RSS

Stanley ka Dabba - பொய்கள் உரைக்கும் உண்மைகலைப் படங்களால் பொதுஜனத்துக்கு என்ன பெரிதாக பிரயோஜனம் என்று பல நேரங்களில் யோசித்ததுண்டு. கண சத்ரு(1989) என்கிற சத்யஜித்ரே படம். பிரபல ஆங்கில நாடகத்தின் தழுவல். தவறான பைப் லைன் இடுவதால் ஒரு கோவில் குளத்தின் தண்ணீர் மாசுபடுவதும் அதை மக்களுக்குத் தெரியப் படுத்த அதிகார வர்க்கத்தை எதிர்த்து ஒரு பேராசிரியர் போராடுவதும் தான் கதை. ரொம்பவும் சாதாரணமான கதை தான். விசேஷம் என்னவெனில் படம் முழுக்க ஒரு காட்சியில் கூட அந்தக் குளம் காண்பிக்கப்பட்டிருக்காது.

தமிழிலும் நீர் மாசுபடுவதை மையமாக வைத்து ஒரு திரைப்படம் வந்தது. விக்ரம் ஜோதிகா விவேக் என பெரிய ஸ்டார்களை வைத்து உப்பு காரம் எல்லாம் சரியான விகிதத்தில் சேர்த்து சூப்பர் ஹிட் ஆன "தூள்" என்கிற திரைப்படம் தான் அது. இப்பொழுது யோசித்தால் தூள் படம் என்றவுடன் கிளைமாக்ஸ் சண்டைப் பாடலும் விவேக் காமெடியும் தான் சட்டென ஞாபகத்துக்கு வரும். இப்பொழுதும் கணசத்ருவை யோசித்தால் திரையிலேயே ஒரு முறை கூட வராத அந்த குளமும் அதன் பின் விளைவுகளும் தான் ஞாபகத்துக்கு வருகிறது.

எதற்காக இந்த வியாக்கியானமென்றால் பல பெரிய விஷயங்களை பேசும் பொழுது அதன் முப்பரிமாணத்தையும் காட்டித்தான் புரிய வைக்க வேண்டுமென்பதில்லை. கலவரத்தின் பாதிப்பை உணர வைக்க கலவரத்தையே காட்ட வேண்டிய கட்டாயம் ஒன்றும் இல்லை. அந்த வகையில் நாம் படமெடுப்பதற்கு இன்னும் எவ்வளவோ களங்கள் பாக்கி இருக்கின்றன. அதில் ஒன்றை மிகவும் சிம்பிளாக , கொஞ்சம் நறுக்கென சொல்லியிருக்கும் படம் தான் (Stanley ka Dabba). அமோல் குப்தே இயக்கி பார்த்தோ எனும் சிறுவன் நடித்திருக்கும் படம்.

குழந்தை தொழிலாளர் முறை என்பது நம் ரத்தத்தில் கலந்து விட்ட தேசிய அயோகியத்தனங்களில் ஒன்று. அனைவருக்கும் கல்வி என்பதே கனவாக இருக்கும் தேசத்தில் தான் அனைவருக்கும் வேலை என்பது சாத்தியமாகிக்கொண்டிருக்கும் ஒரு அதிசய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இந்த வேடிக்கை முரண் நம்மைப் போன்ற வீர்யமே இல்லாத ஜனநாயகத்தில் மட்டுமே சாத்தியம்.

