RSS

ராவணன் பாடல்கள் மற்றும் மணிரத்னத்துக்கு ஒரு வார்த்தை!


 
மீண்டும் மணிரத்னம்..ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் வைரமுத்து! இந்த மூன்று பெயர்களைப் போஸ்டரில் பார்த்ததும்  பாடல்கள் வெளியீட்டன்று காலை முதல் வேலையாக கீஷ்டு கானத்தில் போய் காஸட் வாங்கி வந்து தீரத் தீர கேட்ட ஞாபகங்கள் வந்து தொலைக்கிறது. பதினைந்து வருடங்கள் கழித்தும் எதிர்பார்க்க வைக்கும் கூட்டணி என்பதே சின்ன ஆச்சரியம் தான். ஏனோ சமீபத்திய வரவான ராவணனில்  சின்னதாக ஒரு சலிப்பு எட்டிப்பார்ப்பது போல் முதலில் தோன்றியது. ஆனால் எப்போதும் போல கேட்க கேட்க வாக்மேன் முழுக்க ராவணனின் ஆக்கிரமிப்பு தான்!

 ரஹ்மான் லேசான முனகல் ஹம்மிங்கோடு ஆரம்பித்து வைக்க தொடர்ந்து வீரா வீரா என அதிரடியாக  விஜய் பிரகாஷுக்கு ஒரு பாடல். மனுஷனை இன்னும் கொஞ்ச காலம் எல்லோரும் குத்தகைக்கு  எடுத்து விடுவார்கள். காட்டு சிறுக்கி என அனுராதாவும் ஷங்கர் மகாதேவனும் பாடுவதை விட ஹிந்தியில் ரேகா பரத்வாஜும் ஜாவித்தும் பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள்.





 ஒரே ஒரு மெலடியான கள்வரே பாடலில் ஷ்ரேயா கோஷலுடன் பார்ட்னர்ஷிப் போட்டிருப்பது ரஹ்மான் அல்ல...வைரமுத்து. "வலி மிகும் இடங்கள்...வலி மிகா இடங்கள்" என்கிற வரியில் தன் சமகால பாடலாசிரியர்களுக்கு மீண்டும் ஒரு முறை ட்யூஷன் எடுத்திருக்கிறார்.அதிலும் ஷ்ரேயாவின் குரல் அக்னி வெயில் ஜிகர்தண்டா. இந்த ஆல்பத்தில் க்றிஸ் கெய்ல் சிக்ஸர் போல ஆடியன்ஸ் மத்தியில் விழுவது கார்த்திக் பாடியிருக்கும் உசுரே போகுதே பாடல்தான். இப்போதே நான் அழைக்கும் பலரின் மொபைல் காலர் ட்யூன் இந்த பாடல் தான். பாய்ஸ் படத்தில் வரும் சென்ட்ரல் ஜெயிலே பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாவிட்டாலும் பாடல் வரிகளால் மனதில் நிற்கிறது ! கோடு போட்டா மற்றும் கெடாக்கறி பாடலை எல்லாம் நன்றாக படமாக்கியிருப்பார்கள் என்று நம்புவோமாக.

வைரமுத்துவுக்கு :- கலைஞருடன் தொலைபேசுவதை பெருமையடிப்பதை விட்டு கள்வரே மாதிரி நாலு பாடல் எழுதுங்கள் ! புண்ணியமாகப் போகும். 

ரஹ்மானுக்கு :- என்னென்னவோ பரீட்சார்த்த முயற்சியெல்லாம் செய்கிறீர்கள். பலவிதமான சத்தங்களை அறிமுகம் செய்கிறீர்கள்! நல்லது தான்...ஆனால் உங்களுக்குப் பிறகு வந்த ஹாரிஸ் ஜெயராஜ்,யுவன் பாடல்களில் கூட சத்தங்கள் குறைந்து பாடல் கேட்கிறது.ஆனால் நீங்கள் இன்னும் பாடல் வரிகளை முழுவதுமாக ரசிக்க விட மாட்டேன் என்கிறீர்கள். ஒரு வேளை இது தான் உங்கள் சக்ஸஸ் ஃபார்முலாவா?

