RSS

தென்மேற்குப் பருவக்காற்று - Debutant's Breeze!


கொட்டிக்  கிடக்கும் நகரத்து இசைக்கு மத்தியில் எப்பொழுதாவது ஒரு ஆசுவாசம் கிடைக்கும். அநேகமாக அது இளையராஜாவிடமிருந்து கிடைக்கும்.ஆனால் ரஹ்நந்தன் எனும் புது இசை அமைப்பாளரிடமிருந்து ஒரு இளைப்பாறல் கிடைக்குமென எதிர்பார்த்திருக்கவில்லை. பருத்திவீரனில் வரும் " என் உசுருக்குள்ளே..." என ஸ்ரேயா கோஷல் இழுக்கும்போது கொஞ்சம் வெயிலில் பாதாம்கீர் சாப்பிட்டது போல் இருக்குமே...கிட்டத்தட்ட அதே போல ஒரு அனுபவம் தென்மேற்கு பருவக்காற்று பாடல்களைக் கேட்ட பொழுது. இந்தப் படத்தின் விளம்பர ஸ்டில்களைப் பார்த்தபோது ரியாலிட்டி எனும் பெயரில் நம்மை கழுத்தறுக்கப் போகும் இன்னொரு படம் என்றுதான் முடிவு கட்டியிருந்தேன். ஆனால் இந்தப் பட பாடல்களைக் கேட்டபின் வேறு மாதிரியோ என யோசிக்க வைக்கிறது.




சமீப காலமாக கிராமத்துப் படம் என்றாலே...குத்துப் பாட்டும் , திருவிழாக் கரகாட்டப் பாட்டும் தான் என்கிற மாதிரி ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால் அதை மீறி கொஞ்சம் மெலோடியஸாகவும், கொஞ்சம் வெரைட்டியாகவும் அமைந்திருக்கும் ஆல்பம் எனக் கூறலாம்.

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே - விஜய் பிரகாஷ் பாடியிருக்கும் பாடல். முதல் முறை கேட்கும்போதே லயிக்கவைக்கும் ட்யூனும் குரலும். நேற்றிலிருந்து என்னுடைய ஃபேவரைட். வரிகளும் பிரமாதம். இதே பாடலை உன்னிமேனனும் பாடியிருக்கிறார், சோகமாக , ரஹ்மானுக்குப் பாடுவது போல் உருக்கமாக.

 சின்னாங் சின்னாங் காட்டுல - டிபிகல் ஷங்கர் மகாதேவன் பாடல். ரிதம் படத்தில் வரும் தனியே தன்னந்தனியே பாடலுடன் நிறைய ஒத்துப் போகிறது, சத்தங்கள் உட்பட.

கள்ளி கள்ளிச்செடி - ஸ்வேதா மோகன் பாடியிருக்கிறார். அருமையான மெலடி. ஹிட் ஆக நிறய வாய்ப்பிக்கிறது.இதே ட்யூனில் ஹரிணி பாடியிருக்கும் ஆத்தா அடிக்கையிலே குறும்பாடலும் கேட்க சுவாரஸ்யம்.

நன்மைக்கும் தீமைக்கும்- இந்தப் பாடலின் ஆரம்பம் பன்னீர் புஷ்பங்களில் வரும் கோடைகால காற்றே வை நினைவு படுத்துகிறது. ஆனாலும் விஜய் பிரகாஷ் பாடும் பாடல்களில் எல்லாம் அவர் குரல் தனித்துத் தெரிகிறது. பிரகாசமான எதிர்காலம்!!!

ஏடி கள்ளச்சி - ஸ்ரேயா கோஷலுடன் விஜய் பிரகாஷ் பாடியிருக்கும் டூயட். எண்பதுகளில் வந்த இளையராஜா பாடலின் தரத்தை  நெருங்கியிருக்கிறது.

ரஹ்நந்தன் போல ஒரு புதிய இசை அமைப்பாளரிடமிருந்து இத்தகைய பாடல்கள் வருவது அபூர்வம். குத்துப் பாடல்களையும் இரைச்சல் வாத்தியங்களையும் நம்பாமல் ரசனயான பாடல்கள் தருவதென்பது என்னைக் கேட்டால் கொஞ்சம் அதிசயம் தான். இந்தப் பாடல்கள் படத்துக்குப் பொருந்திப் போகுமா என்பது தெரியாது. எதிர்பார்ப்புகள் அதிகமில்லையாதலால் ஹிட் அடிப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம். கள்ளிக்காட்டு கதைக்கு வரிகள் கொடுக்க வைரமுத்து பொருத்தமான தேர்வு.ஆனால் கிராமியப் படங்களுக்கு இதைவிட பிரபலமான பாடல்கள் வைரமுத்து எழுதியிருக்கிறார் என்பதால், விசேஷம் ஒன்றும் இல்லை. அரிவாளைத் தூக்கிக்கொண்டு அலம்பல் பண்ணாமல் உணர்வுப்பூர்வமாக கதை சொன்னால் டைரக்டருக்கு புண்ணியமாகப் போகும்.

