RSS

வனசாட்சி - தேசமற்றவர்களின் பிரதி



வரலாறு எப்பொழுதும் வென்றவர்களையே வீர்யமாகப் பதிவு செய்திருக்கிறது. சாமான்யர்களை, அதிலும் அலைக்கழிக்கப்பட்டவர்களை பாராமுக‌மாகக்கூட அல்ல, பதிவு செய்யாமலே விடுவது தான் சரித்திரத்தின் வழக்கம். எத்தனையோ உதாரணங்கள் உண்டு.  குறுகிய காலத்தில் நடந்ததாலோ என்னவோ இந்திய-பாகிஸ்தான் பிரிவினையே நம் வரலாற்றுப் பக்கங்களை ஆக்கிரமித்துள்ளது. ஆனால் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கிருந்து இலங்கைக்கு சென்று காட்டை வளப்படுத்தி , தேயிலைத் தோட்டங்களாக்கி உலகின் அரைவாசிப் பேருக்கு தேநீர் தந்து , நாட்டை வள‌மாக்கி  அதன் இம்மியளவு பிரயோசனங்களைக் கூட அனுபவிக்காமல் அங்கிருந்து துரத்தப்பட்டு எந்த தேசத்திலும் ஒன்ற முடியாமல் வாழ்ந்த மலையகத் தமிழர்களைப் பற்றி சிறு குறிப்பேனும் நம் பாடப்புத்தகங்களில் கிடையாது என்பதே நிதர்சனம்.

அந்தக் குறையை சிறிதளவேனும் போக்கியிருக்கிறது தமிழ்மகனின் வனசாட்சி எனும் சமீபத்திய புதினம்.  தோட்டத்தொழிலாளர்கள் என்று நினைக்கும் போதே, ரொம்பவும் இதமான தட்பவெட்பம், இலகுவான வேலை (இலையைக் கிள்ளி சுமந்திருக்கும் கூடையில் போடுவது தானே ) என்றே ஞாபகச்சில்லுகளில் உறைந்துபோன ஒரு காட்சிப் படிமம் தான் வருவது வழக்கம். அந்த நம்பிக்கை முதல் மூன்று பக்கங்களிலேயே சிதறி விடுகிறது.  

கலவரமும் நடுக்கமும் பயமும் சரிவிகிதத்துடன் கலந்த அந்த இடம்பெயர்தலில் தொடங்குகிறது கதை.  மண்டபத்திலிருந்து தோணி ஏறி கட்டுவிரியன்களுடனும் கரடிகளுடனும் பாம்புகளுடனும் போராடி காட்டுப் பாதையில் நடந்தே மாத்தளை , கண்டி எனப் பிரயாணித்து தேயிலைத் தோட்டம் வந்து சேர்கின்றனர் முதல் தலைமுறை இந்தியத் தமிழர்கள். ஊரில் பஞ்சம், கடன் என நொந்து போய் இலங்கையில் நாலு காசு பார்த்து ஜமீந்தாராக திரும்பலாம் என கனவுக‌ளோடு தோட்டத்தில் கால் வைப்பவர்களுக்கு நிஜம், தோட்டத்துக் குளிரைப் போலவே  எலும்பை ஊடுருவித் தாக்குகிறது. கங்காணிகள், தோட்டத் துரைமார்கள் (பிரிட்டிஷார்) என அங்கும் விதி விளையாடுகிறது. சாண் ஏறினால் முழம் சறுக்கும் வாழ்க்கை. ஏன் என்று கேட்க நாதியற்றுப் போய் எதையும் எதிர்க்கும் திறனே அற்றுப் போகிறார்கள்.  உலகன், அருக்காணி, ரத்தினம் எனப் பலபேரின் வாழ்க்கை விவரிப்புகள் என்றாலும் , அவர்கள் படும் துன்பம் ஒன்றே. அடிமை என்பதன் அர்த்தத்தை பரிபூர்ணமாக அனுபவிக்கும் தமிழர்கள்.  எவ்வளவு உழைத்தாலும் வாழ்க்கையில் மேலே எழும்பி வந்துவிட முடியாத சாபம் கொண்ட தமிழர்கள். 

