RSS

அழகிய சினிமா -- ஆதாமின்டே மகன் அபு




ஒரு ஹஜ் யாத்திரை.அதற்கான ஒரு வயதான தம்பதிகளின் முயற்சி. நெகட்டிவான எந்த ஒரு விஷயமும் இல்லாமல் மெதுவான வேகத்தில் நகரும் ஆழமான படம் - ஆதாமின்டே மகன் அபு!
சலீம்குமாரின் அபாரமான நடிப்பில் சலீம் அகமது இயக்கி இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படம்.

அபுவும் (சலீம்) ஆய்ஷும்மாவும் (ஸரீனா வஹாப்)  மகனால் கைவிடப்பட்ட வயதான தம்பதிகள். அத்தரும் யுனானி மருந்துகளும் விற்று ஜீவனம் நடத்துகிறார்கள். அபுவிற்கு ஒரே ஒரு கனவு . மனைவியை அழைத்துக் கொண்டு ஹஜ் சென்றுவர வேண்டும். டிராவல்ஸில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து பணம் புரட்ட ஆரம்பிக்கின்றனர். வியாபாரம் நலிந்த நிலையில் பத்து வருடம் சேமித்த பணமும் கூட போதாதென்கிற நிலமை. மாடு,மரம் என அனைத்தையும் விற்று ஹஜ் செல்ல தயாராகிறார்கள். புனித யாத்திரைக்குத் தயாராகி புது  துணிகள் எல்லாம் எடுத்து ஊரில் எல்லாரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்புமுன் மீண்டும் பணப்பிரச்சினை. ஊரிலுள்ள அனைவரும், ட்ராவல் ஏஜன்ட் முதற்கொன்டு உதவிக்கு வருகிறார்கள்.ஆனாலும்..தம்பதிகள் ஹஜ் சென்றார்களா என்பது மீதி கதை.

 மாயா ஜாலங்களோ சென்டிமென்டுகளை நியாயப் படுத்தும் ஃப்ளாஷ்பேக்குகளோ எதுவும் தேவைப்படாத, கதையை அதன் போக்கில் மெதுவாக நகர்த்தும் திரைக்கதை. அதற்கு யானை பலம் சேர்க்கும் மது அம்பாட்டின் ஒளிப்பதிவு. . அதை விட முக்கியமாக , காஸ்டிங். நெடுமுடி வேணு, கலாபவன் மணி என ஓரிரு காட்சிகள் வந்தாலும் எங்குமே நடிப்பது தெரியவில்லை.மற்றும் உறுத்தாத பிண்ணனி இசை. அவார்டு வாங்கும்  படம் என்றாலே காத தூரம் ஓடிவிடும் நம் ரசிக கண்மனிகள் தமிழிலும் இது போன்ற சின்ன பட்ஜெட் ஆச்சர்யங்களை ஆதரித்தால் நமக்கு இன்னும் வெரைட்டியான படங்கள் கிடைக்கும்.

இந்த படத்தில் மிகவும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, ஒளிப்பதிவும் பிண்ணனி இசையும். சமீப காலங்களில் ஒரு மெலோடிராமவுக்கு தமிழிலும் மலையாளத்திலும் இப்படி ஒரு சினிமாட்டொக்ராஃபியை பார்க்க முடிந்ததே இல்லை. மிகையில்லாத , ரொம்பவே யதார்த்தமான நடிப்பு. பாஸ்போர்ட் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் செல்லும் காட்சியில் நடுங்கும் சலீம், தேசிய விருதுக்கு நிச்சயம் வொர்த் தான். மொத்தத்தில் குறை சொல்ல முடியாத ஒரு ஆர்ப்பாட்டமில்லாத அழகிய சினிமா "ஆதாமின்டே மகன் அபு"

உலக சினிமாவை ஈரானிலோ கொரியாவிலோ தேட வேண்டிய அவசியமே இல்லை. அது இங்குதான் நம் லைப்ரரிகளில் தூங்கிகொண்டிருக்கிறது. அதை யார் எழுப்பி வெளியே கொண்டு வருகிறார்கள் என்பது தான் கேள்வி!

ஆதாமின்டே மகன் அபு - Slow but Sound Film!
**********************************************************************************

யுதம்….வேலாயுதம் - An Untold Story(?)


வெளியே வருபவர்கள் கண்ணில் அப்படி ஒரு பரவசம். எதையோ சாதிச்ச திருப்தி! ஒரு புது தன்னம்பிக்கை…இனிமேல் வாழ்க்கைல எந்தக் கஷ்டம் வந்தாலும் எதிர்த்து நிற்கிற தைரியம்!


உலக சரித்திரத்திலேயே இது வரைக்கும் படம் எடுத்தவங்களுக்கு தான் அவார்ட் குடுத்திருக்காங்க…ஆனா படம் பார்க்க வந்தவங்களுக்கு ஆஸ்கார் குடுத்த ஒரே படம் “யுதம்…வேலாயுதம்!”.



