எந்திரன் - ஹைடெக் பிரியாணி
உங்களுக்கு ரஜினி ஸ்டைல் பிடிக்குமா? அதுவும் வில்லத்தனம் செய்யும் ரஜினியின் ஸ்டைல்கள்.அப்படியென்றால் உங்களுக்கும் எந்திரன் பிடிக்கும்.அதிகமில்லை ஜென்டில்மேன் படத்தில் எண்பது சதவீதம் ரஜினி.பத்து சதவீதம் ஐஸ்.மீதி பத்து சதவீதமும் ரஜினி தான்.
ஹோம் தியேட்டரைத் தவிர அநேகமாக தமிழ்நாட்டின் எல்லாத் தியேட்டர்களிலும் ரிலீஸான படம், ரஜினி படம், இதெல்லாத்தையும் விட படம் பார்த்தவர்கள் பார்க்காதவர்களை துக்கம் விசாரிக்கும் கொடுமையைத் தவிர்ப்பதற்காகவாவது எந்திரன் டிக்கெட் கிடைக்காதா என்று ஏங்க வைத்துவிட்டார்கள்.
தமிழ் சினிமாவுக்கு ஒரு சாபக்கேடு உள்ளது. சயின்ஸ் ஃபிக்ஷனே எடுத்தாலும் ஐந்து பாடல்கள் வைக்கவேண்டும். ரோபோவாகவே இருந்தாலும் வில்லன்களிடம் சிக்கிகொண்ட கதாநாயகியின் அபலக்குரல் கேட்கும் போது ஓடி வந்து காப்பாற்ற வேண்டும்.கோர்ட்டில் நீதிபதிகளுக்கு உண்மை தெரிந்தவுடன் ஹீரோவுக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்லிவிட வேண்டும்.அதுவும் ஷங்கர் படமென்றால் கிளைமாக்ஸுக்கு கொஞ்சம் முன்னதாக மெகா க்ராஃபிக்ஸில் குரூப் டான்ஸ் ஆடியே தீர வேண்டும்.இந்த அபத்தமான விதிகளுக்கு எந்திரனும் தப்பவில்லை.சொல்லப்போனால் ஷங்கர் படமென்றால் பொதுமக்களிடம் ஹீரோ நல்லவனா கெட்டவனா என்று மீடியா மைக்கை நீட்டிக் கேட்டுக் கொண்டே அலைவார்கள். இதிலும் ரோபோவை அரெஸ்ட் செய்து அந்த மாதிரியெல்லாம் இம்சை பண்ணுவார்கள் என நினைத்திருந்தேன். நல்ல வேளை அப்படி எதுவும் இல்லை.
ஒரு ரோபோ.அதை உருவாக்கிய விஞ்ஞானி வசீகரன்.அவருடைய காதலி சனா. இவர்களைச் சுற்றித்தான் மூன்று மணி நேரமும் நகர்கிறது. ஆனால் அலுக்கவில்லை.எல்லா கலைகளும் கற்பிக்கப்பட்ட (அ) ப்ரோகிராம் செய்யப்பட்ட ஆக்க சக்திக்காக ரோபோவை (சிட்டி) உருவாக்கும் விஞ்ஞானிக்கு அவரது புரஃபஸரே வில்லன் ரூபத்தில் வருகிறார்.சகல வல்லமை படைத்த ரோபோவை உணர்ச்சிகள் இல்லாததால் ஆபத்தானது என்று கூறி பயன்பாட்டுக்கு லாயக்கற்றது என அனுமதி தர மறுத்து விடுகிறார். ஆனால் உள்ளூர சிட்டியின் நியூரல் ஸ்கீம் ஃபார்முலாவை அடைந்து விட விரும்புகிறார். இதனிடையில் வசீகரன் சிட்டிக்கு உணர்ச்சிகள் கற்றுக் கொடுக்க ரோபோ சனாவை விரும்ப ஆரம்பிக்கிறது. காதல் ஜோரில் தன்னிஷ்டப்படி நடந்து கொண்டு சனாவை கவர நினைக்கிறது. எதற்கு வம்பென்று ரோபோவை செயலிழக்க வைத்து குப்பையில் போட்டு விடுகிறார் வசீகரன். இது தான் சமயமென்று ப்ரொஃபஸர் போரா ரோபோவை குப்பையில் இருந்து எடுத்து வந்து அழிவு வேலைகள் செய்யும் 'சிப்'பை பொருத்திவிடுகிறார். ரோபோ அட்டகாசம் செய்து போராவையும் கொன்று சனாவையும் கடத்தி பின் என்னவாகிறது என்பதை பெரிய ஸ்க்ரீனில் பார்த்துக் கொள்ளவும்.