மணிரத்னத்துக்கு : எப்படிப்பட்ட பாடல்களையும்  படமாக்குவதில் தமிழிலேயே நீங்கள் தான் கில்லாடி. இந்த மாதிரி ஆல்பம் உங்கள் கையில் கிடைத்தால் சும்மாவா விடப் போகிறீர்கள். ஆனால்  இந்த தலைமுறை ரசிகர்கள் விரும்புவது உங்கள் இயக்கத்தில் "The Pianist" , "A Beautiful Mind"மாதிரியான படங்களை. ராவணன் போன்ற படங்களில் கூட இன்னும் எத்தனை காலத்துக்கு உங்கள் இயக்கத்தில் டூயட்டுகளையே பார்த்துக் கொண்டிருப்பது?

  
ரசிகர்களுக்கு : பயப்படாதீர்கள்! ராவணன் பாடல்கள் தமிழ் "குரு" போல டப்பிங் பாடல்கள் இல்லை.தைரியமாக கேட்கலாம் ,  தமிழிலும்!
*************************************************************************************

யாவுமாலான இவ்வுலகம்



வேதியியல் படிப்பித்தவர்  அணுக்களாலானது என்றார்

இயற்பியல் ஆசிரியர்  கதிர்களாலானது என்றார்

தமிழ் கற்பித்தவர்  வார்த்தைகளாலானது என்றார்

வரலாறு பயிற்றுவித்தவர்  சம்பவங்களானது என்றார்

புவியியல் போதித்தவர் கற்களாலானது என்றார்

கணிதம் கற்பித்தவர் எண்களாலானது என்றார்

தத்துவம் பேசியவர்  எண்ணங்களாலானது என்றார்

நாடகம் கற்பித்தவர் காட்சிகளாலானது எனவும்

மதத்தைப் போதித்தவர் விதியாலனதெனவும் உரைத்தனர்.

நேற்றிரவு உலகம் கனவில் வந்தது.

எதனாலானதென கேட்டபொழுது

நகைத்தபடி கனவிலிருந்து அகன்றது உலகம்.

யாவுமாலான இவ்வுலகம் பொய்களாலும் ஆனது

*************************************************************************

K'naan - Waving Flag - Road to South Africa!


மிகப் பெரிய அரங்கத்தின் அலறும் ஸ்பீக்கர்களில் வீறிட்டு வரும் இசைக் கோர்வைகளில் தன்னை மறந்து ஜன்னி கண்டு ஆனந்தக் கண்ணீர் விடும் ரசிகர்களைக் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். பலநூறு டெசிபல் சத்தத்தில் இரையும் டிரம்ஸ்களிலும் கிடார்களிலும் வரும் இசையில் அப்படி என்னதான் இருக்கிறதென அவ்வப்போது யோசித்து யோசித்து தோற்றிருக்கிறேன். சில நாட்கள் முன்பு ஒரு பின்னிரவில் "Wavin' Flag" என்ற பாடல் கேட்ட போது தான் புரிந்தது , இசைக்கு வறண்ட பாலைவனத்திலும் பனிக்கட்டிகளை உருவாக்கும் சக்தி இருக்கிறதென.நமது பாரம்பரிய இசை என்பது மாஸ் அப்பீல் வகைக்குள் அடங்காது.கொஞ்சம் விதிகளை மீறாமல் தான் விளையாடுவார்கள்.விதிகளையெல்லாம் துவம்சம் செய்து மக்களை வசியப் படுத்தும் மாஸ் அப்பீல் பாடல்களிலும் கூட எப்பொழுதேனும் ஒரு ஜீவன் இருக்கும்.மேலும் ஜனங்களின் வலியை சொல்லும் பாடல் விதிகளையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும். குறிப்பாக இந்த "Wavin' Flag"என்ற பாடலின் வரிகள் , பின்னிரவு கேட்டீர்களானால் உங்கள் சில மணி நேர தூக்கத்தை ஒத்திப் போட வைக்க வல்லது.