இதுவரைக்கும் விஜய் நடிக்காத கதை…

விஜய்க்கு ஒரு தங்கச்சி…சரண்யா மோகன்! தங்கச்சி மேல ரொம்ப பாசம். பாசமலரோடு சேர்ந்து ஊரில் லூட்டிகள் பல அடிக்கிறார்! தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிறது…சென்னைக்கு வருகிறார்! – என்ன ஒரு வித்தியாசமான ஒப்பனிங் பார்த்தீர்களா..?

இன்னொரு ட்ராக்கில் ஜெனிலியா- சென்னையில் ஒரு தைரியமான ஜர்னலிஸ்ட். சென்னை முழுக்க அராஜகம் நடக்கிறது. சர்வ சகஜமாக குண்டு வைக்கிறார்கள். பெண்களை கடத்துகிறார்கள். அதையும் – ஹோம் மினிஸ்டரே செய்கிறார். இந்தக் குற்றங்களை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் நண்பர்களை இழக்கிறார். கத்திக் குத்து வாங்கி ரோட்டில் கிடக்கையில் அகஸ்மாத்தாக அவரைக் குத்தியவர்கள் காரில் குண்டு வெடித்து இறந்து விட அதற்கு காரணம் ஒரு சூப்பர் –ஹீரோ என கப்ஸா விட, ஆறாம் அறிவு கொண்ட தமிழ் ஜனங்கள் எல்லாவற்றையும் நம்புகிறார்கள். தியேட்டரில் நாமும் நம்புகிறோம். சென்னைக்கு வரும் விஜய் தற்செயலாக செய்யும் விஷயங்கள் அவர் தான் சூப்பர் –ஹீரோ வேலாயுதம் என ஜெனிலியா நம்புகிறார். வேலாயுதம் தான் உருவாக்கிய கற்பனை கேரக்டர் என்று விஜய்க்கு எடுத்து சொல்லி…. ..-ஹா…வ் போதும் விடுங்க…..எப்படியும் நீங்க படம் பார்க்கப் போறதில்ல….கதையையெல்லாம் முழுசா சொல்றதுக்கு….யப்பா எனக்கே போர் அடிக்குது பாஸ்.

ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு வருவோம்! ஜெனிலியாவையே ரொம்ப ட்ரையா காண்பிச்ச ஒரே டைரக்டர் இவராதான் இருப்பாரு! –ஹன்ஸிகா கிராமத்துப் பொண்ணாம். என்னைக் காட்ட விடுங்கடான்னு அடம் பிடிக்குது. விஜய்- கேக்கவே வேணாம்! பத்து வருஷமா ஒரே கதைல நடிக்கிறவங்களைக் கூட பார்த்திருக்கோம்…ஆனா பத்து வருஷமா ஒரே படத்துல நடிக்கிற ஒரே –ஹீரோ அண்ணன் தான்! வர வர ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரத்துல கூட சென்னைக்கு ரயிலேறி வந்து ரவுடிகளை பந்தாடுவார் போல. பயம்மா இருக்குங்ணா…!

ரீமேக் ராஜா- சார்..தேசிய விருது வாங்க ட்ரை பண்றதா கேள்விப் பட்டோம். கண்டிப்பா சார்! அப்படியே புலிட்சர் விருது…அமைதிக்கான நோபல் விருதுக்கும் முயற்சி பண்ணீங்கன்னா… நாட்டுல நிறைய மழை பெய்யுமுன்னு டி.வி.ல ரமணன் சொன்னாரு!

படத்துல ஒரே ஆறுதல் சந்தானத்தோட காமெடி! அதிலும் கண்ணாடி முன்ன நின்னு மனசாட்சியோட பேசற ஒரு சீன் போதும். டிக்கெட் பணம் செரிச்சிடுச்சு!

இசை- விஜய் ஆண்டனி! இவரால என்ன பண்ணிட முடியும் பாவம்! அதே கேரக்டர்ஸ்..அதே ஆர்ட்டிஸ்டுங்க…அதே சிச்சுவேஷன்ஸ்…

வேற என்னத்தைங்க சொல்றது! உடைஞ்ச தமிழ் பேசற பாகிஸ்தான் தீவிரவாதிகள்… விஜயகாந்த் பட வில்லன்கள்... ஸ்டீரியோ டைப் ரவுடிகள்..மாமன் பொண்ணுகள்..பாசக்கார தங்கச்சிகள்…அடித்து துவம்சம் செய்து கிளைமாக்ஸில் லெக்சர் எடுக்கும் –ஹீரோக்கள்! ஒரு பாப்கார்னை நூறு ரூபா வைத்து விக்கும் நல்லவர்கள்..தியேட்டரில் கொட்டாவி விட்டுக்கொண்டே பார்க்கும் ஜனங்கள்…பார்க்கிங் டோக்கனை 10 ரூவாயிலிருந்து இருபதாக்கியிருக்கும் அப்பாவிகள்…எதுவும் மாறலை!

ஆனா ஒண்ணே ஒண்ணு மச்சி!

உங்கள்ல நிறைய பேரு ஏழாம் அறிவு பார்க்க்கூடும்…ஆனா ஏழு அறிவு இருக்கிற ஒருத்தனாலதான் வேலாயுதம் பார்க்க முடியும்!
*****************************************************************************************