RSS

My name is Khan & கலைஞரின் பன்ச் சாங்




கரண் ஜோஹர் டைரக்ஷனில் ஷாருக் நடித்தால் பாடல்கள் எப்படி இருக்கும் என்று ஒரு உங்களுக்கே ஒரு யூகம் இருக்கும். அதில் இம்மி பிசகாமல் பாடல்களை கொடுத்திருக்கிறார்கள் ஷங்கர்- எசான் - லாய். குச் குச் ஹோதா ஹையில் வரும் துஜே யாத்ன மேரி போல் இங்கே சஜ்டா என்றொரு பாடல். ஜோதா அக்பரில் வரும் க்வாஜா பாடலை கொஞ்சம் தொட்டு சென்றிருக்கிறார்கள்.ரஹத் ஃபதே அலி கான் பாடியிருக்கிறார்.பிரபல நஸ்ரத் ஃபதே அலி கானின் மருமகனாம். தேரெ நெய்னா என்ற பாடலை வேறு எந்த ஷாருக் படத்துக்குள்ளும் நுழைத்து விடலாம். அவரும் அதே போல் தலையை ஆட்டி ஆட்டி ஆடப் போகிறார்.
அட்னன் சாமியும் ஷங்கர் மகாதேவனும் பாடியிருக்கும் நூர்-ஏ-குதா என்ற பாடல் தான் கிளாஸ்.இரண்டாவது முறை கேட்கும் போதே உருக்குகிறது. அட்னான் சாமி குரலில் என்னத்தைத் தடவி பாடுகிறார் என்று தெரியவில்லை. இவரை அதிகமாக தமிழில் பயன்படுத்த மாட்டேன்கிறார்கள். பிறகு அல்லா ஹி ரஹெம் என்று ரஷீத் கான் பாடிய பாடல். படத்தோடு பார்த்தால் ரசிக்க முடியும். சூரஜ் பாடலின் ஸ்டைலயும் பீட்டுகளையும் நிறைய ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்க முடியும்.ஸ்ட்ரிங்ஸில் குழையும் தீம் ம்யூசிக் அருமை. எல்லாமே அக்மார்க் ஷாருக் பட பாடல்கள்.
ஷாருக் கஜோல் கரண் என்று மெகா வசூல் படங்களை கொடுத்த கூட்டணி.சாதாரணமாவே ஷாருக் கொன்சம் உணர்ச்சி குவியல்.இதில் ஆட்டிஸம் வந்தவராக வேறு நடிக்கிறார். படத்தின் ஸ்டில்களையும் ட்ரெய்லரையும் பார்த்தால் சென்டிமென்ட் கடலில் மூழ்கடித்து விடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.லேசாக Forrest Gump வாடையும் அடிக்கிறது. My name is khan தீவிர ஷாருக் கஜோல் ரசிகர்களுக்காக ஷங்கர் எசான் லாய் கொடுத்திருக்கும் கஸாட்டா ஐஸ்கிரீம்.

***************************************************************************************



வா வா தலைவா என்றொரு பாடல். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. உன்னி மேனன் ஹரி சரண் என்று வழக்கமாக ஹாரீஸின் இசையில் கௌதம் மெனன் படத்தில் பாடுவது போல் ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள்.மைக்கேல் ஜாக்ஸன் விஜயலக்ஷ்மி நவனீதகிருஷ்ணன் பாடல்களைப் பாடினால் எப்படி இருக்கும் ? அப்படி முதல்வரை வாழ்த்தி ஒரு பாடல் . விஜய் அஜித் எல்லாம் தோற்றுப் போவர்கள். அப்படியொரு ஓபனிங் சாங் நம் முதல்வருக்கு.கருமம் நம் சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்தால் பயமாக இருக்கிறது. ஒரு மனிதருக்கு எவ்வளவுதான் பாராட்டுதல்கள் பிடிக்கும். அவருக்கே சலிப்பு தட்டாதா.. இல்லை புகழ்பவர்களுக்குதான் கொஞ்சம் கூட கூச்சமே இருக்காதா? உங்களுக்குப் பாராட்டு விழாவும் பஞ்ச் பாடல்களும் போட்டுக் குஷிப்படுத்தினால் தான் வேலைக்கு ஆகுமென்றால் பொதுமக்களாகிய நாங்கள் என்ன செய்யவேண்டும் கலைஞரே?

