RSS

இப்படிக்கு சைந்தவி, W/O சிபி ( இன்னும் சில நூறு ஜென்மங்களுக்கு)




சைந்தவி புருஷனுக்கு,

சைந்தவி எழுதுவது.வழக்கமா எல்லாக் கடிதத்துலையும் எழுதிக்கொள்வதுன்னு தான் போடுவேன். ஏன்னா இது வரைக்கும் எந்தக் கடிதத்தையுமே உன் கிட்ட காண்பிச்சதில்ல. எழுதி எழுதி கிழிச்சுப்போட்டு மனசுக்குள்ள சிரிச்சிக்கிட்டே அழறதுலையும் அப்படி ஒரு அல்ப சந்தோஷம்! தவிர நான் எழுதினா நீ கிண்டல் பண்ணி அழவைப்பேன்னும் தெரியும்!

என்னை எப்படிடா கண்டுபுடிச்ச நீ? மேட்சிங்கா டிரஸ் கூட பண்ணிக்கத் தெரியாத என்னை எப்படியெல்லாம் நீ மாத்தின தெரியுமா? நீ வந்து பொன்னு பார்த்துட்டுப் போன பின்னாடி தான் எனக்கே தெரியும் நானும் கொஞ்சம் அழகாதான் இருந்திருக்கேன்னு. பொன்னுங்களோட உள்ளுணர்வு ஒன்னு இருக்கு. கடவுளைவிட சரியா சொல்லிடும். உன்னைப் பார்த்தப்போ தோணுச்சுடா அது, நான் இந்த உலகத்துலயே ரொம்ப அதிர்ஷ்டசாலின்னு! அது பொய்யே ஆகலை , இந்த நிமிஷம் வரைக்கும்!

கல்யாணம் ஆன புதுசுல நான் எப்ப சண்டை போட வந்தாலும் விட்டுக் கொடுத்து விட்டுக் கொடுத்து என்னை ஜெயிச்சிருக்க.என் மேல உனக்குக் கோபமே வராதாடா திருடா! உன் கூட ஒரு சண்டையாவது போடனும்னு மல்லுக்கட்டி நின்னப்பக் கூட பதிலுக்கு முத்தமாக் கொடுத்து என்னை காலி பண்ணிட்டியேடா ராஸ்கல்! என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் எங்க எங்கயோ ஃபாரின்ல செட்டில் ஆனாங்க. ஆனா சொர்க்கத்துல செட்டில் ஆனது நான் மட்டும் தான்னு நினைக்கிறேன்!

எல்லாப் பொண்ணுங்களைப் போல பையன் தான் பொறக்கனும்னு பிடிவாதமா இருந்தேன். எல்லாப் புருஷனுங்க மாதிரி பொன்னுதான் பொறக்கனும்னு நீயும் பிடிவாதமா இருந்த. நான் தோத்துப் போனாலும் உன்னை ஏமாத்தலைடா! பாப்பு வந்தப்புறம் நீ கொஞ்சம் மாறிதான் போயிட்ட. வேலை முடிஞ்சு வந்ததும் முன்னெல்லாம் என் புடவைல முகத்தை துடைச்சிப்ப , வேர்வை இல்லைன்னாலும்.. பாப்பு வந்தப்புறம் வேலை முடிஞ்சு வந்ததும் நேரா அவளைக் கொஞ்சப் போயிடுவ! என் பொண்ணா இருந்தாலும் அவ மேல ஒரு சின்ன பொறாமையே இருந்துச்சு. இதை நான் என் அம்மக்கிட்ட சொன்னப்போ "ரெண்டு குழந்தைகளை வச்சு உன் புருஷன் எப்படி சமாளிக்கிறார்?"னு விஷமத்தனமா கேட்டா. அப்பாவும் பொன்னும் சேந்து கொஞ்ச நஞ்ச லூட்டியாடா அடிச்சீங்க. நீ ஆஃபீஸை கட் அடிச்சுட்டு அவளை ஸ்கூலை கட் அடிக்க வச்சுட்டு ரெண்டு பேரும் சினிமா பார்க்கப் போனீங்களே..எங்கயாவது உலகத்துல இந்தக் கூத்து நடக்குமா?

