RSS

மணி சார் ! நீங்க நல்லவரா? கெட்டவரா?


மணிரத்னம் படம் நன்றாக இல்லையென்று சொல்லிவிட்டால் நம்மை கிராமத்தான் என்று கேலி செய்வார்களோ என்று பயந்திருந்த காலம் ஒன்றுண்டு. ஆனால் இப்பொழுது அப்படியே உல்டா.
இந்தளவுக்கு சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்வார்கள் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும். ஆய்த எழுத்தில் தொடங்கிய வீழ்ச்சி கடலில் மூழ்கியே விட்டது. படம் பிடிக்கவில்லை என்பதை விட மணிரத்னம் போய் இப்படி படம் எடுத்திருக்கிறாரே என்ற ஆதங்கம் தான் எல்லோருடைய விமர்சனத்திலும் தெரிகிறது. இதே வீழ்ச்சி பாலச்சந்தருக்கும் பாரதிராஜாவுக்கும் நடந்தது. படைப்பாளுமைகளை நாம் நினைவில் வைத்திருப்பது அவர்களது மாஸ்டர் பீஸுகளுக்குத் தானே ஒழிய அவர்களது சராசரி படைப்புகளுக்காக அல்ல.

கடல் ஏன் உள்வாங்கியது?

மூன்று விஷயங்களை சொல்லலாம்.

1.காட்சிப்படுத்த ரொம்பவும் சிரமமான கதை.  God vs Satan முட்டல் மோதல்களை தத்துவார்த்த நாவலாக படிக்க நன்றாக இருக்குமே தவிர அதை காட்சிகளாக பார்க்கையில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. நாவலாகப் படித்தாலே இரண்டு மூன்று முறை வாசித்தாக வேண்டும், புரிவதற்கு.

2.கேரக்டரைசேஷன் - ராவணனிலும் இதே பிரச்சினை தான். விக்ரம் யார்? எதற்காக மக்கள் அவரை சப்போர்ட் பண்ணுகிறார்கள். பிரபு , பிரியாமணி, பிருத்வி இவரக்ளுக்குள் நடக்கும் பகைமைகளின் பின்னணி என்ன? யாருக்குமே தெரியவில்லை.நிறைய கேரக்டர்கள்.குழப்பக் கதம்பம்.கிட்டத்தட்ட கடலிலும் இதே பிரச்சினை தான்.  கேரக்டர்களின் பின்னணி உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதாது. படம் பார்க்கிற எங்களுக்கும் தெரிய வேண்டும் மணி சார்! அவ்வளவு நேரம் தெளிவாக ஊர்சுற்றும் துளசி, அவர் பைத்தியம் என்று சொன்னதும் லூசாக நடந்து கொள்கிறார். அதற்கு பிறகு நமக்குப் பைத்தியம் பிடிக்கிறது.இதைப் போல் நிறைய காட்சிகள் உள்ளது.

3. பொதுவாக மணிரத்னம் படங்களில் முதல் பாதி ஜெட் வேகத்தில் செல்லும். ரோஜா , பம்பாய் எல்லாம் ஆரம்பிப்பதும் தெரியாது, இடைவேளையில் பாப்கார்ன் சாப்பிடுவதும் தெரியாது. அவ்வளவு க்ரிப்பாக இருக்கும். இந்தப் படத்தில் எப்படா இடைவேளை விடுவார்கள் என்று நகர்த்துவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது. இடைவேளைக்குப்  பிறகு படம் எப்படா முடியும் என்று இருந்தது வேறு விஷயம்.

அப்புறம் Love Sequence.  காதல் காட்சிகளைப் படமெடுப்பதிலும், பாடல் காட்சிகளைப் படமெடுப்பதிலும் இந்தியாவுக்கே கிளாஸ் எடுத்தவர் நீங்கள். இத்தனை அற்புதமான பாடல்களை கொத்துப் பரொட்டா போட்டிருப்பது வேதனையாக இருக்கிறது. அதிலும் வான், மண் நீர் (Choir Song) என்று உணர்ச்சி பொங்க அரவிந்தசாமி கத்திக்கொண்டே வருவது இத்தனை டிராஜடியிலும் ஒரு காமெடி.

