என்னை டெலிவிஷனாக மாற்றி விடு!
சமீபத்தில் ஜிமெயிலில் உலாத்திக் கொண்டிருக்கும் இதை உங்களில் பலர் இதைப் படித்திருக்கக்கூடும். நிச்சயம் உளவியல் ஆரோக்கியத்தை சிக்கலாக்கும் வாழ்க்கை முறையை கேள்விக்குள்ளாக்காத பட்சத்தில் ஏதோ ஒட்டு மொத்த சமூகமே தன் நிறத்தை இழப்பது போல் தோன்றுகிறது.
கதை இது தான்!
அது ஒரு ஆரம்ப பாட சாலை. ஆசிரியை "கடவுள் உங்கள் முன் தோன்றி வரம் வேண்டுமென்றால் என்ன கேட்பீர்கள் " எனும் தலைப்பில் கட்டுரை எழுதி வருமாறு கூறுகிறாள். வீட்டில் மறு நாள் மாணவர்கள் கொண்டு வந்த எல்லாக்கட்டுரைகளையும் திருத்தும்போது ஒரு கட்டுரையை மட்டும் படித்து அழ ஆரம்பிக்கிறாள். அப்பொழுது வீட்டுக்குள் நுழையும் கணவன் என்ன விஷயம் , ஏன் உன் கண்ணெல்லாம் கலங்கியிருக்கிறது எனக் கேட்கிறான். அதற்கு ஒரு மாணவன் எழுதிய கட்டுரையை வாசிக்கத் தருகிறாள் அந்த ஆசிரியை.
"என்னை டெலிவிஷனாக மாற்றி விடு" எனு தலைப்பில் உள்ள கட்டுரை இவ்வாறு செல்கிறது.
"கடவுளே தயவு செய்து என்னை டெலிவிஷனாக மாற்றி விடு.எங்கள் குடும்பத்தில் டெலிவிஷனுக்குக் காட்டும் ப்ரியம் எனக்குக் கிடைக்க வேண்டும். எப்பொழுதும் என் குடும்பத்தின் சந்தோஷம் என்னை சுற்றியே இருக்க வேண்டும். நான் பேசும்போது அலட்சியப் படுத்தாமல் என் பேச்சைக் கேட்க வேண்டும். எந்தத் தடங்கலும் குறுக்கீடும் இல்லாமல் நானே டெலிவிஷனைப் போன்று குடும்பத்தின் சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாக இருக்க வேண்டும்.
எவ்வளவு டயர்டாக லேட்டாக என் அப்பா வந்தாலும் அவருடைய கண்கள் முதல் ஆளாக என்னைத் தேட வேண்டும். என் அம்மா ஓய்வு நேரங்களின் போதும் டென்ஷனாக இருக்கும்போதும் நான் எங்கே என்று தேட வேண்டும். என் அண்ணனும் தம்பியும் என் கூடவே இருக்கப் பிரியப்பட வேண்டும். என்னோடு நேரம் செலவழிப்பதற்காக என் குடும்பம் மற்ற எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். நான் எவ்வளவு முட்டாள்தனமாக பேசினாலும் புத்திசாலித்தனமாகப் பேசினாலும் என்னை அவர்கள் ரசிக்க வேண்டும்.
உன்னிடம் நான் அதிகமாக எதுவும் கேட்கப் போவதில்லை. எங்கள் வீட்டு டி.வி. போல் வாழவேண்டும்.அதனால் என்னை எங்கள் வீட்டு டெலிவிஷனாக மாற்றி விடு கடவுளே!"
இதைப் படைத்த ஆசிரியையின் கணவன் "சே! என்ன குடும்பம் அது. பாவம் அந்த பையன்."என்றான். இதைக் கேட்டதும் ஆசிரியையின் அழுகை அதிகமானது.
"ஏன் மேற்கொண்டு அழுகிறாய்? நாளைக்கு அந்தப் பெற்றோர்களைக் கூப்பிட்டு அட்வைஸ் பண்ணி அனுப்பு!" என்றான் கணவன்.