சமர்த்தான ரோபோவை விட வில்லன் ரோபோவாக நொறுக்கி எடுத்திருக்கிறார் ரஜினி. அதுவும் ஐஸ்வர்யாவை மிரட்டும் இடங்களிலும், விஞ்ஞானி ரஜினியை கலாய்க்கும் போதும் ரசிகர்களுக்கு சரவெடி. யாரையாவது வெறுப்பேற்றுவதற்கு, லகலக போல் இனி" மேமேமே..." தான்.குறிப்பாக வில்லன் ரோபோவின் சிரிப்பும் நடையும் , சான்ஸே இல்லை.நல்ல தியேட்டரில் அனுபவியுங்கள்.
கொஞ்ச நாள் கழித்து ஜில்லென்று ஐஷு மாதா. ராவணனில் ஆண்ட்டி மாதிரி இருந்த ஐஷு இதில் நிஜமாகவே ஐஸ்கிரீம்.பாடல்களுக்கு மட்டும் இல்லாமல் படம் முழுக்க வருகிறார்.
சுஜாதாவின் "ஆகாயம்" என்கிற ரேடியோ நாடகத்தில் கொஞ்சம், என் இனிய இயந்திரா , மீண்டும் ஜீனோவில் கொஞ்சம் , ராபின் வில்லியம்ஸின் Bicentennial Man ல் கொஞ்சம் என அள்ளி எடுத்து தமிழ் மசாலா கொஞ்சம் சேர்த்து ரஜினி என்னும் மேஜிக் உப்பை சேர்த்தால் ஷங்கரின் எந்திரன் தயார். ரோபோவை வைத்து என்ன கதை சொன்னாலும் மேற்கூறிய கதைகளின் சாயல் இல்லாமல் எடுக்க முடியாது என்பது வேறு விஷயம். ஃபேன்டசி என்கிற பெயரில் நம்ப முடியாத அளவுக்கு ஸ்டண்ட் காட்சிகள் வைப்பதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை. தொப் தொப்பென்று ஆட்கள் செத்து விழுவதை பார்க்கையில் சமயத்தில் வீடியோ கேம் பார்ப்பது போல இருக்கிறது.முதல் பாதியில் வரும் சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். சந்தானமும் கருணாஸூம் இருக்கிறார்கள்.அவ்வளவே. மொத்தத்தில் ரஜினி ஜெயித்திருக்கிறார்.அதனால் ஷங்கரும் ஜெயித்திருக்கிறார்.அதனாலேயே சன் பிக்சர்ஸும் ஜெயித்திருக்கிறது.
பன்ச் டயலாக் இல்லாமல், வழக்கமான ஷங்கர் க்ளிஷேக்கள் இல்லாமல் ஒரு வித்தியாசமான Genre தொட்டிருப்பதால் எந்த லாஜிக்கும் பார்க்கத் தோன்றவில்லை.ரஜினி படத்தில் லாஜிக்கா? ரஜினிக்குக் கதையே தேவையில்லை.அப்புறம் என்ன லாஜிக்.ரஜினி படத்தை முதல் நாள் பார்க்கிற ஜாலி போதாதா?