சமையல் பண்ணும்போது எத்தனை தடவை பின்னாடி பூனை மாதிரி வந்து இடுப்பைக் கிள்ளி சாம்பாரைக் கொட்ட வச்சுருப்ப! எத்தனை தடவ  சமையல்கட்டை  வெக்கப்பட வச்சிருப்ப! ஆனா அதுக்கெல்லாம் பதிலுக்கு உன்னை எப்படி பழி வாங்கிருக்கேன் தெரியுமா? பட்டுப்புடவை சரசரக்க மல்லிகைப்பூவோட உன் முன்னால குறுக்கும் நெடுக்கும் போய் இன்னிக்கு "அது" வேணாம்னு சொல்றப்போ உன் மூஞ்சி ஒரு தினுசா போகும் பாரு...அடடா...அதுக்காகவே இன்னும் நூறு குழந்தை பெத்துக்கலாம் போல இருக்கும். நீயும் என்னை சும்மாவா விட்ட? அதுக்காக பாவி என்னை எத்தனை முறை கெஞ்ச விட்டுருப்ப.. ராட்சஸா!

ஆமா ஹனி மூன்ல எனக்கு ஒரு ஒரு கிஃப்ட் கொடுத்தியே... இதுவரைக்கும் எந்த புருஷனாவது தன் புது பொண்டாட்டிக்கு அப்படி ஒரு கிஃப்ட் கொடுத்திருப்பான்னு நினைக்கிற? அதை பிரிச்சுப் பார்த்ததும் என் முகத்துல வந்த நூறு கிலோ வெக்கம் என்னை விட்டு போறதுக்கு மூனு மாசம் ஆச்சுடா! நம்ம பாப்புவுக்கு விஷ்வா அந்த மாதிரி ஒரு கிஃப்ட் கொடுத்திருப்பானாடா. எனக்கு கிடைச்ச மாதிரி அவளுக்கும் அவன் சிபியா இருப்பானா ... தெரியல.. !

ஆரம்பத்துல நீ எங்கப்பாவை கிண்டல் பண்ணப்பயெல்லாம் எனக்கு அழுகையா வரும். கொஞ்ச நாள் கழிச்சு லேசா சிரிப்பு வந்தது..அப்புறமா பாப்பு கிட்ட அவ புருஷன் உன்னைக் கை காண்பிச்சு சிர்ச்சுக்கிட்டிருந்தப்போ நீ பார்த்துக்கிட்டுருந்த பார்வைல தான் எவ்வளோ பெருமிதம். எங்கப்பாவுக்கும் அன்னிக்கு அப்படிதானே இருந்திருக்கும். சே! அதுக்குப் போய் அழுதிருக்கேனே! யோசிச்சுப் பார்த்தா... கல்யாணம் ஆகி ஒரு நாலஞ்சு வருஷத்துல என்னை சேர்ந்தவங்க எல்லாரும் எனக்கு அன்னியமா தெரிய ஆரம்பிச்சாங்க. அந்தளவுக்கு நீ என்னை ஆக்கிரமிச்சிருந்த! நான் உனக்கு அப்படி என்னடா பண்ணினேன்? எதுக்காகடா என் மேல அவ்வளோ பாசத்தைக் கொட்டுன நீ? உலகத்துல இவ்வளவு சந்தோஷமா ஒரு மனைவி இருப்பாளாடா?

இத்தனையும் இப்ப எதுக்குன்னு கேக்கறியா?முதல்லயே சொன்னேனே "உள்ளுணர்வு". இதுவரைக்கும் என் உள்ளுணர்வு தவறினதே இல்லை. எனக்கு என்னமோ பயமாவே இருக்குடா. உனக்கு ஏதோ ஆயிட்டுருக்கு.எதையோ என் கிட்ட இருந்து மறைக்கிற. எதை என்கிட்ட இருந்து மறைக்க நினைச்சாலும் உன் கண்ணு காட்டிக் கொடுத்துடும். இன்னைக்குக் காலைல இருந்து உன் கண்ணு என் கிட்ட பொய் சொல்லத் திணறுது. உனக்கு ஏதாவது ஒன்னுன்னா அதுக்கப்புறம் இந்த உலகம் எப்படி சுத்தும்ங்கிறதை பார்க்கிற தைரியம் எனக்கில்லை. எப்பவும் கிழிச்சுப் போடுற லெட்டரை இந்த முறை கிழிச்சுப் போடணும்னு தோணலை.