எப்பொழுதும் சுரண்டலின் அச்சாணியாக இருப்பது தரகர்கள்தாம். இதிலும் கங்காணி எனப் பெயர் கொண்ட தரகர்களே இவர்களின் வாழ்க்கையைத் தீர்மானித்தவர்கள். பலவீனங்களைப் பயன்படுத்த அறிந்திருந்த தரகர்கள். கொத்துக் கொத்தாக தமிழ்நாட்டிலிருந்து ஆட்களை ஆசை காட்டி தேயிலைத் தோட்டத்துக்கு அழைத்துவந்தவர்கள். எந்த ஒரு அடிமை வரலாறும் இவர்கள் இல்லாமல் நிறைவு பெறாது. ஆழ்ந்து யோசித்தால் நாவலில் அவ்வப்போது வரும் இந்தக் கங்காணிகளே கதையில் திருப்பங்களை ஏற்படுத்துகிறார்கள். பயத்தை அறுவடை செய்யும் வியாபாரிகளாக உலா வரும் இந்த தரகர்களே ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறார்கள் (முதல்வர் சுவாமிநாதன் என்பவரைக் கூட கங்காணியாகவே காண முடிகிறது).

புதினம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது 

முன்பனிக்காலம் - பஞ்சத்துக்காக இங்கிருந்து இலங்கைக்கு செல்லும் தலைமுறையினரின் கதை.

பின்பனிக்காலம் - சிரிமாவோ - சாஸ்திரி ஒப்பந்த்தத்தால் அங்கிருந்து விரட்டப் பட்டு இந்தியாவில் மீண்டும் தஞ்சம் புகும் காலம்.

இலையுதிர்காலம் - ராஜிவ் படுகொலை தொடங்கி முள்ளிவாய்க்கால் மரணம் தொட்டு தற்போது வரை.

வன சாட்சி , காசிபிள்ளை, மல்லிகா, சிவசங்கரன் பொன்னப்பன் எனப் பலரின் கதையாக விரிந்து கடவுசீட்டு கிடைக்கப்பெறாமல் குடும்பத்தை இந்தியாவுக்குத் தாரை வார்த்து அங்கேயே தங்கி போராளியாக மாறிப் போகும் லட்சுமியைத் தேடிப்போகும் முருகன் எனும் இந்தியத் தமிழ்பேராசிரியனின் கதையாக மையம் கொள்கிறது.  
தன் அத்தை லட்சுமி என்னவானாள் என்பதை முருகன் கண்டுபிடிப்பதும் கடைசியில் ஏற்படும் திருப்பமும் சற்றே நாடகத்தனம் என்றாலும் , அது என்னவென்பதை புத்தகம் படித்துத் தெரிந்து கொள்க. சுவாரஸ்யமாக இருப்பதால் அது கதையின் நம்பகத்தன்மையை பாதிக்கவில்லை. அந்த டிரமாட்டிக் த்ரில்லும் இல்லையென்றால் இது வெறும் துன்பியல் பிரதியாகியிருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

கிளைக்கதைகள் பல உண்டென்றாலும் எதிலும் யாருக்கும் நல்லதே நடப்பதில்லை. கதையின் இன்னொரு முக்கியமான பலம், ஊடகங்கள் கட்டிவைத்திருக்கும் ஈழத்தமிழர்  அனைவரும் ஒன்றே என்பதைப் போன்ற  ஒரு மாய பிம்பத்தை அசைத்துப் பார்த்திருப்பது. 

பொன்னப்ப தாத்தா சொல்வது போல‌ 

"மூனு தினுசு தமிழன் இருக்கான். ஒன்னு யுகம் யுகமா இலங்கைலயே இருக்கறவன். பெரிய்ய பெரீய வக்கீலு கவுருமெண்டு அதிகாரி எல்லாம். இன்னொன்னு வியாபாரி..பேங்கு, வட்டிக்கடை நடத்துறவன்.ஒரு ரூவா போட்டு பத்து ரூவா எடுக்கறவன். மத்தது நம்மளை மாதிரி ரப்பர் தோட்டம் டீ தோட்டம்னு அட்டைக்கடில சாகிறவனுங்க. வக்கீலு வியாபாரி மேல கை வைக்க முடியுமா. அதான் நம்ம மேல பாயறானுக."

