RSS

அவன் இவன் - பாலாவின் நடுநிசி நாய்கள்


அறைக்குள் உட்கார்ந்து கொண்டு விமர்சனம் எழுதுவதை விட நடிப்பதும் படமெடுப்பதும் கஷ்டமான காரியம் தான்...ஆனால் நீங்கள் தேசிய விருது வாங்குவதற்காகவும் மனதில் இருக்கும் வக்கிரத்தை அவிழ்த்து வைப்பதற்காகவும் நாங்கள் நூறு நூற்றைம்பது கொடுத்து டிக்கெட் வாங்கி முப்பது நாற்பது என பார்க்கிங்கிற்கு அழும்போது தான் வேதனையாக இருக்கிறது.




தேவையற்ற உடலை வருத்திய நடிப்பு;எதிர்பாராத ட்விஸ்டுகளோ சுவாரஸ்யமோ, எதுவுமே இல்லாத மொன்னையான கதை;அதற்கு லாஜிக் பொத்தல்களுடன் ஒரு திரைக்கதை; மட்டமான Casting ;உயிரே இல்லாத பின்னணி இசை. இது தான் அவன் இவன்.

இந்த மாதிரி ஒரு கிராமத்தை தமிழகத்தில் எங்கே கண்டு பிடித்தார்கள் என தெரியவில்லை. சகஜமாக திருடுகிறார்கள்.ஜட்ஜ் கிரிமினலைக் கூப்பிட்டு வீட்டு பீரோ லாக்கரை உடைக்க சொல்கிறார்.அவரே ராஜ மரியாதையோடு சுழல் விளக்குப் பொருத்திய அவரது அரசாங்க காரில் கிரிமினலை வழியனுப்பி வைக்கிறார்.அதை சாதனையாக கருதி பேண்ட் வாத்தியங்களோடு அவரது அம்மா குத்தாட்டம் போடுகிறார். இன்னொரு ஹீரோவின் அம்மா பீடி குடிக்கிறார்.பையனிடம் சரக்கு கேட்கிறார்.சக்களத்தியோடு கெட்ட வார்த்தையில் மோதிக் கொள்கிறார்.

இதையெல்லாம் விட கொடுமையின் உச்சக்கட்டம் அந்த கிராமத்தின் போலீஸ் ஸ்டேஷன். இத்தனை வருஷ தமிழ் சினிமா..ஏன் உலக சினிமா வரலாற்றில் கூட போலீஸ்காரர்கள இவ்வளவு அவமானப் படுத்திப் பார்த்ததில்லை.எண்பதுகளில் வரும் சினிமாக்களில் உலக உருண்டையை உருட்டிக் கொண்டே டயலாக் பேசி கிளைமாக்ஸில் எல்லாம் முடிந்த பிற்பாடு வருவார்களே...அவர்களை விட அவன் இவன் போலீஸ்காரர்கள் படு மோசமாக காட்சியளிக்கிறார்கள்.கிரிமினல்களுக்கு கிடா வெட்டி விருந்து கொடுப்பதெல்லாம் காமெடி என்றால்..ஸாரி பாலா..கண்ணீர் முட்டுகிறது.

அதுவும் அந்த ஹீரொயின்கள். மற்றவர்கள் படத்தில் ஹீரோயின்கள் எஞ்சினியரிங் காலேஜ் என்றால் பாலா படத்தில் எந்த காலேஜ்..ம்ம்..அதே தான்... டுடோரியல் காலேஜ்.இன்னொரு ஹீரோயின் கான்ஸ்டபிள்.விசகாலின் மாறுகண்ணையும் மீறி உருகுகிறார்.அதுவும் அந்த டுடோரியல் பொன்னு எதற்காக ஆர்யாவை காதலிக்கிறார் என்று யாருக்குமே தெரியவில்லை.ஆர்யா அந்த பெண்ணை கவரிங் நகைகளை காட்டி ஏமாற்றியதற்காக குட்டிக்கரணம் போட சொல்கிறார், லவ் வந்து விடுகிறது.விஷால் அந்த லேடி கான்ஸ்டபிளிடம் பொன்னுங்க போடற பேண்ட்ல எதுக்கு ஜிப் என்று கேட்க,அதற்கும் லவ் வந்து விடுகிறது.இந்த கருமத்திற்கு மணிரத்னம் பாலச்சந்தர் பட ஹீரோயின்கள் எவ்வளவோ தேவலை.அதிகப் பிரசங்கித்தனமாக பேசுவார்கள்.அவ்வளவே!