எழுதிய ஒரு படைப்பை திரைமொழியில் தந்ததால் தான் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் என மறக்க முடியாத சினிமாக்கள் தமிழில் வந்தன. ஆங்கிலத்தில் அதற்கு மில்லியன் உதாரணங்கள் உண்டு. சமீபத்திய உதாரணம். யான் மார்டெலின் “Life Of Pi" .  ஆகவே மிகவும் ஆவரேஜ் இலக்கிய மற்றும் சினிமா ரசிகர்களாகிய  நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம் ,இன்னும் எத்தனையோ தமிழ் நாவல்கள் படமாக்கப் படாமல் லைப்ரரிகளில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. ட்ரெண்ட் செட்டரான நீங்கள் அதைத் தூசி தட்டி திரைப்படமாகக் கொண்டு வரத் துவங்கினால் நூறு பேர் அதைப் பின் தொடர்வார்கள். இது கொஞ்சம் அதீதம் தான் என்றாலும் நப்பாசைக்கு எல்லைகள் எதற்கு?

இசை நன்றாக இருந்தாலும் பின்னணி இசைக்கும் காட்சிகளுக்கும் சம்பந்தமே இல்லை.யதார்த்தம் என்ற பேரில் கொல்லாமல் அழகாக படம் பிடித்திருக்கிறார் ராஜீவ் மேனன்.எடிட்டரை நினைத்தால் தான் பரிதாபமாக உள்ளது. எப்படி வெட்டி ஒட்டினாலும் இந்த திரைக்கதையை பஞ்சர் பார்த்திருக்கவே முடியாது. அப்படி ஒரு அடாசான திரைக்கதை இது.

தியேட்டரில் முன்னே அமர்ந்திருந்த கல்லூரி இளசுகள் கத்திக் கொண்டே இருந்தன. முன் வரிசையில் இரண்டு பேர் மொபைலையே நோண்டிக்கொண்டிருந்தார்கள். பக்கவாட்டில் ஒரு சிறுவன் சீட்டைப் பிறாண்டிக் கொண்டிருந்தான்.  I like only manirathnam films ya என்கிற வாசகங்கள் இந்த நூற்றாண்டில் நகைச்சுவையாகப் பார்க்கப் படுவது அவருடைய கிளிஷேக்கள் காலாவதி ஆகிக்கொண்டிருப்பதை தான் காட்டுகின்றன. கேங்க்ஸ்டர் படமோ, ரொமாண்டிக் படமோ அல்லது பரீட்சார்த்த முயற்சிகளோ   எங்கள் எதிர்பார்ப்பெல்லாம் தெளிவான ஒரு கதையும் இண்டரஸ்டிங்கான ஒரு திரைக்கதையும் தான்.

ஸ்தோத்திரம்!
  1. Sabesan

    Monday, February 04, 2013

    aravindsamy thirumba kidaithirukirar avlodhan

  1. Rettaival's Blog

    Wednesday, February 06, 2013

    உயர்திரு பட்டாபட்டி...

    ஒரு ஹைனிகென்னுடன் இந்தப் படத்தைப் பார்க்கவும். கடவுள் சாத்தான் எல்லாம் நம்மோடே இருப்பார்கள்!

  1. siva

    Wednesday, February 06, 2013

    hello munaivar pattapatti, where you are?

  1. Anonymous

    Thursday, February 14, 2013

    Aitha eluththu what Film that u fucinking Indian don't have taste ,u r worth for baba only

  1. Rettaival's Blog

    Thursday, February 14, 2013

    அனானி பிரதர் !

    கடலை விட பாபாவே பெட்டர்.

Post a Comment