இன்னும் என்னென்னவோ எழுத தோனுதுடா... நாம போன ஆல் இண்டியா டூர்..ஒரு தடவை நீ ரேடியோல ப்ரோகிராம் பண்ணது... நான் டைஃபாய்ட்ல கிடந்தது.. ஏதேதோ ஞாபகத்துக்கு வருது..அதெல்லாம் அப்படியே எழுதினா , அழுது லெட்டர் ஈரமாகிடும்.வேண்டாம்!

இப்போ என்னோட இந்த நினைவுகளை டேபிள் மேல வச்சிடறேன். ஒரு வேளை நாளைக்கு உனக்கு இதை படிக்கிற சந்தர்ப்பம் இருந்து என்னைக் கிண்டல் பண்ணாலும் பரவாயில்லை.

இப்போ உன்னைக் கட்டிப்புடிச்சுத் தூங்கணும் போல இருக்கு. உன்கிட்ட சொன்னா "போடி கெழவி..."ன்னு கிண்டல் பண்ணுவ. அதனால ஹனிமூன்ல நீ எனக்குக் குடுத்த கிஃப்டை கட்டிப் புடிச்சுத் தூங்க போறேன்.

இப்படிக்கு

உன் செல்ல பொண்டாட்டி

சைந்தவி

**************************************************************************************

இன்றைக்கு தான் எல்லா சடங்கும் முடிந்தது. வீட்டை சுத்தம் செய்யும் போது இந்தக் கடிதம் என் கைக்குக் கிடைத்தது.அங்கிள் கடிதம் எழுதும்போது இந்தக் கடிதம் டேபிள் மேல்தான் இருந்திருக்கவேண்டும்.இதை அங்கிள் வாசித்திருப்பாரா?...தெரியவில்லை.என்ன மாதிரி அடர்த்தியான காதல் இது. வாழ்க்கையில் எதையும் நாம மிஸ் பண்ணிடக் கூடாது பாப்பு.இவங்களை நெனைச்சா சந்தோஷமா இருக்கு. ஆனா இப்பொ மனசு முழுக்க வெறுமையா இருக்கிறது நிஜம்.அழுது வீங்கின கண்களுடன் பாப்பு என் நெஞ்சில் முகம் புதைத்து தூங்கிக் கிட்டிருக்கா. இவளை நான் எப்படி காதலிக்கப் போறேன்? யெஸ்... ஆன்ட்டி கட்டிப்புடிச்சுத் தூங்கின அந்த ஹனிமூன் கிஃப்ட். அது என்னவாயிருக்கும்? "


கனத்த இதயத்துடன் தன் டைரியை மூடிய படி, பாப்புவை தலையணையில் கிடத்திவிட்டு , அரை வெளிச்சத்தில் அந்த கிஃப்டை தேடத்துவங்கினான் விஷ்வா.

பின் குறிப்பு : இது வெளியூர்காரன் எழுதிய மீ டூ சைந்தவி யின் தொடர்ச்சி. அவனைக் கேட்காமலே அவனுடைய சைந்தவி பற்றி எழுதியதற்கு அவன் என்னை மன்னிக்க வேண்டும். தொடர் பதிவு , தொடர் சிறுகதை என்றெல்லாம் சொல்லி உங்களை துன்புறுத்த விரும்பவில்லை. நண்பனின் மேலும் அவனுடைய படைப்பின் மேலும் உள்ள உரிமையில் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனம் செய்திருக்கிறேன். இந்தக் கதையையும் யார் வேண்டுமானாலும் தொடரலாம் வெளியூர்காரனின் அனுமதியோடு

அட்ரஸ் மாறிப்போச்சு மிஸ்டர் பட்டாபட்டி!


முன் குறிப்பு :

யோவ் பட்டாபட்டி !யாரோ ரெண்டு பேர் உனக்குப் போட வேண்டிய லெட்டரை எனக்கு அனுப்பிச்சிட்டாங்கய்யா..கொஞ்சம் என்னன்னு பாரு!

