RSS

வனசாட்சி - தேசமற்றவர்களின் பிரதி



வரலாறு எப்பொழுதும் வென்றவர்களையே வீர்யமாகப் பதிவு செய்திருக்கிறது. சாமான்யர்களை, அதிலும் அலைக்கழிக்கப்பட்டவர்களை பாராமுக‌மாகக்கூட அல்ல, பதிவு செய்யாமலே விடுவது தான் சரித்திரத்தின் வழக்கம். எத்தனையோ உதாரணங்கள் உண்டு.  குறுகிய காலத்தில் நடந்ததாலோ என்னவோ இந்திய-பாகிஸ்தான் பிரிவினையே நம் வரலாற்றுப் பக்கங்களை ஆக்கிரமித்துள்ளது. ஆனால் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கிருந்து இலங்கைக்கு சென்று காட்டை வளப்படுத்தி , தேயிலைத் தோட்டங்களாக்கி உலகின் அரைவாசிப் பேருக்கு தேநீர் தந்து , நாட்டை வள‌மாக்கி  அதன் இம்மியளவு பிரயோசனங்களைக் கூட அனுபவிக்காமல் அங்கிருந்து துரத்தப்பட்டு எந்த தேசத்திலும் ஒன்ற முடியாமல் வாழ்ந்த மலையகத் தமிழர்களைப் பற்றி சிறு குறிப்பேனும் நம் பாடப்புத்தகங்களில் கிடையாது என்பதே நிதர்சனம்.

அந்தக் குறையை சிறிதளவேனும் போக்கியிருக்கிறது தமிழ்மகனின் வனசாட்சி எனும் சமீபத்திய புதினம்.  தோட்டத்தொழிலாளர்கள் என்று நினைக்கும் போதே, ரொம்பவும் இதமான தட்பவெட்பம், இலகுவான வேலை (இலையைக் கிள்ளி சுமந்திருக்கும் கூடையில் போடுவது தானே ) என்றே ஞாபகச்சில்லுகளில் உறைந்துபோன ஒரு காட்சிப் படிமம் தான் வருவது வழக்கம். அந்த நம்பிக்கை முதல் மூன்று பக்கங்களிலேயே சிதறி விடுகிறது.  

கலவரமும் நடுக்கமும் பயமும் சரிவிகிதத்துடன் கலந்த அந்த இடம்பெயர்தலில் தொடங்குகிறது கதை.  மண்டபத்திலிருந்து தோணி ஏறி கட்டுவிரியன்களுடனும் கரடிகளுடனும் பாம்புகளுடனும் போராடி காட்டுப் பாதையில் நடந்தே மாத்தளை , கண்டி எனப் பிரயாணித்து தேயிலைத் தோட்டம் வந்து சேர்கின்றனர் முதல் தலைமுறை இந்தியத் தமிழர்கள். ஊரில் பஞ்சம், கடன் என நொந்து போய் இலங்கையில் நாலு காசு பார்த்து ஜமீந்தாராக திரும்பலாம் என கனவுக‌ளோடு தோட்டத்தில் கால் வைப்பவர்களுக்கு நிஜம், தோட்டத்துக் குளிரைப் போலவே  எலும்பை ஊடுருவித் தாக்குகிறது. கங்காணிகள், தோட்டத் துரைமார்கள் (பிரிட்டிஷார்) என அங்கும் விதி விளையாடுகிறது. சாண் ஏறினால் முழம் சறுக்கும் வாழ்க்கை. ஏன் என்று கேட்க நாதியற்றுப் போய் எதையும் எதிர்க்கும் திறனே அற்றுப் போகிறார்கள்.  உலகன், அருக்காணி, ரத்தினம் எனப் பலபேரின் வாழ்க்கை விவரிப்புகள் என்றாலும் , அவர்கள் படும் துன்பம் ஒன்றே. அடிமை என்பதன் அர்த்தத்தை பரிபூர்ணமாக அனுபவிக்கும் தமிழர்கள்.  எவ்வளவு உழைத்தாலும் வாழ்க்கையில் மேலே எழும்பி வந்துவிட முடியாத சாபம் கொண்ட தமிழர்கள். 

எப்பொழுதும் சுரண்டலின் அச்சாணியாக இருப்பது தரகர்கள்தாம். இதிலும் கங்காணி எனப் பெயர் கொண்ட தரகர்களே இவர்களின் வாழ்க்கையைத் தீர்மானித்தவர்கள். பலவீனங்களைப் பயன்படுத்த அறிந்திருந்த தரகர்கள். கொத்துக் கொத்தாக தமிழ்நாட்டிலிருந்து ஆட்களை ஆசை காட்டி தேயிலைத் தோட்டத்துக்கு அழைத்துவந்தவர்கள். எந்த ஒரு அடிமை வரலாறும் இவர்கள் இல்லாமல் நிறைவு பெறாது. ஆழ்ந்து யோசித்தால் நாவலில் அவ்வப்போது வரும் இந்தக் கங்காணிகளே கதையில் திருப்பங்களை ஏற்படுத்துகிறார்கள். பயத்தை அறுவடை செய்யும் வியாபாரிகளாக உலா வரும் இந்த தரகர்களே ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறார்கள் (முதல்வர் சுவாமிநாதன் என்பவரைக் கூட கங்காணியாகவே காண முடிகிறது).

