி ஒரு 5 படம் வந்தால் சந்தோஷமாயிருக்கும்.
குட்டிபிசாசு
Friday, January 15, 2010
//"துள்ளுவதோ இளமை" வந்த பிறகு அது மாதிரி 30 குப்பைகளாவது வந்திருக்கும். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் மாதிரி ஒரு 5 படம் வந்தால் சந்தோஷமாயிருக்கும்.//
நல்ல கமெண்ட்...