ஆசிரியை கண்களைத் துடைத்துக் கொண்டே "இதை எழுதுனது நம்ம பையன் தான்" என்றாள்.
இந்தக் கதை சொல்லும் சேதி நிறைய.ஆனால் முக்கியமானது , நாம் உரையாடல் என்கிற பதத்தின் அர்த்தத்தை, அது தருகிற சந்தோஷத்தை மறந்து வருகிறோம். இன்று ஒவ்வொரு பெட்ரூமிலும் ஒரு டி.வி என்பது கூட சகஜமாகிவிட்டது. நிச்சயமாக டி.வியால் நன்மைகள் இல்லாமல் இல்லை.ஆனால் அது எவ்வாறு நம் நேரத்தை முழுங்குகிறது என்பதை அறியக் கூட மனமில்லாமல் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.
தொழில்நுட்ப யுகத்தில் நிராயுத பாணிகளான நம்மை தகவல்கள் எனும் ஆயுதத்தால் ஊடகங்கள் நம்மை தாக்கிக்கொண்டே இருக்கும்.நாம் அதை தவிர்க்க இயலாது.ஓய்வு நேரம் என நமக்குக் கிடைக்கும் சொற்ப நேரத்தை எவ்வாறு கழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு விடை காண்பது மிகவும் முக்கியம். ஜனங்களின் ரசனைக்கேற்ப ஒவ்வொரு விதமான சானல்கள் என மீடியா எனும் பல்லி டைனோசராக மாறி வெகு நாட்களாகிறது. பெருநகரங்களில் தொடங்கும் எந்த கலாசார சீர்கேடும் சிறுநகரங்களுக்கும் கிராமங்களுக்கும் அசுர வேகத்தில் பரவுவது இன்றைய தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியமான சாபக்கேடு.அதைவிட அபாயமானது புத்தக வாசிப்பு என்கிற பழக்கத்தை மெல்ல மறக்கடிப்பது தான்.
மொட்டை மாடியில் அமர்ந்து ஒன்றாக சாப்பிடுவதோ , கடற்கரையில் அமர்ந்து குடும்பக் கதைகள் பேசுவதோ இன்று ரொம்பவும் அபூர்வம். அதிலும் குழந்தைகளுக்குக் கதை சொல்லுவதென்பதோ, தாலாட்டுப் பாடுவதோ இப்பொழுதெல்லாம் காணக்கிடைக்காத அதிசயங்கள். நாமும் நுகர்பொருளாக மாறிய பின், நம் அடுத்த தலைமுறையை சந்தைக்கு ஏற்ப சிறந்த பிராண்டுகளாக மாற்ற பெரும் சிரத்தை எடுத்துக் கொள்கிறோம்.அதிலும் "Emotional Crowd" என தமிழர்களை அந்நியர்கள் பிரயோகிக்கும் பதத்தை மெய்ப்பிக்கும் விதமாக குடும்பத்துள் ரியலாக சந்தோஷப் படுவதையும் சின்ன சின்ன சண்டைகள் போடுவதையும் விட்டு விட்டு அதே வாழ்க்கையை டி.வி யுடன் வாழப் பழகி விட்டோம்.
இங்கு பிரச்சினை டி.வி.யில் என்ன காண்பிக்கப்படுகிறது என்பதல்ல.எல்லோருக்கும் பிடித்தமான ஆயிரம் நிகழ்ச்சிகள் பஃபே விருந்தைப் போல அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.ஆனால் விருந்து உங்களை எவ்வளவு நேரம் சாப்பிடுகிறது என்பது தான் உண்மையான பிரச்சினை.
சரி! உங்களுக்கு குடும்பத்துடன் கடைசியாக ஒன்றாக அமர்ந்து எந்த வித குறுக்கீடுகளும் இல்லாமல் வெறும் குடும்பக் கதைகள் பேசி டின்னர் சாப்பிட்டது எப்போது என்று நினைவிருக்கிறதா?
************************************************************************************
சுந்தரா
Thursday, September 02, 2010
யோசிக்கவைத்த பதிவு.
பகிர்வுக்கு நன்றி.