படத்தின் ஒரே ஆறுதல் வில்லன் ஆர்.கே!பத்து நிமிடமே என்றாலும் பரவாயில்லை...குறிப்பிடும் படியான எக்ஸ்பிரஷன்கள்.ஜி.எம்.குமாரை வீணடித்திருக்கிறார்கள்.தைரியமாக இந்த வயதில் அம்மணமாக நடித்திருக்கிறார்.

சமகாலத்தின் முக்கியமான ஆளுமையான எஸ் ராமகிருஷ்ணனின் வசனங்கள் எதிர்பார்ப்புக்கு அருகில் கூட இல்லை.வலிந்து திணிக்கப் பட்ட கெட்ட வார்த்தைகள், எதார்த்தம் என்ற பெயரில் நடக்கும் உரையாடல்கள் படத்தின் மீதான அபிமானத்தை வெகுவாக குறைக்கிறது. அப்பட்டமான வட்டார மொழி இந்த படத்தை சறுக்க வைக்கிறது.

வழக்கமாக பாலாவின் படங்களில் படும் நெடுக இழையோடும் நகைச்சுவை இதில் சுத்தமாக இல்லை.அதனாலேயே ஜி.எம்.குமார் அம்மணமாக ஓடும் போது நமக்கு அதிர்ச்சிக்குப் பதிலாக வெறுப்பு வருகிறது.அதுவும் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பின் எப்போதடா ஆர்யாவும் விஷாலும் சேர்ந்து வில்லனை சகதியில் முக்கி சாகடிப்பார்கள்,எப்போதடா வீட்டுக்குப் போகலாம் என்றிருக்கிறது.

டாப் நட்சத்திரங்களின் கால்ஷீட்;தன் வழக்கமான பாணி என்றைக்கும் செல்லுபடியாகும் என்கிற அதீத தன்னம்பிக்கை;ஆனால் அதே புளித்த மாவு என பாலா இன்னொரு மணிரத்னமாக மாறிவிடாமல் இருந்தால் சரி!




அவன் இவன் - Definitely Boring!

**********************************************************************************

கோ- பத்திரிக்கை (அ) தர்மம்



ஒரு தமிழ் சினிமாவை இது என்ன 'Genre'என கேட்பது அபத்தம், எப்போதாவது வரும் சில விதி விலக்குகளை தவிர!இங்கே எடுக்கப்படுவது ஒரே வகை படங்கள் தாம்.அதாவது காதல் ஆக்ஷன் காமெடி சென்டிமென்ட் கலந்த ஜனரஞ்சக சித்திரம்.அப்படி எடுத்தால் தான் தமிழ் ஜனம் ஓட வைக்கும் என்கிற புராதன காலத்து நினைப்பில் எடுக்கப்பட்ட மற்றுமொரு காவியம் தான் 'கோ'.

கல்லூரி லெக்சரரானாலும் சரி...இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸ்டானாலும் சரி...அதாகப்பட்டது தமிழ் சினிமா நாயகன்மார் அனைவரும் வேகமாக நடனமாட வேண்டும். பைக்கிலோ காரிலோ சேஸ் செய்து வில்லன்களை அடிக்கவேண்டும்.சடாரென நியூசிலாந்திலோ ஸ்விட்சர்லாந்திலோ ஹீரோயின் இடுப்பை அணைத்துக் கொண்டு மழைத்துளி முன்பனி என்று பேத்தலாக பாடிக்கொண்டே ஒரு டான்ஸை போட வேண்டும்.திடீரென மெழுகுவர்த்தி ஏத்தி ஊழலை ஒழிக்க முயற்சிப்பது போல இந்த அபத்தங்களை ஒழிக்க ஏதாவது செய்தால் நான் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பேன்.