கிருஷ்ணா கிருஷ்ணா...A tale of Past Present and Future!




கிருஷ்ணன் என்றதும் உங்கள் ஞாபக செல்களில் என்னவெல்லாம் ஓடுகிறது? வெண்ணை திருடுபவன், விளையாட்டுப் பிள்ளை, குருக்ஷேத்திரத்தின் சூத்திரதாரி, கோபிகைகள்,பிருந்தாவனம், மதுரா.

உப பாண்டவத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் நம்மை புனைவுக்குள் அழைத்துச் சென்றது போல கிருஷ்ணா கிருஷ்ணா எனும் இக்குறுநாவலில் புனைவிலிருந்து வந்து நம்முடன் உரையாடுகிறார் இந்திரா பார்த்தசாரதி.இது நாள்வரை புராணங்களின் மீதும் இதிகாசக் கதைகளின் மீதும் வைத்திருந்த அபிப்பிராயத்தை லேசாக அசைத்து விடுகிறது இந்நாவல். கிருஷ்ணனின் பால்யம், வாலிபம், அரசியல், முக்கியமாக கிருஷ்ணனின் அந்திம பொழுதுகளை கற்பனையோடோ அல்லது நிஜமாகவோ விவரிக்கிறது இந்நூல்.வாழ்க்கைக் குறிப்பாக அல்ல...சில பல தர்க்கங்களோடு.

ஜரா எனும் வேடனிடம் கிருஷ்ணன் அம்பெய்தப்படும் சூழ்நிலையில் கிருஷ்ணன் ஜராவிடம் தன் Auto-Biography யாக சொல்லும் விஷயங்களை வேடன் நாரதரிடம் கூறி நாரதர் நம்மிடம் உரையாடுவதாக எழுதப்பட்டிருக்கிறது. யாதவர்களின் முடிவும் மதுராவின் துரதிர்ஷ்டமும் இன்னும் பல நிகழ்ச்சிகளுக்கு காரண காரியங்கள் புராணங்களிலேயே விவரிக்கபட்டிருக்கும். ஆனால் அதன் உண்மையான அர்த்தம் காண விழைவதே புனைவின் சுவாரஸ்யம். உதாரணமாக சம்பவாமி யுகே யுகே என்று நம் சமூகத்தில் அடிக்கடி ஒரு வார்த்தை உதிக்கக் கேள்விபட்டிருப்பீர்கள்.அதாவது எங்கே அதர்மம் தலை தூக்குகிறதோ எட்சட்ரா எட்சட்ரா..நான் மீண்டும் வருவேன் என்று.அதன் மறு அர்த்தம் கிருஷ்ணனாகிய நான் எடுத்த அவதாரத்தை அந்தந்த காலங்களுக்கு ஏற்ப நீங்களே அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள் என்பது தான்.இப்படியாக இ.பார்த்தசாரதி காட்டும் உள்ளர்த்தங்கள் நிறைய.

கிருஷ்ணன் நினைத்திருந்தால் குருக்ஷேத்திரமே நடந்திருக்காதே. எதற்காக அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் விஸ்வரூபத்தைக் காட்டி நமக்குக் கதை சொல்ல வேன்டும். இதெல்லாம் நீண்ட நாள் விடையில்லாமல் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்விகள். அதற்கான விடையை கிட்டத்தட்ட நெருங்கியிருக்கிறது 'கிருஷ்ணா கிருஷ்ணா'.

