டென்ஸல் வாஷிங்டனின் FLIGHT
FLIGHT என்றொரு படம். டென்ஸல் வாஷிங்டன் நடிப்பில் குடிகாரர்களின் மனசாட்சியை உலுக்கும் படம். விவாகரத்தாகி மனைவி மகனுடன் தொடர்பற்று மனம் போனபடி குடித்தும் குஜாலாகவும் வாழும் விமானி. ரிப்பேர் ஆன விமானத்தை தன் சாதுர்யத்தால் தரையிறக்கி பல பேர் பிழைக்கக் காரணமாயிருக்கிறார். ஒரே நாளில் நேஷனல் ஹீரோ. ஆனால் பழுதடைந்த அந்த விமானத்தை தரை இறக்கும் முன் ரெண்டு பெக் போட்டு விடுகிறார். விசாரணையில் பைலட் குடித்திருப்பது தெரிந்தால் சிக்கல். அசாத்திய திறமை கொண்ட வாஷிங்டனை பைலட் யூனியனும், ஏர்வேஸும் காப்பாற்றப் போராடுகிறார்கள். காயத்தோடும் மனிதர் குடித்துக் கொண்டே இருக்கிறார். இடையில் இன்னொரு போதைக்காரப் பெண்மணியிடம் உன்னதமான தொடர்பு வேறு. குடிப்பழக்கத்தைக் கைவிடும் உளவியல் சிக்கல்கள் அற்புதமாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. விசாரணை துவங்கும் முந்தின இரவு அறையில் பாட்டில்களுடன் டென்ஸல் காண்பிக்கும் போராட்டம் , அசத்தியிருக்கிறார். சுலபமாக ஒரே ஒரு பொய் சொல்லிவிட்டால் கெட்ட பெயரிலிருந்தும் சிறையிலிருந்தும் தப்பித்து விடலாம். அதை டென்ஸல் சொன்னாரா, கிளைமேக்ஸ் என்ன என்பதையும், திரையில் பார்த்துக் கொள்ளவும்.
” Leaving Las Vegas" நிக்கோலஸ் கேஜுக்குப் பிறகு குடிகாரர்களின் வாழ்க்கையை அசலாக வாழ்ந்திருப்பது டென்ஸல் தான். இரண்டு ஆஸ்கார் பரிந்துரைகள் என்கிறார்கள். வென்றால் ஆச்சர்யப் படுவதற்கில்லை. டைரக்ஷன் : ராபர்ட் ஸெமிகிஸ்.(Cast Away, Forrest Gump)
பட்டு : அலெஸான்ட்ரோ பாரிக்கோ - சுகுமாரன்(தமிழில்)
பல்வேறு மொழிகளில் ஏற்கெனவே மொழிபெயர்க்கப்பட்டுத் தற்போது தமிழில் தரை தட்டியிருக்கும் இத்தாலிய நாவல். 1860களில் நடக்கும் ஒரு உன்னதமான காதல் கதை.
ஹெர்வே ஜான்கர் ஒரு பட்டுப் புழு வியாபாரி. ஹெலென் அவனது மனைவி. வருடத்தின் சரி பாதி நாட்கள் வியாபார நிமித்தம் வெளிநாடுகளில் அலைந்து , மிச்ச நாட்களை ஓய்வுடன் கழிக்கும் செல்வந்தன் ஜான்கர். ஒரு முறை ஜப்பான் பயணப்பட நேர்கிறது. அங்கு இவனோடு வியாபாரம் செய்யும் ஹரா கீய் என்பவனது துணைவி(?)யுடன் காதல் பற்றிக் கொள்கிறது. இவனிடம் ஒரு காதல் கடிதம் கொடுக்கிறாள்.ஜப்பானிய பாஷை தெரியாததால் அதன் அர்த்தம் தெரிய துடிக்கிறான். ப்ளான்ச்சி எனும் விபசாரியிடம் உதவி கிடைக்கும் என்று தெரிந்து அவளிடம் செல்கிறான்.
”திரும்பி வா...இல்லையேல் இறந்துவிடுவேன்!” - இது தான் அந்தக் கடிதம்.
அவள் பால் உள்ள ஈர்ப்பில் மீண்டும் மீண்டும் ஜப்பான் பயணமாகிறான். மிகுந்த எதிர்பார்ப்புடன் நான்காவது தடவையாக செல்லும்போது அதிர்ச்சியும் சோகமும் தான் அவனுக்கு விடையாகக் கிடைக்கிறது.நஷ்டப்பட்டுத் திரும்பியதும் மீண்டும் ஒரு கடிதம்,அவன் முகவரிக்கு. அந்தக் கடிதம் என்ன சொல்கிறது என்பதையும் யார் எழுதியது என்பதையும் ஒரு சின்ன ட்விஸ்டோடு முடிக்கிறார் அலெஸ்ஸாண்ட்ரோ பாரிக்கோ.
முழுக்க முழுக்க எமோஷனல் அத்தியாயங்கள். மொழிபெயர்ப்பதில் என்ன அவசரமோ, ஒரு அத்தியாயத்தைக் கூட மனம் ஒன்றிப் படிக்க முடியவில்லை. மரியாதைக்குரிய எழுத்தாளரிடமிருந்து ஒரு டப்பிங் சீரியல் டைப் மொழிபெயர்ப்பை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஆங்கிலத்தை அப்படியே தமிழ்ப் படுத்தியது, வாசிக்க , மிகுந்த சோர்வை ஏற்படுத்துகிறது.
”அவன் வாங்கி விற்றான்.
பட்டுப் புழுக்கள்”
இது சின்ன உதாரணம் தான். இதைப் போன்ற ஏராளமான பத்திகள் உள்ளன. இவ்வகையான மொழிபெயர்ப்புகள் நம்மை மூலக்கதையிலிருந்து மேலும் அந்நியமாக்குகின்றன. கதையின் பிரதானப் புள்ளி ஜான்கருக்கு அந்த ஜப்பானிய பெண்ணிடம் ஏற்படும் Obsession . இனம் புரியாத அந்த மிகுஈர்ப்பு தான் அவனை ஜப்பான் நோக்கிப் பயணப்படவைக்கிறது. ஒவ்வொரு முறை அவனது பயணத்தில் குறுக்கிடும் ஏரியை உள்ளூர்வாசிகள் ஒவ்வொரு பெயரிட்டு அழைக்கிறார்கள். இது போன்று ஏராளமான நுண் தகவல்களை மொழிபெயர்ப்பு கவனப் படுத்த மறுக்கிறது. அது ஒன்று தான் பெரும் குறை. ஒரு மகத்தான குறுநாவல் மனதில் பதிய மொழிபெயர்ப்பே தடையாக இருப்பது சோகம் தான்.
வெளியீடு : காலச்சுவடு விலை : 95 ரூ
நீதி: அட்டையைப் பார்த்து அவசரப்பட்டுப் புஸ்தகம் வாங்கக் கூடாது!