************************************************************************************************
லெட்டர் 1


அன்புள்ள பட்டாபட்டிக்கு,

வணக்கம். இதுவரைக்கும் தமிழ் சினிமா பயங்கர கறுப்பா நிறைய பேரை பார்த்திருந்தாலும் கறுப்பா பயங்கரமா இருக்கிறது நான் மட்டும் தான். பத்து வருஷத்துக்கு ஒரு முறை என் படம் எதுனா சூப்பர் ஹிட் ஆயிடும், அதுவும் என்னால இல்ல. எவனாச்சும் நல்ல டைரக்டர் நல்ல கதையோட சிக்கிருப்பான்.

தொப்புள்ல பம்பரம் மட்டுமே விட தெரிஞ்ச என்னை ரிக்கி பான்டிங், தோனி ரேஞ்சுக்கு கேப்டன்னு கூப்பிட்டு என்னை நம்பியும் முட்டாப் பசங்க ரசிகர் மன்றம் வச்சு வாழ்ந்துகிட்டிருந்தாங்க.அவனுகளோட அரசியல் ஆசைல மண் அள்ளிப் போடக்கூடாதேங்கிற நம்பிக்கைல நானும் கட்சி ஆரம்பிச்சேன். பாருங்க பட்டாபட்டி சார் அன்னிலேருந்து எனக்கு கிரகம் ஸ்டார்ட் ஆயிடுச்சு! கிரகத்துக்கு ஒரே ஒரு சீட் ஜெயிச்சு எம்.எல்.ஏ வும் ஆயிட்டேன்.திடீர்னு ஒரு நாள் என் கல்யாண மண்டபத்தை இடிச்சுப் போட்டு என்னையே ஒன் வே ல போக வச்சுட்டானுங்க!

என் கட்சிக்கார பயலுக ஒரு தடவ என் படத்தைப் பார்த்திருந்தாலே ஒவ்வொரு படமும் 100 நாள் ஓடிருக்கும்.ஆனா அவனுகளும் தெளிவாதான் இருந்திருக்கானுங்க.

பார்லிமெண்டுக்கு தேர்தல் நடந்தப்போ என்னை நம்பியும் என் கூட கூட்டணி வச்சிக்கலாம்னு சில கேனப் பயலுக சுத்திக்கிட்டு இருந்தானுக. அவனுகளையும் எகத்தாளமா கழட்டி வுட்டுட்டேன். மக்களை நான் தப்பா கணிச்சுட்டேனா இல்லை அவங்க என்னை சரியா புரிஞ்சுக்கிட்டாங்களான்னு தெரியலை..சமீப காலமா நாங்க டெபாசிட்டே வாங்கறதில்ல!நானும் என் அண்ணியும்...சே..தொண்டர்களோட அண்ணியும் , என் மச்சானும் சேந்து குடும்ப அரசியல் பண்ணக் கூடாதுன்னு முடிவு பண்ணினோம். ஒண்ணும் வேலைக்கு ஆகல! வர்ற தேர்தலுக்கு சுப்பிரமணிய சாமி கட்சி கூட என்னோட கூட்டணி வைக்க மாட்டானுங்க போல தெரியுது!

இப்போ நான் என்ன செய்யலாம் பட்டாபட்டி சார்? கௌரவமா கட்சியை கலைச்சிட்டு மதுரைக்குப் போய் ரைஸ்மில் நடத்தலாமா..? இன்னுமொரு பத்து வருஷம் வெய்ட் பண்ணி ஒரு ஹிட் படம் குடுக்கலாமா..என் வாழ்க்கைல ஒரு ஒளி ஏத்தி வைங்க பட்டாபட்டி சார்

இப்படிக்கு

தமிழ் சினிமாவின் நிரந்தர போலீஸ் ஆபீசர்



















************************************************************************************************************

லெட்டர் 2

மிஸ்டர் பட்டாபட்டி..