தென்மேற்கு பருவக்காற்று - கடலோர கவிதைகள், கருத்தம்மா வரிசையில் இல்லையெனினும்  More than what can be expected from a debutant! 

****************************************************************************************************************************
போனஸ் :

வெளிவராத மிஷ்கினின் நந்தலாலா படத்தில் யேசுதாஸ் இளையராஜா கூட்டணியின்  மயங்க வைக்கும் பாடல்!





 
*******************************************************************************************************************************

எந்திரன் - ஹைடெக் பிரியாணி



உங்களுக்கு ரஜினி ஸ்டைல் பிடிக்குமா? அதுவும் வில்லத்தனம் செய்யும் ரஜினியின் ஸ்டைல்கள்.அப்படியென்றால் உங்களுக்கும் எந்திரன் பிடிக்கும்.அதிகமில்லை ஜென்டில்மேன் படத்தில் எண்பது சதவீதம் ரஜினி.பத்து சதவீதம் ஐஸ்.மீதி பத்து சதவீதமும் ரஜினி தான். 

ஹோம் தியேட்டரைத் தவிர அநேகமாக தமிழ்நாட்டின் எல்லாத் தியேட்டர்களிலும் ரிலீஸான படம், ரஜினி படம், இதெல்லாத்தையும் விட படம் பார்த்தவர்கள்  பார்க்காதவர்களை துக்கம் விசாரிக்கும் கொடுமையைத் தவிர்ப்பதற்காகவாவது எந்திரன் டிக்கெட் கிடைக்காதா என்று ஏங்க வைத்துவிட்டார்கள்.

தமிழ் சினிமாவுக்கு ஒரு சாபக்கேடு உள்ளது. சயின்ஸ் ஃபிக்ஷனே எடுத்தாலும் ஐந்து பாடல்கள் வைக்கவேண்டும். ரோபோவாகவே இருந்தாலும் வில்லன்களிடம் சிக்கிகொண்ட கதாநாயகியின் அபலக்குரல் கேட்கும் போது ஓடி வந்து காப்பாற்ற வேண்டும்.கோர்ட்டில் நீதிபதிகளுக்கு உண்மை தெரிந்தவுடன் ஹீரோவுக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்லிவிட வேண்டும்.அதுவும் ஷங்கர் படமென்றால் கிளைமாக்ஸுக்கு கொஞ்சம் முன்னதாக மெகா க்ராஃபிக்ஸில் குரூப் டான்ஸ் ஆடியே தீர வேண்டும்.இந்த அபத்தமான விதிகளுக்கு எந்திரனும் தப்பவில்லை.சொல்லப்போனால் ஷங்கர் படமென்றால் பொதுமக்களிடம் ஹீரோ நல்லவனா கெட்டவனா என்று மீடியா மைக்கை நீட்டிக் கேட்டுக் கொண்டே அலைவார்கள். இதிலும் ரோபோவை அரெஸ்ட் செய்து அந்த மாதிரியெல்லாம் இம்சை பண்ணுவார்கள் என நினைத்திருந்தேன். நல்ல வேளை அப்படி எதுவும் இல்லை.