ஒரிஜினல் வில்லன் யாரென கிளைமாக்ஸில் முடிச்சை அவிழ்க்கும் சாதாரண கதை.அதற்கு அப்படியொரு சொதப்பலான திரைக்கதை.சுவாரஸ்யமாக கதை நகரும்போதெல்லாம் அதை அம்போவென விட்டுவிட்டு கலர் காஸ்ட்யூம்களில் பாறை இடுக்கிலும் மலை முகடுகளிலும் ஸ்லோவாக கையை தூக்கி டான்ஸ் ஆடுகிறார்கள்.அதிலும் கார்த்திகா இரவு வேலை முடித்து வீட்டுக்குப் போகும் போது கூட ஃபுல் மேக்கப்பில் தான் போகிறார்.இன்னொரு ஹீரோயின் பியா அக்மார்க் தமிழ் சினிமா லூசு. சத்ரியன் ,இதயத்தை திருடாதேவில் ஆரம்பித்து இன்னும் சுட்டிப்பெண் கேரக்டருக்கான அம்சங்கள் நம் சினிமாக்களில் மாறவே இல்லை.அதிலும் பக்கத்துவீட்டுப் பையனுக்கு மேலாடையைத் திறந்து காட்டும் காட்சி.டைரக்டருக்கு திருஷ்டி சுத்திப் போட வேண்டும்.

ஜீவா முதலில் ஒரு வங்கிக் கொள்ளையை படம் பிடிக்கிறார் .பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் செய்யும் ஒரு அநியாயத்தை.பின்னர் முதலமைச்சர் செய்யும் ஒரு அராஜகத்தை.அப்படியே அரசியலுக்கு வரும் நல்லவர்களின் நன்னடத்தைகளை துரு துருவென படம் பிடித்தபடியே திரிகிறார்.இப்படியே பிடித்து பிடித்து ஆட்சியையே மாற வைத்து விடுகிறார்.அவ்வப்போது இரண்டு ஹீரோயின்களோடும் முற்போக்கு வசனங்கள் பேசுகிறார்.படத்தின் ஆரம்பத்திலும் சரி..முடிவிலும் சரி...அஜ்மல் செய்யும் அண்டர்பிளே நடிப்பு மட்டுமே ஆறுதல்.

ஹாரிஸ் ஜெயராஜ்,,தெய்வமே...இன்னுமா அந்த ட்யூனை விடல...! சலிக்காம ஒரே ட்யூனை மாத்தி மாத்திப் போட்டு எப்படிய்யா ஹிட் அடிக்க முடியுது உன்னால! எல்லாமே இந்த படத்துக்குத் தேவையற்ற ஆனால் ரசிக்கும்படியான பாடல்கள்.ஒளிப்பதிவு கச்சிதம்

டைரக்டருக்கு!

நீங்கள் இன்ஸ்பையர் ஆகும் அல்லது கண்ட்ரோல் வி செய்யும் ஆங்கில படங்கள் எல்லாமே மிகவும் தரமானவை. சென்ற படத்தில் 'Mariah Full of Grace ' ஐ ஒரு போர்ஷனுக்குப் பயன்படுத்தி இருந்ததைப் போல இதில் அப்பட்டமாக எதுவும் தெரியவில்லை. ஆனால் 'State of Play ' ,' Vantage Point ' போல எடுக்க வேண்டிய படத்தை தமிழ் சினிமாவின் ரெடிமேட் குப்பை திரைக்கதை அம்சங்களுக்குள் திணித்து இம்சித்திருக்க வேண்டாம். சகிக்கவில்லை!

கண்டபடி துப்பாக்கியால் சுட்டுக் கொன்று,வங்கிக்கொள்ளை அடித்து நக்ஸல் பாரி இயக்கத்தை வளர்த்து தேர்தல் அமைப்பில் புகுந்து மக்களுக்கு அவசியமான மந்திரி சபையா? லாஜிக்குகளின் சக்கரவர்த்தி ஷங்கரே தலையில் அடித்துக் கொள்வார்.முடியலை!


கடைசியாக...


1.மசாலா குப்பை எனத் தெரிந்தும் வீம்புக்கென நொள்ளை நொட்டு சொல்லி அல்லது பாராட்டி விமர்சனமெழுதும் பதிவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

2.தியேட்டர்களில் அவ்வளவு கூட்டம்! ஐ.பி.எல் அவ்வளவு போரடிக்கிறதா என்ன?

**********************************************************************************