எனக்க்கு யார்கிட்டயும் எப்பவும் ரெக்வெஸ்ட் பண்ணிப் பழக்கமில்ல. ஆனா நீங்க எல்லாத்துக்கும் சொல்யுஷன் சொல்லுவீங்களாமே. நான் அந்த காலத்து கான்வென்ட் கேர்ல். நல்லா டான்ஸ் பண்ணுவேன். நல்லா நடிப்பேன். ரொம்ப வருஷமா எம்.ஜி.ஆர் கட்சியை அவர் செத்தப்புறம் நான் தான் மெய்ன்டெய்ன் பண்றேன்! தமிழ்நாட்டுக்கு ரெண்டு டெர்ம் சி.எம்மா இருந்திருக்கேன் . ஆனா பாருங்க பட்டாபட்டி இப்போ தமிழக மக்கள் ஒரு மைனாரிட்டி அரசால பயங்கர துன்பத்துல இருக்காங்க.You know what நான் ஒரு இரும்பு மனுஷி! எல்லாருக்கும் அம்மா. ஆனா எனக்கும் ரெஸ்ட் தேவை தானே..அதுக்காக கொடநாட்ல போய் ரெஸ்ட் எடுத்தா இந்த மைனாரிட்டி மீடியா ரொம்ப பேசறானுங்க. மைனாரிட்டி கூட்டணி கட்சிக் காரனுங்களும் வெளில வேற போக மாட்டேங்குறானுங்க.( ஸாரி..ஒவ்வொரு தடவையும் மைனாரிட்டி என்கிற வார்த்தை அதுவாவே சேந்துக்கும் ..கண்டுக்காதீங்க)

எல்லாத்துக்கும் மேல என் கட்சி எம்.எல்.ஏக்கள் எல்லாம் சேந்து குரூப் குரூப்பா மைனாரிட்டி ஆளுங்கட்சில சேந்து எங்களையே மைனாரிட்டி எதிர்க்கட்சி ஆக்கிடறானுங்க. இந்த மைனாரிட்டி எஸ்.வி.சேகர் வேற ஆளுங்கட்சி கூட்டத்துக்குப் போய் அடிக்கடி மானத்தை வாங்கறார். விலைவாசியை எதிர்த்துப் போராடலாம்னா காங்கிரஸ் கோவிச்சுக்கும். ராமதாஸ் கட்சியோட கூட்டணி வச்சிக்கிறதுக்கு பதிலா நான் திரும்ப சினிமாவிலேயே நடிக்கப் போயிடுவேன். பா.ஜ.க அட்டர் வேஸ்ட். வைகோவையும் கம்யூனிஸ்ட்களையும் துரத்திவிட்டாலும் போக மாட்டேங்குறாங்க.

சிங்கபூர்ல ஹோட்டல் என்ன ரேட் போகுது...? சாரி பழக்க தோஷம். இப்போ நான் என்ன பண்ணலாம் பட்டாபி? யோசிச்சு நிதானமா எங்கயாவது போய் ஆறு மாசம் ரெஸ்ட் எடுத்து பொறுமையா சொன்னாக் கூட போதும். ஏதாவது ஏடாகூடமா பதில் சொன்னீங்கன்னா அடுத்த ஆட்சில நடு ராத்திரில தூக்கிடுவேன் ஜாக்கிரதை!

இப்படிக்கு

இத்ய தெய்வம் டாக்டர் பொதுச்செயலாளர் புரட்சி தலைவி etc etc....


ஹோசான்னா ! விண்ணைத் தாண்டி வந்தாச்சே


தமிழ் சினிமாவுக்கு நல்ல பேய் ஏதாவது பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறதா என தெரியவில்லை. வித்தியாசமான Genre படங்கள் வெளிவந்து எல்லாரையும் தியேட்டருக்குள் இழுக்கின்றன. ஒரு ஃபான்டஸி ஃபிக்ஷன், ஒரு வங்கி கொள்ளை, ஒரு spoof ,கோவா என படங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை! சமீபத்தில் அப்படி ஆச்சர்யப் படுத்தியது விண்ணை தாண்டி வருவாயா என்னும் ஒரு புதுக்கவிதை.