Political Strategies எப்படி யுகம் யுகமாக ஆளுங்கட்சியையும் எதிர்க்கட்சியயும் அலைக்கழித்திருக்கிறது என்பதையும் அநாயசமாக விவரிக்கிறது இந்நூல். எல்லோருக்கும் பிடித்தமானவனாக கிருஷ்ணன் ஏன் அரசனாக இருக்க விரும்பவில்லை என்ற கேள்விக்கான பதில் அவன் வாழ்க்கையாக இருக்கிறது. கீதை எப்பொழுது பிறந்தது என்பதை நாம் அறிவோம். என்ன மாதிரியான சைக்கிக் டென்ஷனில் உருவானது என்பதையும் இ.பா அவருடைய மொழியில் அலசியிருக்கிறார்.

கடமையை செய்.பலனை எதிர்பாராதே என்பதன் உள்ளர்த்தம் யோசிக்க வைக்கிறது. அர்ஜுனனுக்கு ஏற்படும் Existentialistic Dilemmaவிலிருந்து அவனை காப்பாற்றி ஒரு போரை உருவாக்கி எதை விளக்குகிறான் கிருஷ்ணன்? எல்லாம் மாயை என்பதையா?.கிருஷ்ணனின் வாழ்க்கையில் இன்றைய அவசர உலகின் ஆதார கேள்விகளுக்கு பதில் தரும் சுவாரஸ்யத்தை எட்டிபிடித்திருக்கிறார் இ.பா. கிருஷ்ணனை ஒரு சமுதாயக் கனவு என்று அறிவித்துவிட்டே நாரதரை நம்முடன் உரையாட விட்டிருக்கிறார்.நாரதரும் தேவ பாஷையில் பேசுவதில்லை.நம் மொழியிலேயே பேசுகிறார்.அவரது உரையாடலில் இண்டர்நெட் வருகிறது.Weinberg வருகிறார். போருக்காக தூது செல்லும் கிருஷ்ணனை Ambassador at Large என்றழைக்கிறார்.

மிகவும் ஆச்சரியப் பட வைத்த விஷயம், கிருஷ்ணனின் முடிவு. தன் அந்தியில் பிரியத்துக்குரிய ராதாவை தேடிச் செல்கிறான் கிருஷ்ணன்.பால்யத்தில் ராதாவுடனான லீலைகள் திரும்பவும் நடுக்குமா என்ற நப்பாசையில்.எல்லாம் தலைகீழாக இருக்குமென்ற எதிர்பார்ப்புடன் செல்பவனுக்கு அங்கே ஆச்சரியம்.சிறுவர்கள் குழலூதிக்கொன்டிருக்கிறார்கள்.எல்லோரும் கிருஷ்ணனாக மாறிவிட்டிருக்கிறார்கள். கிருஷ்ணனும் குழ்லூத முயற்சிக்கிறான். இசை வருவதில்லை. அங்கு ராதாவை வயாதான மூப்படைந்தவளாகப் பார்க்கத் தைரியமில்லாமல் ஜராவிடம் அம்பை (மரணத்தை) வாங்கிக் கொள்ள காட்டுக்குத் திரும்புகிறான். கிருஷ்ணனின் வாழ்க்கை இவ்வளவு சுவாரஸ்யமா என்று வியப்படைய வைக்கிறது இ.பா வின் புனைவு. கிருஷ்ணா கிருஷ்ணா சமுதாயக் கனவின் சமகால நீட்சி என்பதோடல்லாமல் வருங்காலத்துக்குமான புனைவுமாகிறது.

வரலாற்றிலிருந்து கொஞ்சமாக விலகி சரடு விடுவதை விட கஷ்டமானது புராணங்களிலிருந்து Logic ஐ எடுத்து நம்மை தர்க்கிக்க வைப்பது.

கிருஷ்ணா கிருஷ்ணா is that kind of one.