ராஜீவை படுகொலை செய்தால் இந்திய உதவிகள் நின்று போகாதா என ஒரு போராளியின் நியாயமான சந்தேகத்தை ஒரு கதாபாத்திரம் கேட்கிறது. இன்னும் காந்தி நேரு ஃபோட்டோவையே வீட்ல மாட்டிருந்தா நம்மளை எப்படி நம்புவான் என்கிறது மற்றொரு கதாபாத்திரம். 

முதலாளி- கங்காணி- தொழிலாளி வேறுபாடுகள் எப்படி சிங்கள - தமிழ் வேறுபாடுகளாக மாறியது என்பதையும் யோசிக்க வைக்கிறது வனசாட்சி. மேதாவித்தனங்களற்ற , தன்னுரைகள் அதிகமல்லாத, உரையாடல்கள் வழியாகவே கதையை சாமர்த்தியமாகக் கொண்டு போவது படைப்பாளியின் வெற்றி. தான் எந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று எல்லோரும் ஏதோ ஒரிடத்தில் குழம்பித் தவிக்கிறார்கள். தனது வேர் எதுவென்றே தெரியாமல் கலங்கி நிற்கும் ஜனங்களின் வார்த்தைகளை வலியை அங்கங்கே புகுத்தியிருப்பது கச்சிதம்.வெட்டுப்புலி  நாவலைப் போல இதிலும் அரசியல் முடிவுகள் , சம்பவங்கள் ஒவ்வொருத்தர் வாழ்விலும் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் தமிழ் மகன். 
ஆனால் இதே கதை சொல்லல் முறையை அடுத்த புதினத்திலும் கையாண்டால் சலித்துவிடும்.

கதையில் பெரிய சாமி என்பவனுக்கு இந்த சந்தேகம் வரும்.
 
"சேனநாயகா பண்டாரநாயகா மீது கூட  கோபம் இல்லை, அவர்கள் தங்கள் ஜனங்களுக்காக பாடுபட்டது போல் நம் தலைவர்கள் ஏன் பாடுபடவில்லை என்பது தான் புரியவே இல்லை..."

நமக்கும் தான்.

*********************************************************************************
உயிர்மை வெளியீடு


(மானங்கெட்ட) உடன் பிறப்பே :பார்ட் II



(மானங்கெட்ட)  உடன்பிறப்பே !



ஆசையில் ஓர் கடிதம்...என் உடலும்என் உடலில் உன் உள்ளமும் நலமென கொள்..நின்னின் நலம் விழைய அவா...! உன் அன்பிற்கும் ஆசைக்கும் உரிய நெஞ்சத்திற்கு என் வணக்கத்தையும் வாழ்த்தையும் சொல்..!..! 

தமிழ் இணையத்தில் சில நாட்களாய்என் இதயத்து உடன்பிறப்புக்கள் தாக்கப்படுவதாய் சிறுகுறிப்பொன்று என் மேஜைக்கு வரக்கண்டேன்..துணுக்குற்றேன்...திடுக்கிட்டு போனேன்...!! திமுக தொண்டன் தாக்க வேண்டியவனே அன்றிதாக்கப்பட வேண்டியவன் அல்லவேஎன என் மனம் வெம்பி  பதறியது கண்டேன்..உனக்கொன்று சொல்வேன் நான்...கேட்டுகொள் உடன்பிறப்பே..!