புதினம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது 

முன்பனிக்காலம் - பஞ்சத்துக்காக இங்கிருந்து இலங்கைக்கு செல்லும் தலைமுறையினரின் கதை.

பின்பனிக்காலம் - சிரிமாவோ - சாஸ்திரி ஒப்பந்த்தத்தால் அங்கிருந்து விரட்டப் பட்டு இந்தியாவில் மீண்டும் தஞ்சம் புகும் காலம்.

இலையுதிர்காலம் - ராஜிவ் படுகொலை தொடங்கி முள்ளிவாய்க்கால் மரணம் தொட்டு தற்போது வரை.

வன சாட்சி , காசிபிள்ளை, மல்லிகா, சிவசங்கரன் பொன்னப்பன் எனப் பலரின் கதையாக விரிந்து கடவுசீட்டு கிடைக்கப்பெறாமல் குடும்பத்தை இந்தியாவுக்குத் தாரை வார்த்து அங்கேயே தங்கி போராளியாக மாறிப் போகும் லட்சுமியைத் தேடிப்போகும் முருகன் எனும் இந்தியத் தமிழ்பேராசிரியனின் கதையாக மையம் கொள்கிறது.  
தன் அத்தை லட்சுமி என்னவானாள் என்பதை முருகன் கண்டுபிடிப்பதும் கடைசியில் ஏற்படும் திருப்பமும் சற்றே நாடகத்தனம் என்றாலும் , அது என்னவென்பதை புத்தகம் படித்துத் தெரிந்து கொள்க. சுவாரஸ்யமாக இருப்பதால் அது கதையின் நம்பகத்தன்மையை பாதிக்கவில்லை. அந்த டிரமாட்டிக் த்ரில்லும் இல்லையென்றால் இது வெறும் துன்பியல் பிரதியாகியிருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

கிளைக்கதைகள் பல உண்டென்றாலும் எதிலும் யாருக்கும் நல்லதே நடப்பதில்லை. கதையின் இன்னொரு முக்கியமான பலம், ஊடகங்கள் கட்டிவைத்திருக்கும் ஈழத்தமிழர்  அனைவரும் ஒன்றே என்பதைப் போன்ற  ஒரு மாய பிம்பத்தை அசைத்துப் பார்த்திருப்பது. 

பொன்னப்ப தாத்தா சொல்வது போல‌ 

"மூனு தினுசு தமிழன் இருக்கான். ஒன்னு யுகம் யுகமா இலங்கைலயே இருக்கறவன். பெரிய்ய பெரீய வக்கீலு கவுருமெண்டு அதிகாரி எல்லாம். இன்னொன்னு வியாபாரி..பேங்கு, வட்டிக்கடை நடத்துறவன்.ஒரு ரூவா போட்டு பத்து ரூவா எடுக்கறவன். மத்தது நம்மளை மாதிரி ரப்பர் தோட்டம் டீ தோட்டம்னு அட்டைக்கடில சாகிறவனுங்க. வக்கீலு வியாபாரி மேல கை வைக்க முடியுமா. அதான் நம்ம மேல பாயறானுக."

ராஜீவை படுகொலை செய்தால் இந்திய உதவிகள் நின்று போகாதா என ஒரு போராளியின் நியாயமான சந்தேகத்தை ஒரு கதாபாத்திரம் கேட்கிறது. இன்னும் காந்தி நேரு ஃபோட்டோவையே வீட்ல மாட்டிருந்தா நம்மளை எப்படி நம்புவான் என்கிறது மற்றொரு கதாபாத்திரம். 

முதலாளி- கங்காணி- தொழிலாளி வேறுபாடுகள் எப்படி சிங்கள - தமிழ் வேறுபாடுகளாக மாறியது என்பதையும் யோசிக்க வைக்கிறது வனசாட்சி. மேதாவித்தனங்களற்ற , தன்னுரைகள் அதிகமல்லாத, உரையாடல்கள் வழியாகவே கதையை சாமர்த்தியமாகக் கொண்டு போவது படைப்பாளியின் வெற்றி. தான் எந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று எல்லோரும் ஏதோ ஒரிடத்தில் குழம்பித் தவிக்கிறார்கள். தனது வேர் எதுவென்றே தெரியாமல் கலங்கி நிற்கும் ஜனங்களின் வார்த்தைகளை வலியை அங்கங்கே புகுத்தியிருப்பது கச்சிதம்.வெட்டுப்புலி  நாவலைப் போல இதிலும் அரசியல் முடிவுகள் , சம்பவங்கள் ஒவ்வொருத்தர் வாழ்விலும் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் தமிழ் மகன். 
ஆனால் இதே கதை சொல்லல் முறையை அடுத்த புதினத்திலும் கையாண்டால் சலித்துவிடும்.

கதையில் பெரிய சாமி என்பவனுக்கு இந்த சந்தேகம் வரும்.
 
"சேனநாயகா பண்டாரநாயகா மீது கூட  கோபம் இல்லை, அவர்கள் தங்கள் ஜனங்களுக்காக பாடுபட்டது போல் நம் தலைவர்கள் ஏன் பாடுபடவில்லை என்பது தான் புரியவே இல்லை..."

நமக்கும் தான்.

*********************************************************************************
உயிர்மை வெளியீடு


Post a Comment