Stanley ka Dabba - ஆகா ஓகோவென்ற கதையெல்லாம் இல்லை. ஒரு வழக்கமான நடுத்தரவர்க்க ஹை ஸ்கூல். ஸ்டான்லி எனும் நான்காம் வகுப்பு சிறுவன்.இடது கை பழக்கமுள்ள க்ரியேடிவிட்டி சற்றே அதிகமுள்ள சிறுவன். ஸ்வைன் ஃப்ளூ உபயத்தில் விடுமுறை அதிகமானதால் போர்ஷன் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் நேரத்தை நீட்டிகிறது பள்ளி நிர்வாகம். ஒரு நாளைக்கு இரண்டு பிரேக் என அறிவிக்கிறார்கள்.ஸ்டான்லிக்கு சொந்தமாக லன்ச் பாக்ஸ் கொண்டுவர இயலாத சூழ்நிலை. நண்பர்களிடம் உண்மையை சொல்லவும் முடியவில்லை. இதற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணமும் கதையும் சொல்கிறான், அவர்கள் நம்பும்படியாக. இயலாத பட்சத்தில் டாய்லெட்  ரூமில் உள்ள தண்ணீரைக் குடித்தே நாட்களைக் கடத்துகிறான்.ஒரு கட்டத்தில் இது நண்பர்களுக்குத் தெரிந்து விடுகிறது.தங்கள் உணவையே அவனுக்கும் கொடுத்து பகிர்ந்துண்கிறார்கள். வில்லன் ஹிந்தி ஆசிரியர் பாபு பாய் (அமோல் குப்தே- இயக்குநர்) ரூபத்தில் வருகிறார். லன்ச் பாக்ஸ் கொண்டுவரவில்லையென்றால் பள்ளிக்கு வரக்கூடாதென்கிறார்.

ஹிந்தி ஆசிரியருக்கு பாடம் நடத்துவதை விட ஒவ்வொருவரின் லன்ச் பாக்ஸில் தான் ஈடுபாடு.கூச்ச்மில்லாமல் எல்லாருடைய டிஃபன் பாக்ஸிலும் கைவைக்கிறார். சக ஆசிரியர்கள் உட்பட வேண்டாவெறுப்புடனே நடந்து கொள்கின்றனர்.இதற்கிடையில் ஸ்டான்லிக்கு அவர் இழைத்த கொடுமை வெளிப்படுகிறது. குற்றவுணர்வுடன் ஸ்டான்லிக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பள்ளியை விட்டு செல்கிறார். மிகவும் அன்பாக நடந்து கொள்ளும் இங்கிலீஷ் டீச்சர், கண்டிப்புடன் நடந்து கொள்ளும் சயின்ஸ் டீச்சர் என இன்ன பிற கேரக்டர்களும் குறிப்பிடத்தகுந்தவை. அதிலும் சயின்ஸ் ப்ராஜக்ட் செய்யச் சொல்லும் பொழுது ஒரு லைட் ஹவுஸை செய்கிறான் ஸ்டான்லி.அதை மிகவும் பாராட்டி எனக்கு அதை தருவாயா என்று கேட்கிறார் இங்கிலீஷ் டீச்சர்.அதே லைட் ஹவுஸை புத்தகத்தில் இல்லாததை ஏன் செய்கிறாய் என கண்டிக்கிறார் சயின்ஸ் டீச்சர். நம் பாடத் திட்டத்தின் மகத்துவத்தை(?) விளக்கும் அற்புதக் காட்சி அது.  ஸ்டான்லியின் இடது கைப் பழக்கத்தை (Right is Right) என்று சொல்லி வலது கையில் எழுத வைக்கிறார் ஹிந்தி ஆசிரியர். நம் ஆசிரியர்களின் ஒழுக்கம் பற்றிய அபத்தமான புரிதலை திரைக்கதை போகிற போக்கில் காட்டிவிடுகிறது. அதே போல் ஸ்டான்லி எழுதும் ஆங்கில கட்டுரைகளில் கற்பனை மிளிற்கிறது. தன் அம்மா பஸ்ஸில் இருந்து குதிப்பதாகவும் ரயில்களைத் தாண்டி பறப்பதாகவும் எழுதுகிறான் ஸ்டான்லி. அதை ஸ்டாஃப் ரூமில் சக ஆசிரியர்களுக்கு வாசித்துக் காண்பிக்கிறார் ஆங்கில ஆசிரியை.  சோகம் என்னவெனில் ஸ்டான்லிக்கு அப்பா அம்மா இருவரும் கிடையாது. ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டே படிக்கும் சிறுவன் என்று காட்டுகிறார்கள். அதுவும் பார்வையாளர்களுக்கு மட்டுமே. படத்தில் எந்த ஒரு கேரக்டருக்கும் அவனுடைய நிஜமான பின்னணி தெரியாது. கிளைமாக்ஸில் தன் அம்மா தினமும் செய்து தருவதாக சொல்லி ஸ்டான்லி தன் ஹோட்டலில் மிஞ்சுவதை ஒரு லன்ச் பாக்ஸில் எடுத்து வந்து எல்லோருக்கும் கொடுக்கிறான்,. அனைவரும் ஆர்வத்துடன் அவன் பொய்களைக் கேட்டவாறே அவன் தரும் பதார்த்தங்களை சப்புக் கொட்டி சாப்பிடுவதுடன் படம் நிறைவடைகிறது.