மழை நேரத்தில் ஸ்பென்ஸர் பிளாசா வாசலில் உட்கார்ந்து கொண்டு காதலியுடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல படம் நெடுக ஒரு சாரல் அடித்துக் கொண்டே இருந்தது. கௌதம் நல்ல படம் எடுக்கிறாரோ இல்லையோ , காதலை வெறி கொண்டு ரசித்திருக்கிறார். காதலின் தோல்வியை படு எதார்த்தமாக திரையில் சித்திரம் வரைந்திருக்கிறார்.

கௌதம் நிச்சயமாக ஏதோ ஒரு கேட்டில் நின்று கொண்டு ரசிக்க ரசிக்க சைட் அடித்திருக்க வேண்டும்! அவரது முதல் காதல் அமெரிக்கா பறந்திருக்க வேண்டும். ஏதோ ஒன்று..நமக்கு நல்ல படம் கிடைக்கிறதே! இரண்டே கேரக்டர்கள்..பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.ஆனால் சலிப்பு தட்டவில்லை. காதலும் காதல் சார்ந்த இடங்கள் மட்டுமே லொகேஷன்களாக வருகின்றன.சொட்டச் சொட்டக் காதல், பொங்கி வழிகிற காதல் என ... கார்த்திக்கும் ஜெஸ்ஸியும் பல இடங்களில் சிக்ஸர் அடித்திருக்கிறார்கள்.ஒரு சில இடங்களில் டக் அவுட் ஆகியிருக்கிறார்கள்.

எங்கெல்லாம் படம் கிண்டலடிக்கப் படும் சூழ்நிலை இருக்கிறதோ அங்கு கௌதமே கிண்டல் செய்து கொள்வது புத்திசாலித்தனம். த்ரிஷாவின் funny walk ... த்ரிஷா கல்யாண சீன்கள் ...கடைசியில் படத்தின் ரிசல்ட் பற்றி பேசும் சீன்கள் எல்லாம் ஜாலி கேலிகள்.

மிகவும் ஆச்சர்யம் சிம்பு! குறிப்பாக அமெரிக்காவில் பார்க்கில் உட்கார்ந்து த்ரிஷாவிடம் பேசும் காட்சி.உங்களுக்கு இவ்வளவு நடிக்க வருமா சிம்பு? இதே போல நாலு படம் நடித்தீர்களானால் உங்களை ரசிப்பவன் என்று தைரியமாக வெளியில் கூறிக்கொள்ளலாம் உங்கள் ரசிகர்கள். அதே போல் ஒரே எக்ஸ்பிரஷனை வைத்துக்கொண்டு ஒப்பேற்றி வந்த த்ரிஷா மற்ற டைரக்டர்களுக்கு ஒரு செய்தி சொல்லியிருக்கிறார். வெறுமனே டூயட் பாட மட்டும் கூப்பிடாதீர்கள் என்பதே அது!

ஒளிப்பதிவும், காஸ்ட்யூம்ஸும் இசையும் பொருந்தியிருக்கிறது படத்துடன். ஆனால் , அமெரிக்கா , அந்த டான்ஸர்கள், கைகோர்த்துக் கொண்டு ஊர்சுற்றும் ஒரு டூயட் பாடல் என பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் தவிர்த்துவிடுங்கள் கௌதம்.சலிக்கிறது!

படத்தில் ஒரு விரசம் இல்லை, ஒரு முகம் சுழிக்கவைக்கிற காட்சிகள் இல்லை.இந்த படத்துக்கு ஏன் யூ/ஏ சர்ட்டிஃபிகேட் கொடுத்தார்கள் என தெரியவில்லை. சில முத்தக் காட்சிகள்..அதுவும் ராணி 6 ராஜா யாரு பார்க்கும் தமிழ் நெஞ்சங்களுக்கெல்லாம் இது ஜுஜுபி. நம் சென்சார் அதிகாரிகளுக்கு வரலாற்று ரீதியாகவே ஏதோ பிரச்சினை போல.

எத்தனையோ ரயில் கிளைமாக்ஸ் படங்களை ஆதரித்த தமிழ் ரசிகர்கள் இந்த படத்தின் கிளைமேக்ஸுக்காகவும் நிச்சயம் ஆதரிப்பார்கள்.

Congrats to Karthik, Jessy and Gowtham!