RSS

வ குவார்ட்டர் கட்டிங் - போதை மிஸ்ஸிங்



ஒரு சாதுவான ஆட்டொ டிரைவர் கொஞ்ச வருஷத்துக்கு முன்னால பம்பாய்ல தாதாவா இருந்திருந்தா என்னாவும் ? - பாட்ஷா!

ஒரு டி.வி. ரிப்போர்ட்டர் ஒரே ஒரு நாள் முதல்வரானா என்னாவும்?- முதல்வன் !

ஒரு சரக்கு பிரியனுக்கு சரக்கடிக்கணும்னு தோணும்போது சரக்குக் கிடைக்கலைன்னா என்னாகும் ?- வ குவார்ட்டர் கட்டிங்.

இந்த ஒன் லைனெல்லாம் கேட்க நல்லாதான் இருக்கு. ஆனா மேட்டர் இல்லையே ராஜா!

கோயமுத்தூர்ல இருந்து மறு நாள் துபாய் ஃபிளைட் பிடிக்க சென்னைக்கு வர்ற ஷிவா ஒரு குவார்ட்டர் கட்டிங் சாப்பிடனும்னு ஆசைப்படறார். மாட்டு டாகடரான தன் வருங்கால மச்சான் எஸ்.பி.சரணோட சென்னை முழுக்க சுத்தறார். தேர்தல் நேராம்ங்கறதால எங்கயுமே சரக்கு கிடைக்க மாட்டேங்குது. அங்க இங்கன்னு எங்க அலைஞ்சாலும் கைக்கு எட்டறது வாய்க்கு எட்டாத கதையா எப்படியோ குவார்ட்டர் கட்டிங் தட்டிப் போயிடுது. கடைசில வில்லனோட சீட்டாடி ஜெயிச்சா சரக்கு கிடைக்கும்னு தெரிஞ்சு ....ஆவ்....போதுங்க ....இதுக்கு மேல சொல்றதுக்கு ஒன்னும் இல்லை. ஏதோ கொஞ்ச நேரம் எண்டெர்டெய்ன்மென்டா இருக்கும்னு படத்துக்குப் போனா கொன்னு குரல்வளையை கடிக்கறானுங்க.

இதுக்கு நடுவுல ஹீரோயின் மேடம் வேற. அச்சு அசல் தமிழ் சினிமா லூசு. வில்லன் என்ன பேசறார்னு அவருக்கே புரியுதோ என்னவோ! ஜி.வி.பிரகாஷ் இசை..ஆயிரத்தில் ஒருவனில் இருந்து காதை கிழிச்சுக்கிட்டே இருக்கான் மனுஷன். இனிமே ஜி.வி. ம்யூசிக்னா கால் கிலோ பஞ்சை கையோட எடுத்துட்டு போறது உத்தமம். ஓரம் போ படத்துல இருந்த ஜாலி இதுல மருந்துக்குக் கூட இல்லை. இரண்டாவது பாதில ஒன்னு ரெண்டு காமெடி இருந்ததாம்..(அப்டின்னா தூங்கிட்டோம் பாஸ்). எஸ்.பி.சரண் மட்டும் கொஞ்சம் பரவாயில்லை.ட்ரெய்லர் மட்டும் பார்த்துப் படம் போகக்கூடாதுன்னு புரிய வச்ச இன்னொரு படம்.

வ குவார்ட்டர் கட்டிங் - அடிச்ச போதையெல்லாம் இறங்கிடும்!

தென்மேற்குப் பருவக்காற்று - Debutant's Breeze!


கொட்டிக்  கிடக்கும் நகரத்து இசைக்கு மத்தியில் எப்பொழுதாவது ஒரு ஆசுவாசம் கிடைக்கும். அநேகமாக அது இளையராஜாவிடமிருந்து கிடைக்கும்.ஆனால் ரஹ்நந்தன் எனும் புது இசை அமைப்பாளரிடமிருந்து ஒரு இளைப்பாறல் கிடைக்குமென எதிர்பார்த்திருக்கவில்லை. பருத்திவீரனில் வரும் " என் உசுருக்குள்ளே..." என ஸ்ரேயா கோஷல் இழுக்கும்போது கொஞ்சம் வெயிலில் பாதாம்கீர் சாப்பிட்டது போல் இருக்குமே...கிட்டத்தட்ட அதே போல ஒரு அனுபவம் தென்மேற்கு பருவக்காற்று பாடல்களைக் கேட்ட பொழுது. இந்தப் படத்தின் விளம்பர ஸ்டில்களைப் பார்த்தபோது ரியாலிட்டி எனும் பெயரில் நம்மை கழுத்தறுக்கப் போகும் இன்னொரு படம் என்றுதான் முடிவு கட்டியிருந்தேன். ஆனால் இந்தப் பட பாடல்களைக் கேட்டபின் வேறு மாதிரியோ என யோசிக்க வைக்கிறது.




