RSS

அழகிய சினிமா – MIDNIGHT IN PARIS (2011)



உங்களுக்கு சென்னையில் கடற்கரை சாலை பிடிக்குமா? அதுவும் லேசான மழையில் நனைந்துகொண்டே நடக்கப் பிடிக்குமெனில் இந்தத் திரைப்படம் உங்களை தன்னுள்ளே இழுத்துக் கொண்டு விடும். அப்படிப்பட்ட ரசனை மிக்க ஒரு திரைக்கதையாளனின் காலப் பயணம் தான் மிட்நைட் இன் பாரீஸ்.சில கதைகள் தானே திரைக்கதையை எழுதிக்கொண்டு விடும். வூடி ஆலன் எழுதி இயக்கியிருக்கும் "Midnight in paris" அத்தகைய ஒரு இலக்கியம் சார்ந்த ஃபேண்டஸி சித்திரம்.

கில் பெண்டெர் ஒரு ஹாலிவுட் எழுத்தாளன். தனது கனவு நாவலை முடிக்க முடியாமல் திணறும் தருவாயில் தனது Fiancee உடனும் அவளது பெற்றோருடனும் பாரீஸ் செல்ல நேர்கிறது. பார்த்த மாத்திரத்தில் பாரீஸ் அவனை ஈர்த்துவிடுகிறது. நகரத்தை அதன் போக்கில் சென்று ரசிக்க விரும்பும் கலா ரசனாவாதி. ஆனால் இவனது காதலியின் குடும்பம் சற்றே போலித்தனத்துடனும் பணக்காரத்தனத்துடனும் வாழும் ஆடம்பரவாதிகள். இரவு அவர்கள் கலந்துகொள்ளும் விருந்தில் கலந்து கொள்ள முடியாமல் அந்நியப்பட்டு தனியே காலாற நடக்கிறான். சரியாகப் பன்னிரண்டு மணி அடிக்கும்போது ஒரு கார் இவனருகில் வந்து நிற்கிறது.


அது ஒரு பழைய கார். 1920களின் பாணியில் உடையணிந்த மனிதர்கள். கில்லை காரில் ஏறுமாறு வற்புறுத்தி அழைத்துப் போகிறார்கள் 1920களுக்கு.

அங்கே ஆச்சர்யம் கொட்டிக் கிடக்கிறது. அது பாரீஸின் பப்களிலும் பார்களிலும் கவிதை இலக்கியம் என கரை புரண்டு ஓடிய காலம். கில் பெண்டெரின் ஆதர்ச எழுத்தாளர்களும் ஓவியர்களும் வாழ்ந்த காலம். திகைத்திருக்கும் கில்லிடம் ஹெமிங்வேயை அறிமுகம் செய்து வைக்கின்றனர். நம்பமுடியாமல் திணறுகிறான். நீ என்ன எழுதுகிறாய் என ஹெமிங்வே கேட்கிறார். நாஸ்டால்ஜியா ஷாப் வைத்திருக்கும் ஒருவனைப் பற்றிய கதை என்று கில் சொல்லி முடிக்கும் முன்னரே உனக்கு கிர்ட்ரூட் ஸ்டெய்னை (எழுத்தாளினி,விமர்சகர்) அறிமுகபப்டுத்தி வைப்பதாக கூறுகிறார்.ஆச்சர்யத்தின் உச்சியில் இருக்கும் கில் ஹோட்டலுக்குப் போய் நாவலின் பிரதியை எடுத்து வரப் போகிறான். வெளியே வந்து பார்த்தால் மீண்டும் 2010.

மறுநாளும் அதே வகையான அனுபவங்கள். இந்த முறை சந்திப்பது பாப்லோ பிகாஸோவை. பிகாஸோவின் காதலி ஆடிரியானாவுக்கு கில்லை பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போக காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதே சமயம் பகலில் நிகழ்காலத்தில் விரும்பும் காதலியுடன் மனது ஒத்துப் போக மறுக்கிறது. அவளுக்கும் இவன் பேரில் சந்தேகம் வர கில்லை ஒரு மாதிரியாக நினைத்து ஒதுங்க ஆரம்பிக்கிறாள். பகலிலும் தனியாளாக பாரீஸை சுற்ற ஆரம்பிக்கிறான்.

ஒரு பழைய புத்தகக் கடையில் புஸ்தகங்களை மேய்கையில் 1920ல் சந்தித்த ஆட்ரியானாவின் டைரி கிடைக்கிறது. அவள் ஒரு அமெரிக்க எழுத்தாளரை சந்தித்ததாகவும் அவனை காதலித்ததாகவும் எழுதியிருக்கிறாள்.பரவசமாகி விடுகிறான் கில். இரவு அவளை சந்தித்தே ஆகவேண்டுமென்று இரவு மீண்டும் தன் பொற்காலத்துக்கு செல்கிறான்.