பார்த்தோவின் நடிப்பை அபாரம் என்பதெல்லாம் சாதாரணமான வார்த்தை.எக்ஸ்பிரஷனில் வித்தை காட்டியிருக்கிறான். தேசிய விருது வெல்ல வாய்ப்புண்டு.எல்லோருமே subtle  ஆக நடித்திருக்கிறார்கள், பாபு பாயாக வரும் அமோல் குப்தேயை தவிர. அந்த கேரக்டரே கொஞ்சம் புதிராகத்தான் இருக்கிறது. பாபு பாய் எல்லோருடைய உணவிலும் கொஞ்சம் கேட்டு வாங்கி சாப்பிடுவது பயங்கர நெருடலாக உள்ளது. படத்தின் விசேஷம் அசலான குழந்தைகள் உலகம். அஞ்சலி பாணி அதிகப் பிரசங்கித்தனமில்லாத அசலான குழந்தைகள் உலகம். அதனுள் பயணிக்கும் போதே ஒரு குதூகலம் வந்து விடுகிறது. படத்தின் இன்னொரு விசேஷம் படத்தில் நடிக்கும் மாணவர்களின் பள்ளி நேரத்தை தொந்தரவு செய்யாமல் சனிக்கிழமைகளிலும் விடுமுறை நாட்களிலும் ஷூட் செய்யப்பட்டிருக்கிறது. படம் விருது வாங்குகிறதோ இல்லையோ அந்த சிறுவன் பார்த்தோ நிச்சயம் ஏதாவது ஒரு விருது வாங்க வேண்டும்.

தமிழில் என் ஞாபகத்தில் ஜானகி விஸ்வநாத்தின் "குட்டி" படம் மட்டுமே குழந்தை தொழிலாளர் கொடுமையைப் பற்றிப் பேசியது. விபசாரம், போதை இதையேல்லாவற்றையும் விட கொடுமையானது கு.தொ.கொடுமை. இந்தியாவில் மட்டும் ஒன்னேகால் கோடி குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். ஒரு சினிமாவின் இலக்கணமோ விருதுக்கு அத்தியாவசியமான திரைக்கதையோ ஸ்டான்லி கா டப்பாவில் இல்லாமலிருக்கலாம். ஆனால் நாம் மறந்து கொண்டிருக்கிற , வாழ்க்கையின் ஓட்டத்தில் சகஜமாகிவிட்ட ஒரு வன் கொடுமையின் தீவிரத்தை அசைத்துப் பார்க்கிற சினிமாவை கொண்டாடுவோம்.
**********************************************************************************


 1. Veliyoorkaran

  Sunday, July 10, 2011

  என்னாது சாரு நிவேதிதா இவ்ளோ மோசமானவரா...?

 1. Rettaival's Blog

  Sunday, July 10, 2011

  Veliyoorkaran said...

  என்னாது சாரு நிவேதிதா இவ்ளோ மோசமானவரா...?
  *******************************************
  இத்தனை வருஷம் ஆகியும் நீங்க திருந்தலையாடா...?
  பட்டாபட்டி வந்து இது என்ன நித்தி பத்தின படமான்னு கேப்பான்...! இவனுகளுக்கு வெளக்கம் சொல்லியே டயர்ட் ஆவுது...!
  (அய்யாய்யோ...பட்டாபட்டியை தேவையில்லாம இழுக்கறேனோ!)

 1. ILLUMINATI

  Sunday, July 10, 2011

  //என்னாது சாரு நிவேதிதா இவ்ளோ மோசமானவரா...?//

  ஏன் மச்சி, அந்த பீசு கனிமொழிய வேற இழுத்து விடுதே? :)

 1. ILLUMINATI

  Sunday, July 10, 2011

  http://www.youtube.com/watch?v=5t7C5D2IyO4

  See this too..

 1. பட்டாபட்டி....

  Tuesday, July 12, 2011

  இது என்ன நித்தி பத்தின படமா மச்சி?

Post a Comment