சமீப காலமாக கிராமத்துப் படம் என்றாலே...குத்துப் பாட்டும் , திருவிழாக் கரகாட்டப் பாட்டும் தான் என்கிற மாதிரி ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால் அதை மீறி கொஞ்சம் மெலோடியஸாகவும், கொஞ்சம் வெரைட்டியாகவும் அமைந்திருக்கும் ஆல்பம் எனக் கூறலாம்.

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே - விஜய் பிரகாஷ் பாடியிருக்கும் பாடல். முதல் முறை கேட்கும்போதே லயிக்கவைக்கும் ட்யூனும் குரலும். நேற்றிலிருந்து என்னுடைய ஃபேவரைட். வரிகளும் பிரமாதம். இதே பாடலை உன்னிமேனனும் பாடியிருக்கிறார், சோகமாக , ரஹ்மானுக்குப் பாடுவது போல் உருக்கமாக.

 சின்னாங் சின்னாங் காட்டுல - டிபிகல் ஷங்கர் மகாதேவன் பாடல். ரிதம் படத்தில் வரும் தனியே தன்னந்தனியே பாடலுடன் நிறைய ஒத்துப் போகிறது, சத்தங்கள் உட்பட.

கள்ளி கள்ளிச்செடி - ஸ்வேதா மோகன் பாடியிருக்கிறார். அருமையான மெலடி. ஹிட் ஆக நிறய வாய்ப்பிக்கிறது.இதே ட்யூனில் ஹரிணி பாடியிருக்கும் ஆத்தா அடிக்கையிலே குறும்பாடலும் கேட்க சுவாரஸ்யம்.

நன்மைக்கும் தீமைக்கும்- இந்தப் பாடலின் ஆரம்பம் பன்னீர் புஷ்பங்களில் வரும் கோடைகால காற்றே வை நினைவு படுத்துகிறது. ஆனாலும் விஜய் பிரகாஷ் பாடும் பாடல்களில் எல்லாம் அவர் குரல் தனித்துத் தெரிகிறது. பிரகாசமான எதிர்காலம்!!!

ஏடி கள்ளச்சி - ஸ்ரேயா கோஷலுடன் விஜய் பிரகாஷ் பாடியிருக்கும் டூயட். எண்பதுகளில் வந்த இளையராஜா பாடலின் தரத்தை  நெருங்கியிருக்கிறது.

ரஹ்நந்தன் போல ஒரு புதிய இசை அமைப்பாளரிடமிருந்து இத்தகைய பாடல்கள் வருவது அபூர்வம். குத்துப் பாடல்களையும் இரைச்சல் வாத்தியங்களையும் நம்பாமல் ரசனயான பாடல்கள் தருவதென்பது என்னைக் கேட்டால் கொஞ்சம் அதிசயம் தான். இந்தப் பாடல்கள் படத்துக்குப் பொருந்திப் போகுமா என்பது தெரியாது. எதிர்பார்ப்புகள் அதிகமில்லையாதலால் ஹிட் அடிப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம். கள்ளிக்காட்டு கதைக்கு வரிகள் கொடுக்க வைரமுத்து பொருத்தமான தேர்வு.ஆனால் கிராமியப் படங்களுக்கு இதைவிட பிரபலமான பாடல்கள் வைரமுத்து எழுதியிருக்கிறார் என்பதால், விசேஷம் ஒன்றும் இல்லை. அரிவாளைத் தூக்கிக்கொண்டு அலம்பல் பண்ணாமல் உணர்வுப்பூர்வமாக கதை சொன்னால் டைரக்டருக்கு புண்ணியமாகப் போகும்.

தென்மேற்கு பருவக்காற்று - கடலோர கவிதைகள், கருத்தம்மா வரிசையில் இல்லையெனினும்  More than what can be expected from a debutant! 

****************************************************************************************************************************
போனஸ் :

வெளிவராத மிஷ்கினின் நந்தலாலா படத்தில் யேசுதாஸ் இளையராஜா கூட்டணியின்  மயங்க வைக்கும் பாடல்!





 
*******************************************************************************************************************************