பொதுவாகவே ரஹ்மானின் வருகைக்குப் பிறகு ஆஃப்ரோ பீட் இசையெல்லாம் கூட அவ்வளவு அன்னியமாகத் தெரிவதில்லை. உலகமயமாக்கம் சாதாரண இசை ரசிகர்களின் ரசனையில் கூட புகுந்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது.ம்யூசிக் கான்சர்ட்டுகளில் கேட்பதை விட ஒரு விளையாட்டு நிகழ்வின் ஓபனிங் செரிமனிக்காக அமைக்கப் படும் இசையை கேட்பது ஒன்றும் பிரமாதமானதாக இருக்காது. அங்கே விளையாட்டு பற்றிய உற்சாகமும் ஆர்வமுமே மிகுந்திருக்கும்.ஆனால் அதையும் தாண்டி சில பாடல்கள் நம்மைக் கட்டிப் போட்டு முணுமுணுக்க வைத்து விடும், ரிக்கி மார்ட்டினின் Cup of Life போல , க்வீனின் We will Rock you போல. இன்றைக்கும் ஒரு ஸ்டேடியத்தில் நீங்கள் பல்லாயிரக்கணக்கான ரசிர்களுடன் சேர்ந்து வீ வில் வீ வில் ராக் யூ என்று கத்திப் பாருங்கள். நிச்சயமாக ஜிவ்வென்றிருக்கும்.

மேலே குறிப்பிட்டது கே'னான் வார்சேம் எனும் சோமாலிய - கனடிய ராப் பாடகரின் பாடல் . இந்த பாடலின் ஸ்பெஷல் இதன் உலகத்தன்மை. உலகத்தன்மை என்றால் அமெரிக்கதன்மையுடன் இந்தியத்தன்மையும் ஆஸ்திரேலிய , ஐரோப்பிய ஆப்பிரிக்கத்தன்மையுடன் கூடிய ஒரு உலகத்தன்மை. இந்தப் பாடலில் வலி இருக்கிறது ;எதிர்பார்ப்பு இருக்கிறது;கிண்டலுடன் சேர்ந்த ஏதோ ஒரு மறுக்கப்பட்ட உயிரின் கதறல் இருக்கிறது. எழுநூறு பக்க நாவல்களில் வரையறுக்க முடியாத வலியை பதினைந்து வரிகளில் இசையால் இவ்வளவு அழகாக கதறி அழ முடியும் போல.

ஆனால் இதே பாடலை வரிகளில் லேசான மாற்றங்களுடன் செலிப்ரேஷன் மிக்ஸ் என உலகக்கோப்பை கால்பந்துக்கான தீம் பாடலாகக் கேட்கையில் அவ்வளவு உற்சாகமாக இருக்கிறது. ஒரே பாடல் எப்படி சோகத்தையும் சந்தோஷத்தையும் தர முடிகிறது? யோசித்துப் பார்த்தால் நம் வாழ்க்கை முறைக்கும் செயல்பாடுகளுக்கும் சோமாலியா போன்ற ஒரு தேசத்தின் வறுமைக்கும் சச்சரவுகளுக்கும் நூலிழையில் ஒரு தொடர்பு இருக்கிறது.அந்த தொடர்புகளை இசை வெளிப்படுத்துகிறது. இசைக்கு ஒரே ஒரு பாஷைதான் இருக்கிறதென மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது.அது தான் -  வாழ்க்கை!

அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியின் தொடக்க விழாவில் கே'னான் வார்சேம் இந்தப் பாடலை பாடவிருக்கிறார். நீங்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்தால் நேரில் அனுபவியுங்கள். இல்லையெனில் செட் மேக்ஸிலாவது தவற விடாதீர்கள்.

K'naan's Waving Flag



Celebration Mix