தனித்துவ திரைமொழியின் சாகசம்- த்ரிஷ்யம் மற்றும் லூசியா
14
Feb
ஒரு நடுத்தரவர்க்க குடும்பம் , கொலை விசாரணை ஒன்றை எதிர்கொள்ள நேர்ந்தால் என்ன நடக்கும் என்பதே கதை. இந்த படத்தை மீடியாக்கள் தூக்கிக் கொண்டாடுவதற்கு விஷயம் இருக்கிறது. நம்பகமான கதாபாத்திரங்கள், நம்பக்கூடிய வசனங்கள் ,முற்றிலும் லாஜிக்கே இல்லையே என படம் பார்த்து வீட்டுக்கு வந்தும் தோன்றவிடாதபடி திரைக்கதை. இவையெல்லாவற்றையும் விட அதிகாரஉச்சத்தில் இருப்பவர்களுடன் சாமானியன் ஒருவன் நடத்தும் புத்திசாலிக் காய்நகர்த்தல்கள் -அவனுடைய வெற்றி, தோல்வி மற்றும் கிளைமாக்ஸில் காண்பிக்கும் ஹீரோயிசம்.
நல்ல திரைக்கதையும் மோகன்லாலும் சேர்ந்தால் என்ன நடக்கும் என்பதன் மிகச்சிறந்த உதாரணம் த்ருஷ்யம். தன் மனைவி , குழந்தைகள் என்று ஒவ்வொருவராக விசாரணைக்கு அழைக்கப்படும் போது பயம் கலந்து காட்டும் முக பாவங்களும் சரி, பின்பு இறுதிக் காட்சியில் அலட்சியமாக நடக்கும்போதும் சரி , ஹீரோயிசம் என்றால் கேமெராவைப் பார்த்துப் பேசுவது என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். குறிப்பிடத்தகுந்த இன்னொரு விஷயம் Casting . கான்ஸ்டபிளாக வரும் நடிகரும் , மோகன்லாலின் டீனேஜ் பெண்ணும் அவள் தங்கையும் , கச்சிதம்.
இந்தப் படத்தின் டைரக்டர் ஜீது ஜோசஃபினுடைய கடந்த படமான “ My Boss" சாண்ட்ரா புல்லக் நடித்த ” The Proposal " படத்தின் அப்பட்டமான தழுவல். இவர் இயக்கி ப்ருத்விராஜ் நடித்த த்ரில்லரான “Memories" என்கிற திரைப்படமும் அப்படி ஆகா ஒகோ ரகமல்ல.
இதுவரைக்கும் த்ருஷ்யம் மீது தழுவல், ரீமேக் என எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் சேட்டன்கள் காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.
லூசியா (கன்னடம்) :
எனக்குத் தெரிந்து நான் லீனியர் முறையில் சொல்லப் பட்ட அல்லது நான் பார்த்த முதல் மாநில மொழி திரைப்படம் “ லூசியா”. ஒரிஜினல் திரைக்கதைகளுக்கு கன்னடத்தில் மரியாதை இல்லை என டைரக்டர் புலம்ப, கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் பணம் வசூலித்து வெளியான படம். First Crowd Funded Film. சும்மா சொல்லக்கூடாது, கொடுத்த ஒவ்வொரு காசுக்கும் நியாயம் செய்திருக்கிறார்.
லூசியாவும் ஒரு கொலை விசாரணையில் ஆரம்பிக்கும் கதை. கொலை என்றால் கொலை முயற்சி! இழுத்து மூடப்படும் தியேட்டர் ஒன்றில் டார்ச் அடிப்பவனாக வேலை செய்கிறான் ஹீரோ. பீஸ்ஸா கடை சேல்ஸ் கேர்ளாக ஹீரோயின். ஒரு நாள் ஹீரோ ஒரு மாத்திரை சாப்பிட நேர்கிறது. மிஸ்டு கால் கொடுங்கள் உங்கள் எடையை குறைத்துக் காட்டுகிறோம் டைப் மாத்திரை தான். அந்த மாத்திரையை சாப்பிட்டுக் கனவு காண்கிறான். கனவுகள் இவன் விருப்பம் போலவே வருகின்றன.கனவினுள் இவன் சினிமா ஹீரோ போலவும் நாயகி சினிமா ஹீரோயின் போலவும் இவர்களை சுற்றி இருக்கும் மனிதர்கள் கனவிலும் இவன் விருப்பம் போல வேறு கதாபாத்திரங்களாக வருகிறார்கள். இதிலிருந்து இரண்டு கோணங்களில் பயணிக்கிறது கதை. கூடவே நிகழ்காலத்தில் நடக்கும் விசாரணையும். கடைசியில் நிஜம் எது கனவு எது என்று கொஞ்சம் ட்விஸ்டோடு சுபம்.
இதிலும் திரைக்கதை தான் ஹீரோ. கொஞ்சம் கூட குழப்பாமல் தெளிவாக சொல்லப்பட்ட கதை. நிறைய உலகப்படங்கள் பார்க்கும் அன்பர்களுக்கு வேண்டுமானால் கிளைமாக்ஸ் அத்தனை ட்விஸ்டை தராமல் போகலாம். மற்றபடி திரைக்கதையின் நேர்த்தி பாராட்டத் தக்கதே.
மேலே குறிப்பிட்ட இரண்டு படங்களுக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக தோன்றுகிறது. முதலாவது, தேவையற்ற பாடல்கள் இல்லாதது. படத்தின் போக்கைக் கொஞ்சமும் சிதைக்காமல் ஒன்றோ ரெண்டோ பாடல்கள் தான். இரண்டாவது Casting. கேரக்டர்களுக்கு ஏற்ற நடிகர்கள். பிசிறில்லாத தேர்வு. படம் பார்க்கும் பொழுது கதையுடன் நம்மை நெருக்கமாக உணரச்செய்ய இது ரொம்ப அவசியம். மூன்றாவது திரைக்கதை நேர்த்தி. கிளைக்கதைகள் ஏதுமற்ற, அனாவசிய காமெடிகள் ,டிஷ்யூம் டிஷ்யூம்கள் அற்ற திரை மொழி. இதற்காகவே இந்த இரண்டு படங்களையும் தவறவிடாமல் பாருங்கள்.
தமிழில் ஏதும் வித்தியாசமான படங்கள் இல்லையா என்று ஆராய்ந்ததில் வேற்றுக்கிரகம் பற்றிய படமெல்லாம் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு இரண்டாம் உலகம் பார்க்க நேரிட்டது. வேற்றுக்கிரக ஹீரோ கூட பழங்கள்ளா...விஷமுள்ளா என்று காதல் தோல்வியில் சரக்கடித்துவிட்டு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார். அந்த உலகத்திலிருந்து பாதியில் தப்பித்து ஓடி வந்து விட்டேன்.