ஒரு ரோபோ.அதை உருவாக்கிய விஞ்ஞானி வசீகரன்.அவருடைய காதலி சனா. இவர்களைச் சுற்றித்தான் மூன்று மணி நேரமும் நகர்கிறது. ஆனால் அலுக்கவில்லை.எல்லா கலைகளும் கற்பிக்கப்பட்ட (அ) ப்ரோகிராம் செய்யப்பட்ட ஆக்க சக்திக்காக ரோபோவை (சிட்டி) உருவாக்கும் விஞ்ஞானிக்கு அவரது புரஃபஸரே வில்லன் ரூபத்தில் வருகிறார்.சகல வல்லமை படைத்த ரோபோவை உணர்ச்சிகள் இல்லாததால் ஆபத்தானது என்று கூறி பயன்பாட்டுக்கு லாயக்கற்றது என அனுமதி தர மறுத்து விடுகிறார். ஆனால் உள்ளூர சிட்டியின் நியூரல் ஸ்கீம் ஃபார்முலாவை அடைந்து விட விரும்புகிறார். இதனிடையில் வசீகரன் சிட்டிக்கு உணர்ச்சிகள் கற்றுக் கொடுக்க ரோபோ சனாவை விரும்ப ஆரம்பிக்கிறது. காதல் ஜோரில் தன்னிஷ்டப்படி நடந்து கொண்டு சனாவை கவர நினைக்கிறது. எதற்கு வம்பென்று ரோபோவை செயலிழக்க வைத்து குப்பையில் போட்டு விடுகிறார் வசீகரன். இது தான் சமயமென்று ப்ரொஃபஸர் போரா ரோபோவை குப்பையில் இருந்து எடுத்து வந்து அழிவு வேலைகள் செய்யும் 'சிப்'பை பொருத்திவிடுகிறார். ரோபோ அட்டகாசம் செய்து போராவையும் கொன்று சனாவையும் கடத்தி பின் என்னவாகிறது என்பதை பெரிய ஸ்க்ரீனில் பார்த்துக் கொள்ளவும். 



சமர்த்தான ரோபோவை விட வில்லன் ரோபோவாக நொறுக்கி எடுத்திருக்கிறார் ரஜினி. அதுவும் ஐஸ்வர்யாவை மிரட்டும் இடங்களிலும், விஞ்ஞானி ரஜினியை கலாய்க்கும் போதும் ரசிகர்களுக்கு சரவெடி. யாரையாவது வெறுப்பேற்றுவதற்கு,  லகலக போல் இனி" மேமேமே..." தான்.குறிப்பாக வில்லன் ரோபோவின் சிரிப்பும் நடையும் , சான்ஸே இல்லை.நல்ல தியேட்டரில் அனுபவியுங்கள்.

கொஞ்ச நாள் கழித்து ஜில்லென்று ஐஷு மாதா. ராவணனில் ஆண்ட்டி மாதிரி இருந்த ஐஷு இதில் நிஜமாகவே ஐஸ்கிரீம்.பாடல்களுக்கு மட்டும் இல்லாமல் படம் முழுக்க வருகிறார். 

சுஜாதாவின் "ஆகாயம்" என்கிற ரேடியோ நாடகத்தில் கொஞ்சம், என் இனிய இயந்திரா , மீண்டும் ஜீனோவில் கொஞ்சம் , ராபின் வில்லியம்ஸின் Bicentennial Man ல் கொஞ்சம் என அள்ளி எடுத்து தமிழ் மசாலா கொஞ்சம் சேர்த்து ரஜினி என்னும் மேஜிக் உப்பை சேர்த்தால் ஷங்கரின் எந்திரன் தயார். ரோபோவை வைத்து என்ன கதை சொன்னாலும் மேற்கூறிய கதைகளின் சாயல் இல்லாமல் எடுக்க முடியாது என்பது வேறு விஷயம். ஃபேன்டசி என்கிற பெயரில் நம்ப முடியாத அளவுக்கு ஸ்டண்ட் காட்சிகள் வைப்பதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை. தொப் தொப்பென்று ஆட்கள் செத்து விழுவதை பார்க்கையில்  சமயத்தில் வீடியோ கேம் பார்ப்பது போல இருக்கிறது.முதல் பாதியில் வரும் சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். சந்தானமும் கருணாஸூம் இருக்கிறார்கள்.அவ்வளவே. மொத்தத்தில் ரஜினி ஜெயித்திருக்கிறார்.அதனால் ஷங்கரும் ஜெயித்திருக்கிறார்.அதனாலேயே சன் பிக்சர்ஸும் ஜெயித்திருக்கிறது. 

பன்ச் டயலாக் இல்லாமல், வழக்கமான ஷங்கர் க்ளிஷேக்கள் இல்லாமல் ஒரு வித்தியாசமான Genre   தொட்டிருப்பதால் எந்த லாஜிக்கும் பார்க்கத் தோன்றவில்லை.ரஜினி படத்தில் லாஜிக்கா? ரஜினிக்குக் கதையே தேவையில்லை.அப்புறம் என்ன லாஜிக்.ரஜினி படத்தை முதல் நாள் பார்க்கிற ஜாலி போதாதா?