நம்மை போன்ற நயவஞ்சகர்களுக்கு நாவடக்கம் முக்கியம் என்பதை மனதில் நிறுத்து ...கோவத்தை குறைத்துக் கொள்..!இணையத்தில் வார்த்தைகளை கட்டுக்குள் வை..உணர்ச்சிவசபடாதே...!! திராவிட முன்னேற்ற கழகம் மனிதம் உள்ளவர்களால் நிறுவப்பட்டு என்னை போல் மூளை உள்ளவர்களால் வளர்க்கப்பட்டு உன்னை போல் சிந்திக்கும் திறன் குறைந்த உணர்ச்சிமிகு தொண்டர்களின் உழைப்பில் வலுபெற்ற மாபெரும் இயக்கம் என்பதை வரலாற்றிடம் கேட்டறிந்து கொள்...இது வரலாறு திரும்பும் நேரம்...! இணையத்தில் கழகத்திற்காக சிறப்பாக செயலாற்று...அடுத்தவர்களுக்கு சிரிப்பு வர செயலாற்றாதே...!!..!

நாம் என்றைக்கு ஒரு பிரச்சினையை தீர்த்திருக்கிறோம். ஒரு பிரச்சினையைத் தீர்க்க இன்னொரு பிரச்சினையை இழுத்துவிடுவது தானே நம் வழக்கம். நிலத்தை அபகரிக்கிறோம் என்று குற்றச்சாட்டுகள்..நிலத்தை நாம் எங்கே அபகரித்தோம்..அது அங்கேயே தானே இருக்கிறது. ஜனங்கள் முன்பு போல் இல்லையடா கண்ணே! நாம் கொடுத்த டி.வி யில் நியூஸ் பார்த்து நமக்கே ஆப்பு வைக்கிறார்கள்.நம் இயக்கத்தையும் என்னையும் பற்றி இணையத்தில் பிரச்சனைகள் எழும்போது அதை மறைக்க மற்றொரு பிரச்சனையை கிளப்பிவிடுவதுதான் ராஜதந்திரம் என்பதை புரிந்துகொள்...என்னை ஏசும் வீணர்கள்..கிராதகர்கள்..என் தமிழ் கேட்காதவர்கள்...என்னை புரிந்து கொண்ட ஈன பிறவிகள்...என்னை அப்படிதான் தூற்றுவார்கள்...நீ அவர்களிடத்தே உன் காதை குடுக்காதே...அவர்கள் என் தொடர்பாய் ஒரு பிரச்சனையை கிளப்பிவிடுவார்களாயின்,நீ அதற்க்கு சற்றும் தொடர்பில்லாத மற்றொரு பிரச்சனையை கிளப்பிவிடு...அவர்கள் கவனத்தை சிதற வை..ஈழம் அழிந்துகொண்டிருக்கும்போது கைகட்டி வாய் பொத்தி அமைதியாய் வேடிக்கை பார்த்தவன் நான்..இப்போது எதற்கு டெசோவை பற்றி பேச வேண்டும்..யோசித்து பார் உடன்பிறப்பே...அரசியல் சூட்சுமம் பயில்...! தனி ஈழமோ தனித் தமிழ்நாடோ..நம் கவனத்தை கல்லாவில் வை!

திராவிடம் பேசு..ஆனால்சத்தமில்லாமல் பேசு..திமுக காரன் என உரக்க சொல்லாதே... நம் கழக தலைவர்களின் தற்போதைய நிலை தமிழகத்திலே என் தெரியுமா உனக்கு...! கொன்னு கைய கட்டி புதர்ல தூக்கி போட்ருவாங்கே..ஆனாகொன்னவன் கெடைக்க மாட்டான்..!! அப்படி ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலை நமக்கு...இப்ப போய் எங்கனா வாய குடுத்து மாட்டிக்காத..! 
முடிந்தவரைக்கும் இணையத்திலேயே போராடு. நடு வீதிக்கு வந்து போராடினால் நடு மண்டையிலேயே நச்சென்று கொட்டுவார்கள். நீ இளிச்சவாயந்தான். எத்தனை வருசமாதான் நீயும் வாய் பர்த்துட்டே உக்காந்திருப்ப. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் தான் இருக்கிறது. ஆனால் உனக்கே தெரியும், என் குடும்பத்திலேயே அதை விட அதிகமாக சீட் கேட்பார்கள் என்று. அதனால் தான் தமிழீழம் கேட்டு டெசோ ஆரம்பித்திருக்கிறேன்.அது இது எது புரோகிராமில் சிரிக்காதவர்கள் கூட இதைக் கேட்டவுடன் வெடிச்சிரிப்பு சிரித்து நம்மை ஏளனப் படுத்துகிறார்கள். ஆனால் நாம் காரியவாதிகள்.