கில்லும் ஆட்ரியானாவும் முத்தத்தைப் பரிமாறியபடி பாரீஸ் வீதிகளில் நடக்கும்போது ஒரு குதிரை வண்டி வருகிறது. அவர்கள் இருவரையும் ஏற்றியபடி குதிரை வண்டி செல்வது 1890களுக்கு, கில்லுக்கு தலை சுற்றுகிறது. ஆட்ரியானா, பௌல் காகின் எட்கர் டேகா போன்றவர்கள் வாழும் இது தான் தன் பொற்காலம் எனவும், இங்கேயே தங்கி விடலாம் என வற்புறுத்துகிறாள். ஆனால் 1890களில் வாழும் இலக்கியவாதிகள் ரினைஸான்ஸ் காலமே உண்மையான பொற்காலம் என கருதுகின்றனர். கில் பெண்டருக்கு உண்மை புரிகிறது.

தான் வாழும் காலத்தை விட தன்னுடைய நினைவில் பதிந்திருக்கும் ஆதர்சமான காலம் தான் அனைவருக்கும் ப்ரியம் தருகிறது என்று உணருகிறான். மீண்டும் 2010 க்கே வந்து விடுகிறான்.

இப்பொழுதும் இந்த நள்ளிரவிலும் பாரீஸில் லேசான மழை பெய்கிறது.கில் பென்டெர் நனைந்தபடியே நகரத்தின் அழகை வியந்தபடியே நடக்க ஆரம்பிக்கிறான்.அப்பொழுது அந்தப் பெண் அவனோடு சேர்ந்து கொள்கிறாள். அவள் யார் என்பதை திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

கில் பெண்டராக ஓவன் வில்சன்.வூடி ஆலனை அப்படியே மறுபிரதியாக பார்ப்பது போல் உள்ளது.கண்களில் ஆச்சர்யமும் ஆர்வமும் கொப்புளிக்கும் அற்புதமான நடிப்பு. கிறங்கடிக்கும் பின்னணி இசை, ஒளிப்பதிவு என பாரீஸின் தரமான பக்கத்தை காட்டும் திரைப்படம். இவ்வளவு இலக்கிய வாடை அடிக்கும் படத்தில் இலக்கிய விசாரங்களுக்குக் கேட்கவா வேண்டும். வசனத்தில் பின்னி எடுத்திருக்கிறார் வூடி ஆலன். மிகையில்லாத ஃபேண்டஸி காட்சிகள் , அதே நேரத்தில் வெறும் காரில் ஏறுவதிலேயே காலத்துக்குள் பிரயாணம் செய்யவைக்கும் வித்தை என அசத்தியிருக்கிறார்கள். அந்தந்த காலகட்டத்தில் வந்த இலக்கியவாதிகளின் கோபம்,விமர்சனம் அழகியல் குறித்த பார்வை பல்வேறு நுணுக்கங்களை அள்ளி தெளித்திருக்கிறார்கள்.

ஒரு எழுத்தாளனின் காதல்,ரசனை, பரவசம், ஆதர்சம் என எல்லாவிதத்திலும் – Midnight in Paris - மயங்கவைக்கும் ஒரு இலக்கிய சினிமா!
  1. Kumaran

    Sunday, January 22, 2012

    சில படங்களை பார்த்துவிட்டு வூடி ரசிகனாகவே ஆன அனுபவம் எனக்கு உண்டு.இந்த வருடம் வெளியான படத்தை சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.நன்றி.

  1. சுபத்ரா

    Sunday, January 22, 2012

    Ur review is very interesting. Thank u..

  1. ILLUMINATI

    Sunday, January 22, 2012

    வூடி ஆலன் ரசனையாளன். To escape into a respite என்னும் ஒரு விசயத்தைக் கொண்டு அருமையான படத்தைக் கொடுத்திருக்கிறார் போல.

  1. Organic Farmer

    Monday, January 23, 2012

    Excellent Review Sir. I will try to see this movie.

  1. திண்டுக்கல் தனபாலன்

    Monday, January 23, 2012

    நல்ல விமர்சனம் ! அருமை ! நன்றி நண்பரே !

  1. ...αηαη∂....

    Monday, February 20, 2012

    Woody Allen லாம் என்ன மனுஷன் சார்.. வயசே ஆகாது போல :)

  1. Rettaival's Blog

    Monday, February 20, 2012

    @...αηαη∂..

    ஆனந்த்! வூடி ஆலனுடைய "Purple Rose Of Cairo","Manhattan","Annie hall " பாருங்கள்...! இன்னும் அற்புதமான படங்கள்

  1. rohini kumar d

    Saturday, March 10, 2012

    thank you.. it is very nice!!

Post a Comment