அன்று அண்ணாவின் போர்வாள் என அழைக்கபட்டவன் நான்...ஆனால் இன்றுதமிழகத்து தாய்மார்கள் ஊழல் பெருச்சாளி தாத்தா என எனை காட்டி குழந்தைகளுக்கு சோறூட்டும் அவல நிலை...!  

என் மூத்த மகன் அழகிரி..அன்பானவன்...ஆவேசம் மிகுந்தவன்..ஆத்திரக்காரன்.. சிறுவயதில் அவன் தின்பண்டங்கள் வாங்கி கேட்டு நான் குடுக்கவில்லையே ஆயின் என் மடியில் ஏறி உட்கார்ந்து என் மூக்கில் குத்தி வாங்கி கேட்பான்..பெத்த மனம் மகிழ்ச்சியில் திளைத்த தருணங்களவை...!! ஆனா தறுதலைப்பய மவன் இப்பவும் அதே மாதிரி கேட்டால் என்ன செய்வது?

மற்றொரு புறம் என் ஆசை மகன் ஸ்டாலின்...!

அவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்! எதற்கு என்று கேட்காதே... அதுக்கு அவன் சரிப்பட்டு வர மாட்டான். சந்தேகமாக இருந்ததால் ஸ்டாலினும் தயாளு, அன்பழகன் ஏன் குஷ்புகிட்ட கூட கேட்டுப் பார்த்தான் " நான் எதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன்?" என்று.
எல்லோரும் நான் நினைப்பதையே சொல்லி இருக்கிறார்கள்..." அவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்"னு. நான் எதுக்குடா சரிப்பட்டு வர மாட்டேன் என்று கேட்பதற்காக தமிழ்நாடு முழுக்க வந்து கேட்பான். நீங்களும் " நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாய்!" என்று சொல்லிவிடுங்கள். அறுபது வயதில் இளைஞரணிக்கு ஆள் சேர்ப்பதில் உள்ள கஷ்டம் அவனுக்கு!

இவர்களிருவரும் ஒரு புறம்..மற்றொரு புறம் என் ஆசை மகள் கனிமொழி...! கழகத்திற்கு அழிக்கமுடியா கறையை உருவாக்கிய என் அன்பு மகள்..! தேசிய அரசியலில் ஒரு முக்கிய தலைவரான என்னை காங்கிரஸ் மேலிடம் ஒரு கட்டண கழிவறை காப்பாளரை போல் மதிப்பதற்கு முக்கிய காரணம் என் செல்ல மகள் கனிமொழி...! வெறுமனே சிபிஐ என போட்டு வீட்டிற்கு ஒரு அஞ்சல் அட்டை வந்தால் கூட டெல்லியை அழைத்து என் மகளை விட்ருங்கம்மான்னு அன்னை சோனியா காந்தியை நான் கெஞ்சி கதறுவதற்கு காரனமானவளும் இவளே...! இவள் மேல் படிந்த ஊழல் கரைகளுக்கு இவளில்லை காரணம் ! நானே காரணம்..! தக்காளி அன்னிக்கே கொஞ்சம் கண்ட்ரோலா இருந்துருக்கலாம்..!!

என்னிடம் சொல்வதற்கு உனக்கு ஆயிரம் இருக்கலாம்.அதையெல்லாம் கேட்டிருந்தால் என் நிலைமை ஏன் இப்படி இருக்கப் போகிறது?
ஆனால் என்னிடம் ஒரு வரி உண்டு உனக்கு...!

மக்களுக்கு நல்லது செய்யணும்னு நெனைக்கறவன் தக்காளி புள்ள குட்டி பெத்துக்காதீங்கடா டேய்..!

******************************************************************************************

Article by Veliyoorkaran and Rettaival's